ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர...
ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர்!
``அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில் சிலர், வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர். அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் என்றும் தெரியவில்லை.
சாதாரண காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கூட நாள்கணக்கில் நீடித்தன... விளைவு, அந்தக் குழுவினரில் சிலர் மரணம் அடைந்தனர். அதாவது, அவர்களுடைய உடம்பில் மேலே சொன்ன சிறு சிறு பிரச்னைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகூட இல்லை.

என்னதான் பிரச்னை என்று ரத்த பரிசோதனை செய்துபார்க்க ஒரு புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ஹெச்.ஐ.வி என்றெல்லாம் இந்த உலகத்துக்கு தெரியாது. அதனால், ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைபாடு என்று பொருள்படும் (Gay-Related Immune Deficiency - GRID) என்று அழைக்கப்பட்டது’’ என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதன் பின்னர் என்ன நடந்தது, சென்னையில் எப்போது எய்ட்ஸ் கண்டறியப்பட்டது; எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இன்றைய மருத்துவ வளர்ச்சி உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசுகிறார்.
’’பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை வைத்து, ’Acquired immuno deficiency syndrome’ என்று அதைக் குறிப்பிட்டார்கள். Acquired என்றால், பிறக்கும் போதே வருகிற நோய் அல்ல; இது திடீரென்று வருகிற நோய் என்று அர்த்தம். immuno deficiency என்றால், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிற பிரச்னை என்று அர்த்தம். syndrome என்றால் அறிகுறிகள் என்று அர்த்தம். இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து, புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு AIDS பெயரிட்டார்கள்.

பிறகு, அந்த நோய்க்குக் காரணமான வைரஸுக்கு, Human immunodeficiency virus ( HIV) என்று பெயரிட்டார்கள். மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்று இதற்கு அர்த்தம். ஆரம்பத்தில் குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதினார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிற தேசம். அதனால் இங்கிருப்பவர்களுக்கு எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது இந்தியாவுக்குள் வருவதற்கு முன்னரே அமெரிக்காவில் அதற்கான மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், 1986 வரை இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை.

ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எய்ட்ஸ் விஷயத்தில் பதறிக் கொண்டிருந்தன. காரணம், அங்கு வி வி ஐ பி அந்தஸ்த்தில் இருந்த பல முக்கியஸ்தர்களும் இந்த வைரஸால் மடிந்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவிலும் எய்ட்ஸ் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுனிதி சாலமன் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். இவர் பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவருடைய கணவர் விக்டர் சாலமன் அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர்.
டாக்டர் சுனிதி சாலமன் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் தன் பாலின உறவுக்காரர்களிடமிருந்து 200 ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில் சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது. பிறகு, ஒரு பிரஸ் மீட் வைத்து அதை வெளிப்படுத்தவும் செய்தார் டாக்டர் சுனிதி சாலமன். அப்போதுதான் ஹெச்.ஐ.வி வைரஸ் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது’’ என்றவர், தொடர்ந்தார்.

’’வருடத்துக்கு 10 எய்ட்ஸ் நோயாளிகளையாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பாலியல் தொழில் செய்பவர்களால் அந்த அளவுக்கு பணம் கொடுத்து பெண்களுக்கான காண்டம் வாங்க முடிவதில்லை. ’எய்ட்ஸ் வரலாம்; இதை விட்டுவிடுங்கள்’ என்றாலும் ’இன்றைக்கு பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து பத்து வருடம் கழித்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். இது அவர்களுடைய துக்ககரமான நிலைமை.
பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, ரத்த தானம், கணவரிடமிருந்து மனைவிக்கு, தாயிடமிருந்து குழந்தைக்கு என எய்ட்ஸ் பரவுகிறது. தவிர, போதை பழக்கத்தில் இருப்பவர்கள் ஒருவர் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தும்போது எய்ட்ஸ் பரவும்; எய்ட்ஸ் வந்தவருக்கு பயன்படுத்திய ஊசியை அடுத்தவருக்கு பயன்படுத்தும்போது அவரும் பாதிக்கப்படுவார்.

எய்ட்ஸை பொறுத்தவரை பெரிய அளவுக்கு அறிகுறிகளே காட்டாது. ஒரு வாரத்துக்கு லேசான தொண்டை கமறல், விடாத காய்ச்சல் என்று ஆரம்பிக்கலாம். திடீரென்று 5 முதல் 10 கிலோ வரைகூட உடல் எடை குறையும். வயிற்றுப்போக்கு வந்தால் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பாதிக்கப்பட்டவர் பலருக்கும் பரப்பி இருப்பார்.
எயிட்ஸுக்கான மருந்துகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு 100 வயது வரைகூட வாழலாம். சொல்லப்போனால் டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம். அந்த அளவுக்கு மருந்துகள் தற்போது இருக்கின்றன என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒருவேளை திருமணம் தாண்டி ஒரு நபரிடம் உறவு கொண்டீர்கள் என்றால் 72 மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், எய்ட்ஸ் வராமல் தடுத்து விடலாம்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் ஹெச்ஐவி வைரஸ் ரத்தத்திலிருந்து போய்விடும். ஆனால், நம்முடைய செல்களுக்குள் இருக்கிற மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். ரத்தப்பரிசோதனையில் ஹெச்ஐவி இல்லை என்று காட்டும். அதை நம்பி மருந்துகளை நிறுத்தி விட்டால் ஆறு மாதம் கழித்து மறுபடியும் எய்ட்ஸ் வரும்.
இப்படி செல்களுக்குள் ஒளிந்து கொள்கிற வைரஸை கண்டுபிடிக்கவும் இப்போது ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான மருந்துகளும் இன்னும் ஐந்தாவது வருடத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று எய்ட்ஸுக்கு எதிரான நம்பிக்கைக் கொடுத்து பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.
















