GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர...
"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" - சொல்வது ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சாராயக்கடை உள்ளது, ஆனால், அப்பாவிகள் சைக்கிளில் இடியாப்பம் விற்க வேண்டுமென்றால் உரிமம் கேட்கிறது திமுக அரசு, இதுதான் திராவிட மாடலா?

உசிலம்பட்டிக்கு வருகை தரும் கனிமொழி, மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுகவின் நாடாளுமன்றத் தலைவராக உள்ள கனிமொழி இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன கோரிக்கை வைத்து நிதியையும் திட்டங்களையும் பெற்று தந்தார்?
தமிழகத்தில் டிஜிபி பதவி காலியாகி ஆறு மாதம் ஆகியும் தற்போது வரை பொறுப்பு டிஜிபிதான் நியமிக்கிறார்கள், நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக சேர்த்து 41 சதவிகித வாக்குகளை பெற்றது. தற்போது திமுகவிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதால் அதிமுக-பாஜக கூட்டணியின் வாக்குகள் 61 சதவிகிதமாக அதிகரிக்கும், திமுக பல இடங்களில் டெபாசிட் இழக்கும்
இன்றைக்கு அதிமுகவிலிருந்து சென்ற ஒருவர், 'அவர் வருகிறார் ,இவர் வருகிறார்' என்று கூறுகிறார். ஆனால், அவரது நிழல் கூட வரவில்லை. இவ்வளவு ஏன்? செங்கோட்டையனுடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர் கூட அவருடன் செல்லவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிற எரிச்சலில்தான் செங்கோட்டையன் உள்ளார்.
இன்றைக்கு செல்வாக்கு, அதிகாரம் எல்லாம் வந்தது அதிமுக தொண்டர்களின் உழைப்பாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் செல்வாக்காலும், எந்த தீய சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது, எடப்பாடியார்தான் அடுத்த முதலமைச்சர்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கவலை தரக்கூடியதாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் பள்ளியின் சுவர் விழுந்து பலியானது, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து இரண்டாம் வகுப்பு மாணவி பலியாகியது, பாளையங்கோட்டைஅரசு உதவிபெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மது அருந்துவது என அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை மோசமாக உள்ளது. இதற்கெல்லாம் அக்கறை செலுத்தாமல் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் இருக்கிறார்.
அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமின்றி 207 பள்ளிகளும், 100 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டதாகவும் செய்திகள் வருகிறது. வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசு அக்கறை செலுத்துமா என்ற கேள்வி எழுகிறது
இன்றைக்கு நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க மறுக்கிறார்கள், திமுகவின் ஒரே நோக்கம் இந்த சந்தர்ப்பத்திலேயே உதயநிதியை முதல்வராக மகுடம் சூட்ட வேண்டும் என்பதுதான். அதற்காக எத்தனை ஆயிரம் கோடியும் செலவழிப்பார்கள். நேர்வழியில் அதிமுகவுடன் மோத முடியாது. அதனால் அதிமுக பலவீனம் ஆகிவிட்டது, இவர் போகப் போகிறார், அவர் போகப் போகிறார் எனக்கூறி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு தேர்தல் இல்லை அதனால் பொங்கல் பரிசு இல்லை என்று ஒரு முதலமைச்சர் தைரியமாக சொல்கிறார் என்றால், மக்களை எப்படி மதிப்பிடுகிறார் என்று நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் பேசுகிற முதலமைச்சர், மக்களை நம்பி இருக்கிறோம் என்று பேசுவதில்லை. வாரிசு அரசியல் செய்கிற திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தோழமைக் கட்சிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மொத்தமாக தமிழகம் சீரழிந்து போயிருக்கிறது, இதை சீர்தூக்கி நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலே புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்" என்றார்.















