'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் ...
'அடேயப்பா... மிரட்டிட்டிங்களே!' - மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20-களுமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதுகளில் அழகாகின்றன.
பவர்பிளேல எந்தளவு ஒரு பௌலிங் படை சேதாரத்தை சந்திச்சுருக்குன்ற அடிப்படையில தான் டி20-ன் சுவாரஸ்யம் எப்போதும் அணுகப்படுது, அளவிடப்படுது. டி20-ல பௌலர்களுக்கு பேக் பெஞ்சர்ஸ் ரோல்தானே? சத்தமே வெளிய வராது. அதை சற்றே மாற்றி 44/3-ன்ற ராஜஸ்தானோட பவர்பிளே ஸ்கோர் போர்டும் சரி, வெறும் 3 ஓவர்கள்ல 16/3னு சோக பேக்ரவுண்ட் வாசிச்ச லக்னோவோட ஸ்கோர்போர்டும் சரி, ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்திய கொடுத்தது.

இந்த சீசனோட மிகச்சிறந்த ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்களில் ஒன்றை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வச்சுருக்கு. ஷமியோட அனுபவம், பிரின்ஸ் யாதவோட இளமைத் துடிப்பு, மோசின் கானோட அதிவேகம்னு எல்லா பாக்ஸையும் டிக் பண்ற மாதிரியான Fast And Furious பௌலர்கள் கிடைத்ததே லக்னோவுக்கு வரம் தான். அதுவும் இரண்டு வெற்றிகள், நான்கு தோல்விகளோட ஒன்பதாவது இடத்துல இருக்குற ஒரு அணி அதுக்கு நேரெதிரா இரண்டு தோல்விகள் மற்றும் நான்கு வெற்றிகள் பெற்ற நான்காவது இடத்துல இருக்க அணிய எதிர்கொள்ளனும் அப்படின்றபோ பௌலர்கள் ஓவர்டைம் பார்க்கனும். அதை லக்னோ மிகச் சரியாக பண்ணுச்சு.
கருப்பு வெள்ளை படங்கள்ல வர்ற பூதங்களோட உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி எங்கோ ஒளிச்சு வைக்கப்பட்ருக்குன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி ராஜஸ்தான் அணியோட மொத்த இதயத்துடிப்பும் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்சியோட பேட்களுக்குள் தான் அடங்கி இருக்கு போல. ராஜஸ்தான் ஆடுன முதல் ஆறு போட்டிகள்ல, அணியோட மொத்த ஸ்கோர்ல 46.7 சதவிகிதம் ரன்கள் இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து தான் வந்துருக்கு. இப்படி இருக்கறது தான் ராஜஸ்தானோட ப்ளஸ்ஸும் மைனஸும். மொத்த பாரத்தையும் இவங்களே பார்த்துப்பாங்கன்றது பலம்னா மீதமுள்ளவங்க மிச்சர் மட்டும் சாப்டே பழகிடுவாங்கன்ற தான் இதுல உள்ள ரிஸ்க்.

முதல் நான்கு போட்டிகள்லயுமே வெற்றியை இவங்கதான் தீர்மானிச்சாங்க. சன்ரைசர்ஸுக்கு எதிரான தோல்விலயும் இதேதான் நடந்துச்சு, 217-ஐ சேஸ் பண்ண வேண்டிய கட்டாயத்தின் போது இவங்க ரெண்டு பேரும் Binary Brothers மாதிரி 1 மற்றும் 0-ல வெளியேறுன உடனே கேகேஆரோட வெற்றி ஏறக்குறைய உறுதியாகிடுச்சு.
இப்படிப்பட்ட ஜெய்ஸ்வால் 183.33 ஸ்ட்ரைக்ரேட்ல ரொம்ப ரிலாக்ஸா ஆடிட்டு இருந்தப்போ தூக்குன ஷமி, அதற்கடுத்த பந்துலயே ஜுரேலையும் வெளியேத்தினாரு. நல்லா ஆடுனும்னு நினைச்சா அரைசதத்தைத் தாண்டுவேன் இல்லேன்னா சிங்கிள் டிஜிட்தான்றது ஜுரேல் விஷயத்தில் எழுதப்படாத சட்டம். சூர்யவன்சிக்கு பால் டப்பா தெரிஞ்சுருக்கும் டாட் பால் தெரிஞ்சுருக்காது. அவருக்கு டாட் பால்னு ஒன்னு இருக்குன்னு தெரிய வச்சது சாதனைனா, அவருக்கு மெய்டன் ஓவரை வீசியது மோசின் கானோட சரித்திரம்.
அடிக்க இடமே தராம தொடர்ச்சியா டாட் பால் கொடுக்க வச்சது, அது தந்த அழுத்தத்துலேயே சூர்யவன்சிய தூக்குனதுன்னு முக்கிய ப்ரேக் த்ரூவை மோசின் கான் கொண்டு வந்தாரு. இதற்கடுத்து விழுந்த ஒவ்வொரு விக்கெட்டும் ரன்ரேட்டை மேலும் மேலும் சரிய வச்சது. பராக் இந்த சீசன்ல ஏழு போட்டிகள்ல 81 ரன்கள் மட்டும்தான் மொத்தமே அடிச்சுருக்காரு. `இம்பேக்ட் கேப்டன்ஷி'னு தலைமையேற்க மட்டும் வர்ற மாதிரி ஏதாச்சும் ஒரு ஆப்சனை பராக்குக்கு மட்டும் குடுத்துருக்காங்களானு தெரியலனு ரசிகர்கள் பேசிக்குறாங்க....
சரி இந்தப் போட்டியிலாவது மிடில் ஆர்டர் பொறுப்புணர்ந்து ஆடுவதற்கான சந்தர்ப்பத்த பயன்படுத்துவாங்களானு பார்த்தா அதற்கான சுவடே தெரியல.

டி20-ல ஓடி ரன் எடுப்பது பாவச்செயல், ஸ்ட்ரைக் ரொடேட் செய்வது பெருங்குற்றம்" னு இவங்க மனசுல யாரோ ஆழமாப் பதிய வச்சுட்டாங்க போல. வருவது, ஆட்டமிழப்பது வெளியேறுவது - ரிபீட்டுன்னு லூப் மோடுல போய்ட்டு இருந்தது. ஜடேஜாவோட இன்னிங்க்ஸ் தான் ஒரே லைஃப் ஜாக்கெட் ஆனது. 15 ஓவர்களில் வெறும் 107 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். இறுதி ஓவர்கள்தான் ரன்வறட்சியைக் குறைத்தன. குறிப்பாக கடைசி ஓவர்ல வந்த 20 ரன்கள் ராஜஸ்தானை ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை இலக்காக நிர்ணயிக்க வைத்தது.
இதெல்லாம் லக்னோ சுலபமா அடிச்சிரும்னு பார்த்தா பௌலிங்கில் ராஜஸ்தான் ஜொலிக்க, லக்னோ பேட்ஸ்மேன்கள் சிதறு தேங்காய் போடப்பட்டனர். மார்ஷ் அடிச்ச 55 ரன்கள் அதுவும் 134.2ன்ற ஸ்ட்ரைக்ரேட்டில் மட்டுமே வந்த அந்த ரன்கள் மட்டும் வரவு வைக்கப்படாமல் இருந்திருந்தால், 100 ரன்களைக் கூட லக்னோ தாண்டியிருக்காது போல.
ரிசப் பண்ட் மற்றும் மார்க்ரம் டக் அவுட் ஆக, மோசமான மிடில் ஆர்டர் யாருடையது லக்னோவா அல்லது ராஜஸ்தான் தானா என்ற விவாதமே நடத்துமளவு நிலைமை மோசமாக இருந்தது. பராக் ஆவது அவுட் ஆஃப் ஃபார்மா இருந்தாலும் கேப்டன்ஷி கோட்டால உள்ள இருக்காரு. பூரனை எந்த நம்பிக்கையோட லக்னோ தொடர்ந்து ஆட வைக்குறாங்கனு தான் தெரியல. நடப்பு சீசன்ல அவரோட அதிகபட்ச ஸ்கோரே 19 தான். "பண்ட் ஒருவேளை கேப்டன்ஷியை விட்டுட்டா பேட்ஸ்மேனாக மீண்டு வருவாரோ?", என்ற முணுமுணுப்புகள் ஏற்கனவே எழத் தொடங்கி விட்டன.

மொத்தத்தில் ரெண்டு பக்கத்துல இருந்துமே இந்தப் போட்டில ஹீரோக்கள் பௌலர்கள் தான். குறிப்பாக ராஜஸ்தான் பௌலர்களில் யாருடைய எக்கானமியும் 7-ஐ கூட தாண்டவில்லை, எல்லோருமே குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி இருந்தார்கள். இவ்வளவுக்கும் இம்பேக்ட் பிளேயரை முதல் பாதியிலேயே பயன்படுத்தி விட்டதால் "ஒரு கை குறைகிறது" என்பதுதான் நிலைமை. ஆனால் ஜடேஜாவை வைத்து அழகாக சமாளித்து வெறும் 18 ஓவர்களில் லக்னோவை ஆல் அவுட் ஆக்கிக் காட்டியது ராஜஸ்தான்.
இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது மட்டுமல்ல இரு போட்டிகள் தொடர்ந்து தோற்ற பின் மறுபடியும் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது ராஜஸ்தான், அதுவும் ஒப்பற்ற அந்த இரு ஓப்பனர்கள் இல்லாமல் என்பது தான் குறிப்பிடத்தக்கது. லக்னோவுக்கு LUCKnow என்ற மாற்றம் வருமென்று பார்த்தால் LUCKno என்றே அது தொடர்கிறது.




















