`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை...
அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!
தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அதிருப்தியில் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இதனால் கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரு தரப்பாகப் பிரிந்து நிற்கின்றனர்.

அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
பா.ம.க-வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி மற்றும் இரா.அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாகவும், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், எஸ். சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
இதனிடையே, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியையே பாமக தலைவராக அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கே ஒதுக்கி இருக்கிறது.
இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திலும் காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில் அன்புமணி
இந்தச் சூழலில் அண்மையில் அன்புமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் (தேசிய ஜனநாயக கூட்டணி) பாமக இணைவதை உறுதி செய்திருந்தார்.
இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு சுமார் 17-20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக-வோடு கூட்டணி பேசும் ராமதாஸ்?
ஒரு புறம் அன்புமணி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் திரைமறைவில் தி.மு.க-வோடு பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டார் எனும் தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கேற்ப அரசு ஊழியர்களுக்காக முதல்வர் அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ராமதாஸ் வரவேற்றிருக்கிறார்.
மேலும், இந்த ஆட்சி நன்றாக இருப்பதாகவும் மதிப்பீடு கொடுத்திருக்கிறார். அமைச்சர் ராஜ கண்ணப்பனும் ராமதாஸ் தி.மு.க-வுடன் பேசுவதை மேடையிலேயே போட்டுடைத்திருக்கிறார்.
ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா?
ஆனால், தி.மு.க கூட்டணியோடு ராமதாஸ் இணைவதில் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வி.சி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஆகவே ஆகாது.
ஏற்கெனவே, `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமா.
ராமதாஸூக்காக திருமாவை விட்டுக்கொடுக்க தி.மு.க துணியுமா அல்லது தி.மு.க-வுக்காக ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா? ஆகிய கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

திமுக-விற்கு என்ன பயன்?
“வி.சி.க - பா.ம.க பஞ்சாயத்தை ஒரு பக்கம் வையுங்கள். கடந்த தேர்தலில் பா.ம.க இல்லாமல்தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
தற்போது பா.ம.க பிரிந்திருக்கும் நிலையில் தி.மு.க எதற்காக பா.ம.க-வை இணைத்துக்கொள்ள வேண்டும்.
பா.ம.க-வை சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? பா.ம.க கூட்டணியை வி.சி.க எதிர்ப்பதாக ஒருபுறம் இருந்தாலும்கூட…
பா.ம.க-வை சேர்த்தால் வன்னியர் அல்லாத ஓட்டும், பட்டியலின ஓட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால் ராமதாஸை தி.மு.க எப்படி ஏற்றுக்கொள்ளும்?
ராமதாஸை இணைத்துக்கொண்டால் கடினமாகிவிடும்!
அவரை தி.மு.க ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. பிளவுபடாத பா.ம.க-வை சேர்த்துக்கொள்ளாதபோதே தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது.
அப்படி இருக்கையில் இந்தத் தேர்தலில் பிளவுபட்ட பா.ம.க-வை கூட்டணிக்குள் சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பலன் இருக்கப் போகிறது. ஏற்கெனவே தி.மு.க-வில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அதிக சீட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தவிர தே.மு.தி.க-வையும் கூட்டணிக்குள் இணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ராமதாஸை இணைத்துக்கொண்டால் அவர்களுக்குக் கடினமாகிவிடும்.

ராமதாஸ் தனியாக நிற்பதையே திமுக விரும்பும்
பா.ம.க-வை இணைத்தால் தி.மு.க-விற்கு வாக்கு வங்கியில் இழப்பைத்தான் கொடுக்குமே தவிர பெரிதாகச் செல்வாக்கைச் சேர்க்காது.
மாறாக ராமதாஸ் தனியாக நிற்பதையே தி.மு.க விரும்பும். ஏனென்றால் தனியாக நின்றால் அன்புமணி ஓட்டைப் பிரிக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படிப் பிரித்தால் அது அ.தி.மு.க-விற்குப் பின்னடைவாக இருக்கும்” என்றார்.












