`காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்' - தம...
'வீடு/நிலம் வாங்கியதும் உட்கார்ந்திராதீங்க; உடனே செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன? | பணம் வளர்ப்போம்
நிலம் அல்லது வீட்டைப் பார்த்தாகிவிட்டது. ஆவணங்களையும் சரிப் பார்த்தாச்சு. எல்லாம் சரியாக இருக்க, நிலம் அல்லது வீட்டை வாங்கிவிட்டோம்.
'அப்பாடா' என்று இப்போது உட்கார்ந்துவிடக் கூடாது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது.
அந்த வேலைகள் என்னென்ன என்பதை வரிசையாக அடுக்குகிறார் பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.
நிலம் அல்லது வீடு!
"வீடு அல்லது நிலம் வாங்கிய உடன், அதை நாம் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும். 'கொஞ்ச நாள் கழித்து' என்று அசால்டாக இருந்தால், நமக்குதான் பிரச்னை.

வீடு அல்லது கட்டடம் வாங்கியிருந்தால், அதனுடைய அத்தனை சாவிகளையும் கேட்டுப் பெற்றுவிடுங்கள்.
நிலம் வாங்கியிருந்தால், எல்லைக் கற்களைச் சரியாக நட்டுவிடுங்கள். ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க, முடிந்தால் காம்பவுண்ட் சுவர் அல்லது கம்பி வேலி அமைப்பது சூப்பர்.
சட்ட விரோதமாக குப்பைகளைக் கொட்டுவதையும், ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் நிலம் அல்லது வீட்டில் உரிமையாளரின் பெயர் பலகையை வைத்துவிடுவது நல்லது.
ஆவணங்கள்...
ஆவணங்களின் பக்கம் வந்துவிட்டால், முந்தைய மூல ஆவணங்கள் மற்றும் தற்போதைய உரிமை மாற்ற ஆவணங்கள் (விற்பனை ஒப்பந்தம், கட்டுமான ஒப்பந்தம், கிரயப் பத்திரம், முத்திரைத் தாள் மற்றும் கட்டண ரசீதுகள்) அனைத்தையும் அந்தந்த சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.
இந்த அசல் ஆவணங்களை தீ மற்றும் கரையான் பாதிக்காத பாதுகாப்பான லாக்கர்களில் வைத்துவிடுவது புத்திசாலித்தனம்.
டிஜிட்டல் அப்டேட்டாக அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து, அதன் டிஜிட்டல் நகல்களை ஒரு பேக்கப் ஹார்ட் டிஸ்க் அல்லது கூகுள் டிரைவ்/கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்க வேண்டும்.
ஆவணங்கள் விஷயத்தில் செய்யப்படும் பொதுவான தவறு - அசல் பத்திரங்களை லேமினேஷன் செய்வது. இதைச் செய்தால், பிற்காலத்தில் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படும்.
காப்பீடு மற்றும் நிதி
எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தீ விபத்து, கட்டிடக் கட்டமைப்பு சேதம் மற்றும் இயற்கை பேரிடர்களிலிருந்து (வெள்ளம், நிலநடுக்கம்) பாதுகாக்க முறையான இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.
புரோக்கரேஜ் கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் போன்றவற்றை இழுத்தடிக்காமல் உடனடியாகக் கட்டிவிடுங்கள்.
மூலதன ஆதாய வரி கணக்கீடு மற்றும் வரி செலுத்துதலை முடிக்க வேண்டும் அல்லது வருமான வரிச் சட்ட விதிகளின்படி அதற்கான மறுமுதலீட்டு வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ள ஆடிட்டர்களிடம் பேசுங்கள்.
பெயர் மாற்றம்
வீடு அல்லது நிலம் வாங்கிய கையோடு
> பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அ-பதிவேடு (A-Register),
> சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் கட்டணப் புத்தகங்கள்,
> மின்சார வாரியத்தில் (EB) மின் இணைப்பு
ஆகியவற்றில் உங்களுடைய பெயரை மாற்றிவிடுங்கள்.
இதையெல்லாம் செய்த பின், பத்திரப் பதிவு மற்றும் பெயர் மாற்றம் சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை செக் செய்ய புதிய வில்லங்கச் சான்றிதழைப் போட்டுப் பார்த்துவிடுங்கள்.

அப்பார்ட்மென்டில் குடியேறுபவர்கள் அங்கு இருக்கும் குடியிருப்போர் நலச் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துவிடுங்கள். அப்போதுதான் அங்கே நடக்கும் நல்லது, கெட்டது, நடைமுறைகள், விதிமுறைகள் என அனைத்தும் உங்களுக்குத் தெரியவரும்.
உங்களுடைய பார்க்கிங்கை 'கொஞ்சம் நாளைக்கு' என யாருக்கும் விட்டுவிட வேண்டாம். அது எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் பின்னாளில் பிரச்னையைத் தவிர்க்கும்.
சங்கத்தின் கார்பஸ் ஃபண்ட் உங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள்".


















