செய்திகள் :

``ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் வரணும்'' - வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட 23 வயது இளைஞர்

post image

`ரயில்வே தேர்வு வழிகாட்டி' நூலை தமிழில் உருவாக்கி, திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு 60 ஆயிரம் மதிப்புள்ள அந்த நூலை இலவசமாக வழங்கினார் 23 வயது இளைஞர் திருஞானசம்பந்தர்.

இதைப் பற்றி கேட்ட போது அவர் பேசுகையில்,

"தமிழ்நாட்டில் பொதுவாக ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ரயில்வே பணிக்கு யாருமே விண்ணப்பிப்பதில்லை.

போட்டித் தேர்வு
ரயில்வே போட்டித் தேர்வு

அந்த நிலையை மாற்றுவதற்காக, சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த இளைஞர் பாண்டுரங்கன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நானும் அவருடன் இணைந்து முயற்சித்தேன்.

நான் 10, 12ஆம் வகுப்பு பள்ளி பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். எனக்கு ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்பது இலக்காக இருந்தது. அதற்காக பாண்டுரங்கன் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று நினைத்து அவருடன் சேர்ந்தேன்.

ரயில்வே தேர்வுகளின் முக்கியத்துவம், மத்திய அரசு வழங்கும் சலுகைகள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்காக தங்களை எப்படி தயார்படுத்துவது போன்ற விஷயங்களை தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐக்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு பரப்புரை செய்து வந்தோம்.

எங்களுடைய முக்கிய நோக்கம் டிஎன்பிஎஸ்சி போல ரயில்வே பணிக்கும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான்.

ரூ 60 ஆயிரம் புத்தகம்

ரயில்வே பணியை இலக்காகக் கொண்டு செயல்பட்ட நான் தமிழ்நாட்டு மாணவர்களும் ரயில்வே பணிக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கி வந்தேன்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளில் ரயில்வே தேர்வில் வினாவை சேகரித்து முக்கியமான கேள்விகளை எடுத்து பெரும் முயற்சிக்கு பிறகு பாண்டுரங்கனுடன் இணைந்து இணைந்து "ரயில்வே கணிதம்" என்ற ரூபாய் 600 மதிப்புள்ள ரயில்வே தேர்வு வழிகாட்டி நூலை வெளியிட்டேன்.

அதனை அனைவரும் பயன்பெறும் வகையில் எனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு இலவசமாக வழங்கினேன். இதுவே எனது முதல் வெற்றியாக இருந்தது.

பாண்டுரங்கனுடன் திருஞானசம்பந்தர்
பாண்டுரங்கனுடன் திருஞானசம்பந்தர்

"100 படிகள் இலவசமாக வழங்கியுள்ளோம்"

தமிழ்நாட்டு மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி மட்டுமே இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எல்லாரும் ரயில்வே தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக நானும் பாண்டுரங்கனும் இணைந்து இந்த"ரயில்வே கணிதம்" நூலை உருவாக்கினோம்.

தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரயில்வே, எஸ் எஸ் சி, வங்கி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள் அதிகளவு உள்ளன. கல்லூரி படிக்கும் போது போட்டி தேர்வுகளுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இந்த ரயில்வே கணிதம் புத்தகத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் இதுதான் எங்க ஆசை!

ரயில்வே கணிதம்:

திண்டுக்கல் அருகில், சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நூலகங்களுக்கு எங்களுடைய ரயில்வே கணிதம் நூலை இலவசமாக வழங்கியுள்ளோம். 3 மாதத்திற்கு முன்பு சேலம் அரசு ஐடிஐயில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம்.

எங்களது ரயில்வே விழிப்புணர்வு பேச்சை கேட்ட பிறகு, சேலம் மாவட்ட மாணவர்கள் ரயில்வே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான வசதிகளை தற்போது அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு ஐடிஐ-யில் பயிலும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் என்று சுற்றறிக்கைகளை அனுப்பி எங்களை ஊக்குவித்தனர்.

இனிய வழியில் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு போட்டி தேர்வு விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களது வெற்றி:

தொடர்ந்து பேசிய திருஞானசம்பந்தர், நானும் பாண்டுரங்கனும் தற்போது கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.

நான் ரயில்வே பணிக்கு போக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். இன்னும் நான் ரயில்வே பணிக்கு போகவில்லை. ஆனா என்னால மத்த இளைஞர்கள் ரயில்வே பணிக்கு போகிறார்கள் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே துறை பணிகளை கைப்பற்றுவதுதான் எங்களுடைய இந்த முயற்சிக்கான வெற்றியாக அமையும்" என்று கூறினார்.