"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" - 'போக்கிரி' பட இயக்குநர் பற்...
"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி
ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவருடைய உடல்நிலை பற்றி நடிகரும், பவன் கல்யாணின் சகோதரருமான சிரஞ்சீவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை முடித்துள்ள கல்யாண் பாபு (பவன் கல்யாண்) தற்போது நல்லபடியாக மீண்டு வருகிறார்.
மருத்துவர்களின் தகவலின்படி, அவர் மீண்டும் வழக்கமான செயல்களுக்குத் திரும்ப சுமார் ஒரு வாரம் ஆகலாம். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை. உங்களின் அன்பிற்கும், அக்கறைக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
அவரைத் தொடர்ந்து நமது நினைவுகளில் வைத்து அவருக்கு வலிமை, ஆறுதல் மற்றும் விரைவான குணமடைதலை வேண்டுவோம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஜனசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "வெள்ளிக்கிழமை காலையில் நிர்வாகம் தொடர்பான விஷயங்களைப் பற்றி கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது பவன் கல்யாண் அவர்களுக்குக் கடுமையான உடல் அசௌகரியம் ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலச் சவால்களை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில், அவரின் தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைப்படி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளை ரத்து செய்து மருத்துவமனைக்குச் சென்றார்.

ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரையிலான ஓய்விற்குப் பிறகு, அவர் மீண்டும் தனது அலுவலகப் பணிகளைத் தொடரலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், நீண்ட காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் கூடுதல் காலம் ஆகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


















