மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்க லட்சக்கணக்கில் செலவு செய்து பவுன்சர்களை நியமித்த பெற்றோர்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 வயது பெண் எப்போதும் மொபைல் போனில் மூழ்கியபடி இருந்தார். அவர் எப்போதும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பார். திடீரென சமூக வலைத்தள நண்பர்களைத் தேடி சென்றுவிடுவார்.
இது அப்பெண்ணின் பெற்றோருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது மகளை மொபைல் போன் பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. அவர்கள் தங்களது மகளை கவுன்சிலிங் அழைத்துச் சென்றனர். அதுவும் பயனளிக்கவில்லை.

இது குறித்து அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர் வைஷ்ணவ் கூறுகையில், “மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், கட்டாயக் கட்டுப்பாடும் ஒரு தேவையாக மாறியுள்ளது. மொபைல் போன்களைச் சார்ந்து இருப்பதைக் கடக்க இளம்வயதினருக்கு ஒன்று முதல் நான்கு மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டிய கடுமையான சிகிச்சையை நாங்கள் காண்கிறோம்.
போதைப்பொருள் மற்றும் மதுவைப் போலவே, இது ஒரு புதிய வகை தீவிர போதை பழக்க வழக்கங்களாக மாறியுள்ளது. அங்கு வழக்கமான முறைகள் பெரும்பாலும் வேலை செய்யாது,” என்று கூறினார்.
அந்தச் சிறுமியின் மொபைல் போதை மறுவாழ்வுச் சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களது பெற்றோர் இப்போது பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்களை நியமித்து தங்களது மகளைக் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில், கடந்த சில மாதங்களாகத் தங்கள் குடும்பம் பாதுகாவலர்களுக்கு (Bouncers) பணம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
மொத்தம் 4 பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
இதே போன்று சூரத்தில் 17 வயது சிறுவன் மொபைல் போனுக்கு அடிமையாகி இருக்கிறார். இந்த சிறுவன் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடுத்தால் உடனே ஆக்ரோஷமாகிவிடுகிறார். இதனால் அவர் கோபத்தில் வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாயை அடிக்க ஆரம்பித்து விடுகிறார்.
இதனால் அவரிடமிருந்து நாயைக் காப்பாற்ற அவரது பெற்றோர் 8 பவுன்சர்களைப் பணியில் நியமித்து இருக்கின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் அந்த சிறுவனிடமிருந்து நாயைப் பாதுகாத்து வருகின்றனர். மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதை அவரது தந்தை தட்டிக்கேட்டால் உடனே ஆக்ரோஷமாகி தந்தை மிகவும் அன்பு வைத்திருக்கும் நாயைத் தாக்க ஆரம்பித்து விடுவார்.
இது குறித்து பவுன்சர்கள் ஏஜென்சி நடத்தி வரும் யாசின் மாலிக் கூறுகையில், ''எதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அவதிப்படும் இளம் வயதினரைப் பாதுகாப்பது ஒரு புதிய வகை தேவையாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ரசாயன போதைப்பொருள் பயன்படுத்தி மறுவாழ்வு சிகிச்சை பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைப் பாதுகாக்க நாங்கள் பவுன்சர்களை அனுப்பி அனுப்பி இருந்தோம்.

அந்த இளைஞன் மீண்டும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தாத வகையில், அவர் ஒருபோதும் தனியாக விடப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பணி அந்தப் பாதுகாவலர்களிடம் (Bouncers) ஒப்படைக்கப்பட்டது.
எட்டு மணி நேர ஷிப்ட் ஒன்றுக்கு, ஒரு பாதுகாவலருக்கு ஒரு நாளைக்கு ரூ. 1,500 அக்குடும்பங்கள் செலுத்துகின்றன. இப்போது தங்கள் ஊழியர்களுக்கு ரகசியத்தைக் காக்கவும், குழந்தைகளைக் கவனமாகக் கையாளவும் பயிற்சி அளித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.


















