நல்லகண்ணு: "மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி" ...
`ஸ்டால் ஒதுக்கீடு டு கொலாபரேஷன்..!' - - பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை!
ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுடன் சேர்ந்து ஸ்கேம்களும் புதிய வடிவம் எடுத்து வருகின்றன.
'ஸ்டால்கள் அமைக்க இடம் தருகிறோம்' என்பது தொடங்கி, கொலாபரேஷன் வரை ஏகப்பட்ட ஸ்கேம்களை சிறு,குறு தொழில் செய்பவர்கள் சந்திக்கிறார்கள். புதிதாக பிசினஸ் தொடங்கிய எல்லோருக்கும் தனது பிசினஸை வளர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும், அந்த பதட்டத்தில் அவசர அவசரமாக செயல்பட்டு சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள்.
சிறு, குறு தொழில் செய்பவர்கள் எதில் விஷயத்தில் எல்லாம் அலார்ட்டாக இருக்க வேண்டும் என்று பிசினஸ் ஆலோசகர் சாமுவேல் மேத்யூவிடம் பேசினோம்.

பேமென்ட் ஸ்கிரீன்ஷாட் ஸ்கேம் :
'பணம் அனுப்பிட்டேன்' என்று போலியான UPI ஸ்கிரீன்ஷாட் அனுப்பி பொருளை எடுத்துச் செல்வது சாதாரண விஷயமாகிவிட்டது. சிறு வியாபாரிகள் நம்பிக்கையால் பொருள் கொடுத்து விட்டு, பணம் வராததை பிறகு தான் அறிகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு – ஸ்கிரீன்ஷாட்டை நம்பாமல், வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்ததா என்று உறுதி செய்வது நல்லது.
ரிட்டர்ன் மோசடி :
அமேசான், மிசோ,ஃப்ளிக்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பொருள்களை விற்கும் நிறைய விற்பனையாளர்கள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் அனுப்பிய பொருளை வாடிக்கையாளர்கள் மாற்றி அனுப்பி, 'டேமேஜ்' என்று ஸ்கேம் செய்வதாக வீடியோக்கள் பதிவிடுகிறார்கள். விலை உயர்ந்த பொருள் வாங்கி, திருப்பி அனுப்பும் போது பழுதான அல்லது மலிவான பொருளை அனுப்புவது சிலர் செய்யும் தந்திரம்.
குறிப்பாக ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதனைத் தடுக்க பொருள் பேக் செய்யும் முன் வீடியோ பதிவு செய்து வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது நஷ்டத்தை தடுக்க உதவும். அதே போல வாடிக்கையாளர்களிடமும் அன்பாக்ஸ் வீடியோக கேட்டு வாங்குவது நல்லது.

ஸ்டால் மோசடி:
'எக்ஸிபிஷனில் ஸ்டால் தருகிறேன். கட்டணம் செலுத்துங்கள்' போன்ற மோசடிகளும் அதிகரித்துள்ளன. 'பெரிய கூட்டம் வரும்', 'நல்ல விற்பனை ஆகும்' என்று கூறி முன்பணம் வாங்கி, நிகழ்ச்சி சரியாக நடத்தாமல் போவது, மோசமான இடம் கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது. ஒப்பந்தம் இல்லாமல் முழு முன்பணம் கொடுப்பது மிகப்பெரிய அபாயம். ஒப்பந்தம் போடும் போது எத்தனையாவது கடை, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும், எந்த பிராண்ட் எல்லாம் ஸ்டால்களுக்கு வருகிறார்கள், பார்கிங் வசதி இருக்கிறதா? கழிப்பறை வசதிகள், ஏசி , பில்லிங்,வைஃபை போன்ற வசதிகள் இருக்கிறதா என்பதை செக் செய்து கையெழுத்திடுங்கள்.
ஆர்டர்களில் ஏமாற்றம்:
புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மொத்த ஆர்டர்களில் கூட சில நேரங்களில் ஏமாற்று வேலை இருக்க வாய்ப்பு இருக்கிறது. முதலில் 50, 100 ஆர்டர்கள் கொடுப்பார்கள். பணத்தை சரியாக செலுத்துவரகள். அதன்பின், ஆயிரக்கணக்கில் ஆர்டர் கொடுத்து, ஆர்டர் அவர்களை ரீச் ஆனதும் பணம் செலுத்துவதாக சொல்வார்கள். ஆர்டர் அனுப்பிய பின்னர் தொடர்பே இல்லாமல் போவார்கள். வெளிமாநிலங்களில் இருந்து முன்பணம் இல்லாமல் பொருள் அனுப்பச் சொல்லி, பின்னர் பணம் செலுத்தாமல் தவிர்க்கும் சம்பவங்கள் ஏராளம். குறைந்தது 50% முன்பணம் பெறாமல் பொருள் அனுப்ப மாட்டோம் என்பதில் எப்போதும் உறுதியாக இருங்கள்.

சோஷியல் மீடியா மோசடி:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையிலும் ஏமாற்றுகள் குறைவில்லை. 'ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள்', ஏகப்பட்ட லீட்கள் எடுத்து தருவதாக கவர்ச்சியான வாக்குறுதிகள் மூலம் பணம் வசூலித்து, எதிர்பார்த்த பலனை வழங்காமல் போவது சாதாரணம். அதே போல் கொலாபிரேஷன் என்ற பெயரிலும் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. ஒரு பொருளை கொலாபிரேஷன் செய்யக் கொடுக்கும் முன் அதனை எப்போது பயன்படுத்துவரகள், எப்போது வீடியோ பதிவிடுவார்கள், எத்தனை வீடியோக்கள் பதிவிடுவார்கள்? பொருள்களை திரும்பி தருவார்களா? எத்தனை நாள் அந்தப் பதிவு அவர்களின் தளத்தில் இருக்கும், என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். இயல்புக்கு மிஞ்சிய வாக்குறுதி வந்தால் அதில் எச்சரிக்கை அவசியம்.
கடனில் மோசடி:
அதேபோல் அரசாங்கத்தில் லோன் வாங்கித்தருகிறோம். நீங்கள் எதுவும் ஆவணங்கள் தரவேண்டாம். எங்கள் ஏஜென்ஸியே உங்களுக்கு லோன் வாங்கித்தருகிறோம் என்பார்கள். அதன் பின், ' லோன் அப்ரூவ்டு' என்று ஒரு பொய்யான டாக்குமென்ட்டை தயார் செய்வார்கள். அரசாங்கத்தில் பணம் ஒதுக்கீடு ஆகிவிட்டது. ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை பணம் செலுத்தினால் போதும், மொத்த தொகையும் வரவு வைக்கப்படும் என்று ஏமாற்றி ஐம்பதாயிரம், ஒருலட்சம் வனக்கிவிட்டு தலைமறைவு ஆகிவிடுவார்கள்.
இப்படியாக 'அரசு மானியம்', 'சிறப்பு கடன் திட்டம்' என்று கூறி செயல்முறை கட்டணம் வசூலிக்கும் போலி முகவர்களும் உள்ளனர். உண்மையான அரசு திட்டங்களுக்கு நேரடியாக வங்கி அல்லது அதிகாரப்பூர்வ தளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதே பாதுகாப்பான வழி. இந்த அனைத்து மோசடிகளுக்கும் ஒரே அடிப்படை காரணம் – சிறு தொழிலாளர்களின் நம்பிக்கை. வாடிக்கையாளரை இழக்கக்கூடாது, வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற அவசரம் பலரையும் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு வாய்ப்பும் சந்தேகத்துடன் அணுகப்பட வேண்டும். வாய்மொழி வார்த்தைகளை எதிலும் நம்பாதீர்கள்.

கிளைகளில் மோசடி:
ஒரு பிரபல நிறுவனங்களின் போலிப்பெயர்களை வைத்துக் கொண்டு, 'கிளைகள் உருவாக்கித்தருகிறோம்' என்று அறிவிப்புகள் தருவார்கள். ஆன்லைனிலேயே தொடர்பு கொண்டு திறனை சோதிப்பது போன்று பேட்டி எடுப்பார்கள். அதன்பின், கிளைகளுக்காக சில லட்சங்கள் கட்டணம் செலுத்தச் சொல்லுவார்கள். கட்டணம் செலுத்திய பின் தொடர்பே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். எனவே இது போன்று ஒரு நிறுவனத்தின் கிளைகளை நீங்கள் எடுத்து நடத்த விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பேசுவது நல்லது. தொகைகளை செலுத்தும் முன் ஒப்பந்தங்கள் செய்வது அவசியம்.
உங்கள் ஜி.எஸ்.டி எண் ரத்தாகிவிட்டது. மீண்டும் அதை ஆக்டிவேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்று போன் கால் மூலமும் நிறைய சிறு, குறு தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது போன்ற போன் கால்கள் வந்தால் முதலில் செக் செய்வது அவசியம்.

எல்லாவற்றையும் எழுதப்பட்ட ஒப்பந்தங்களுடன் அணுகுவது நல்லது. முன்பணம் இல்லாத பெரிய ஆர்டர் பாதுகாப்பானதல்ல. சரிபார்க்காமல் நம்புவது தொழிலுக்கு ஆபத்து. சிறு குறு தொழில்கள் நாட்டின் வளர்ச்சியின் அடித்தளம் என்றால், அவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பு. அதே நேரத்தில், தங்களது தொழிலை பாதுகாப்பது தொழில்முனைவோரின் விழிப்புணர்வும் கூட. லாபம் முக்கியம். ஆனால் பாதுகாப்பு அதைவிட முக்கியம்." என்று விரிவாக விளக்கினார்.
















