`வருவாய்'- கிராமி விருது போட்டியில் நுழைந்த முதல் தமிழ்ப் பாடல்: தேவன் ஏகாம்பரம்...
`வருவாய்'- கிராமி விருது போட்டியில் நுழைந்த முதல் தமிழ்ப் பாடல்: தேவன் ஏகாம்பரம் - சுஷா நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுஷா ஆகியோரின் கூட்டணியில் உருவான 'வருவாய்' (Varuvaaiy) என்ற பாடல், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 2027-ம் ஆண்டிற்கான 69-வது கிராமி விருதுகளின் 'சிறந்த உலகளாவிய இசைப் படைப்பு' (Global Music Performance) பிரிவில், ஷகிரா, பர்னா பாய் மற்றும் ரோசாலியா போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பாடல்களுடன் மகாகவி பாரதியாரின் பாடலும் போட்டி போடுகிறது. இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுஷா இருவருக்கும் இதுவே முதல் கிராமி பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியாரின் பாடலைப் பாட தேர்ந்தெடுத்தது குறித்துப் பில்போர்டு இந்தியா (Billboard India) இதழுக்குப் பேட்டியளித்த பாடகி சுஷா, ``பாரதியாரின் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. ஆனால், அவருடைய பாடல் ஒன்றைச் செய்ய வேண்டும் என தேவன் ஏகாம்பரம் கூறியபோது, வழக்கமான பாடலாக இல்லாமல் சற்று வித்தியாசமான ஒன்றைத் தேட விரும்பினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு என் தாயார் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் இது. நேற்று கிராமி பரிந்துரைகள் அறிவிக்கப்படும் நாள் என்பதே என் நினைவில் இல்லை. எனக்கு அது வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது. திடீரென என் செல்போனில் வாழ்த்துச் செய்திகள் குவியத் தொடங்கியதும், தேவனுக்கு அழைத்து என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறினேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம், ``கர்நாடக இசைப் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களும் விரும்பிக் கேட்கும் வகையில், கர்நாடக இசையை எளிமையாகவும், நவீனமாகவும் மாற்ற விரும்பினேன். பாரதியார் கண்ணனைப் பற்றி மட்டும் எழுதவில்லை. அவருடைய தமிழ் மொழியின் அழகிற்காகவே அவர் அறியப்பட்டவர். சர்வதேச மேடையில் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்க வேண்டும் என்றால், அது இந்தப் பாடலாக இருப்பதில் எனக்குப் பெருமை. இந்தப் பாடலுக்கு சுஷா மிகவும் நவீனமான உணர்வைக் கொடுத்துள்ளார். பாடலின் இறுதியில் 'கண்ணா' என்ற வார்த்தையைப் பல விதமான பாவனைகளுடன் அவர் மீண்டும் மீண்டும் பாடியிருப்பார். இன்றளவும் அந்தப் பகுதியைக் கேட்கும்போதெல்லாம் எனக்குக் கண்ணீர் வந்துவிடும்.
இந்தப் பாடலுக்குப் 'பென்டடோனிக்ஸ்' (Pentatonix) இசைக்குழுவின் ஸ்காட் ஹோயிங் மற்றும் இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டன் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் செய்திகள் வந்தன. இசை மொழி, கலாசார எல்லைகளைக் கடந்து சென்றிருப்பது மகிழ்ச்சி . கிராமி விருதுக்கு கடந்த காலங்களில் வெவ்வேறு பிரிவுகளில் 3 முதல் 4 பாடல்களை அனுப்புவேன். அப்போது கிராமி வென்ற ஒருவர், 'எல்லாவற்றிலும் கைவைக்காதீர்கள், ஒரே ஒரு பாடலுக்கு அனைவரையும் வாக்களிக்க வையுங்கள்' என்று அறிவுரை கூறினார். அதன்படியே இந்த ஒரு பாடலை மட்டும் அனுப்பினோம். 526 பாடல்களில் எங்கள் பாடல் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்றார்.

















