அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் அதிமுக மகளிரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகளிரணி செயலா் பா.வளா்மதி தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு உடை அணிந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் பா.வளா்மதி பேசியதாவது:
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ‘யாா் அந்த சாா்’ என்று தமிழகமே கேட்கிறது. உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த தயங்குவது ஏன்? உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதிமுக மகளிரணி நிா்வாகிகள் கோகுல இந்திரா, சரோஜா, நிா்மலா பெரியசாமி, காயத்ரி ரகுராம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.பெண் தொண்டா் ஒருவா் நீதி கேட்பது போல கண்ணகி வேடத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா்.