'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் ...
அடுத்தது என்ன...?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வழக்கம் போல ஒரு மாறுபட்ட, சற்று வித்தியாசமான தலைப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சரி அடுத்தது என்ன...- இப்படி யோசிச்சு ரொம்ப நாளாச்சு. மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அது சோம்பேறி ஆயிடும். அதன் விளைவே இந்த கட்டுரை.
அடுத்தது என்ன... அடுத்தது என்ன... இப்படி சிந்தனை போய்க்கொண்டே இருந்தால் நமது மனம் புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பிக்கும். புதிய விஷயங்கள் நம்மைத் தேடி வரும். பூக்களை சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சி நம் அருகில் வந்து நலம் விசாரித்து செல்லும். நம் எண்ணங்கள் அதை கவர்ந்து இழுக்கிறது.

வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட்டு தினம் தண்ணீர் விட்டுப்பாருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஆரம்பிக்கும். அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கும். யார் அதற்கு சொல்லித் தருகிறார்கள். INBUILT ENERGY என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்று தாவரங்களுக்குள் இருக்கும். அது அவைகளை செயல்பட வைக்கிறது. அடுத்தது என்ன என்ற சிந்தனையே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடிக்க காரணமாகியது.
இந்த INBUILT ENERGY சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அபரிமிதமாக இருக்கும். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் செயல்படுவார்கள். மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் செயல்படுவார்கள். சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர். சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கைலாயத்தில் கூடிவிட்டதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து போனது.
உலகம் மீண்டும் சமநிலை அடைய தென்திசைக்கு இறைவனால் அனுப்பப் பட்டார் அகத்தியர். அவர் ஒருவர் மட்டும் அங்கு சென்றால் சமநிலை அடையும் என்று இறைவன் உலகுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார். அவருடைய INBUILT ENERGY எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

இந்த காட்சியை அகத்தியர் படத்தில் 'உலகம் சமநிலை பெற வேண்டும்' என்ற பாடல் மூலம் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் காட்டி இருப்பார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடினாரே அவரும் இந்த நிலையில் உள்ளவர்தான்.
கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி இவர்களுக்குள் இருந்த அந்த ENERGY பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. மெட்டு கொடுத்த அடுத்த வினாடியே அவர்களிடமிருந்து வரிகள் அருவி போல் கொட்டும். திரை இசை தாண்டியும் சாதித்துள்ளார்கள். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், வாலியின் பாண்டவர் பூமி , அவதார புருஷன் - காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்கள்.
திரைப்படங்களில் 'INTERVAL BLOCK ' என்று ஒன்று உண்டு. டைரக்டர்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடுவதுண்டு. அடுத்தது என்ன என்று இடைவேளை நேரத்தில் ரசிகர்களை சிந்திக்க விடுவதற்காக. டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கதையில் முடிச்சு போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வெற்றிகளைக் குவித்தார்.

நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் அது போன்ற சம்பவங்கள் வரும். பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது என்ன எடுப்பது... +2 முடித்ததும் நீட்டா...அல்லது இன்ஜினியரிங் அல்லது கல்லூரி படிப்பா...20 வயது முடியும் போது
மீண்டும் அடுத்தது என்ன என்ற கேள்வி வரும். படித்தது பிரபல தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அரசு வேலை தான் மனதில் முதலில் வந்து நிற்கும்.
18 வயது வந்ததும் அடுத்தது என்ன வந்து நின்று காதல் பற்றி சொல்லித் தரும். ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். காதலில் அடுத்தது என்ன என்ற தேடலில் தீவிரமாகி கல்யாணம் வரை சென்று விடுவார்கள். இரு வீட்டார் சம்மதத்துடனா...
ஒரு வீடு மட்டுமா..இரு வீட்டிலும் எதிர்ப்பா...அடுத்தது என்ன அங்கேயும் இடம் பெறும்.
அடுத்தது என்ன என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் LVM 3 (LAUNCH VEHICLE MARK 3) - இதன் செல்லப்பெயர் 'பாகுபலி' .
இந்த பாகுபலி ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் புளுபேர்ட் -2 செயற்கைக்கோள் (6,100 கிலோ எடை கொண்டது) டிசம்பர் 24 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும். உயரமான மலைகள் அடர்ந்த காடுகள் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவைகள் பெற முடியும். விண்வெளியில் செலுத்திய இந்த செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது.

நமது வாழ்க்கையில் 'அடுத்தது என்ன' என்பதை தெரிந்து கொள்ள நாம் ஆவலோடு இருப்போம்.
ஒவ்வொரு நாளும் நன்றாக விடிகிறது. புதுப்புது தேடல்களை தொடங்கி வைக்கிறது. நாள் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலை நிலைகளாக இருக்கும். அடுத்தது என்ன மட்டும் ஒரே நிலை...என்றும் நிகழ்கால நிலையில்...நாளை நமதே என்று வாலி அவர்கள் புரட்சித் தலைவருக்கு (படம் :'நாளை நமதே') பாடினார். அதற்கு மாற்றாக 'நாளை என்ன நாளை..
இன்று கூட நமது தான்' என்று கவியரசர் நடிகர்திலகத்துக்காக (படம் : 'அவன் ஒரு சரித்திரம்') பாடினார்.
இரண்டுமே நம்மை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள எழுதப்பட்ட பாடல்கள். இன்றைய தொடக்கம் நாளைய இமாலய வெற்றி.'அடுத்தது என்ன' கேள்வி மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும் வரையில் புதிய புதிய சாதனைகள் நம்மை நோக்கி அணிவகுத்து வரும்.
-திருமாளம் எஸ். பழனிவேல்


















