"மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது"- விஜய் குறித்...
"மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது"- விஜய் குறித்து தமிழிசை
இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே 'இந்தியா டுடே - சி வோட்டர்' இணைந்து நடத்திய சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் வெளியாகி இருந்தன.
இதில் தவெக தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பிரபல பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்திருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் இதுதொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "தமிழக முதலமைச்சருக்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பை மக்கள் கொடுத்திருக்கின்றனர். அந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அவர்கள் கட்சியினரும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. ஏன்னென்றால் மோடி அவர்கள் மக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மட்டுமல்லாமல், அதற்கு முன்பாகப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்து, மொத்தம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் நெடுங்கால அரசியல் அனுபவத்தைப் பெற்றவர் என்பதால் அவருக்கு இணையாக யாரையும் பேசக்கூட முடியாது.

முதலமைச்சர் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த வேலையை அவர் முழுமையாக சரியாக செய்ய வேண்டும். பிரதமருக்கு வட மாநிலம், தென் மாநிலம் என்பதெல்லாம் கிடையாது.
தென் மாநிலங்களின் மீது அக்கறை கொண்டவர். எனவே மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.













