Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்க...
விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யால் மகளுக்கு ஏற்பட்ட சோகம் - கதறிய கணவன்; கத்தியுடன் சிக்கிய தந்தை
தெருவை உலுக்கிய அலறல் சத்தம்
விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு சுமலதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
அதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் உட்பட பல மருத்துவமனைகளுக்குச் சென்றார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிகிச்சைகளை எடுத்து வந்திருக்கிறார். அப்படியும் அவருக்கு நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கண்டமங்கலத்திலுள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்த சுமலதா, அங்கேயே தங்கி சிகிச்சைகளை எடுத்து வந்திருக்கிறார்.
தினமும் காலையில் மனைவியுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்த கோதண்டராமன், கடந்த 19.01.2026 அன்று மனைவியை மட்டும் செல்லுமாறு கூறியிருக்கிறார். அப்போது சுமலதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென கோதண்டராமன் வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. காலையில் 7 மணி என்பதால் அந்த அலறல் சத்தம் தெரு முழுவதும் எதிரொலித்தது. அதனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கோதண்டராமன் வீட்டிற்கு ஓடிச் சென்றிருக்கின்றனர்.
``கொலைக்கான காரணம்...”
அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் படுக்கையில் சடலமாகக் கிடந்திருக்கிறார் சுமலதா. அந்த அறை முழுக்க ரத்தம் தெறித்திருந்த நிலையில் கையில் கத்தியுடன் நின்றிருந்த கோதண்டராமன், தன்னுடைய கழுத்தை அறுக்க முயற்சித்திருக்கிறார்.
அவரிடமிருந்த கத்தியைப் பிடுங்கிய அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டமங்கலம் போலீஸார், சுமலதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து ஓடிவந்த சுமலதாவின் கணவர் மணிமாறன், சடலமாக கிடந்த மனைவியைப் பார்த்து கதறியழுதார்.

அதேபோல கோதண்டராமனை பிடித்த போலீஸார், அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``கோதண்டராமான் ஓய்வுபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சுமலதாவுக்கு 33 வயதுதான் ஆகிறது.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மகள் சிரமப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகக் கூறியிருக்கிறார் கோதண்டராமன்.
ஆனாலும் இந்தக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது குறித்து சுமலதாவின் தாய் மற்றும் கணவரிடம் விசாரணை செய்து வருகிறோம். அந்த விசாரணை முடிவில்தான் உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

















