செய்திகள் :

`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்!

post image

தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில், வாக்குச்சீட்டு என்பது ஒருபோதும் சாதாரணமான காகிதமாக இருந்ததில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் வருவதற்கு முன்பு, ஆட்சிகள் மாறியதெல்லாம் கவனமாக மடிக்கப்பட்ட அந்தச் சிறிய காகிதத்தின் மூலமே. 

சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக நடைபெற்ற தேர்தல்கள்,  இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், காகித வாக்குச்சீட்டுகளால் மட்டுமே நடத்தப்பட்டன. இந்த வாக்குச் சீட்டு முறை, வாக்காளரை நேரடியாக ஜனநாயகத்துடன் இணைத்தது. வாக்குப்பதிவு என்பது ஒரு பொத்தானை அழுத்தும் செயலாக இல்லாமல், கவனத்துடன் செய்ய வேண்டிய, பொறுப்புள்ள ஒரு செயலாக இருந்தது.

தமிழ்நாட்டில் 1950 களில் நடைபெற்ற தேர்தல்களில், வாக்குச்சீட்டுகள் சிறிய அளவிலேயே இருந்தன. அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், வேட்பாளர்கள் எண்ணிக்கையும் அதற்கேற்பவே இருந்தது. மக்களிடையே கல்வியறிவும் குறைந்த அளவிலேயே இருந்ததால், தேர்தல் சின்னங்கள் மிக முக்கிய பங்காற்றின.

வாக்குச்சீட்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களுடன் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதன் மூலம், வாக்காளர்கள் தங்களின் தேர்வை கண்ணால் பார்த்தே எளிதாக அடையாளம் காண முடிந்தது.மிகப்பெரிய தேர்தல் பொதுக்கூட்ட பிரசங்கங்கள் போன்றோ அல்லது தேர்தல் விளம்பரங்கள் போன்றோ,வாக்குச்சீட்டு எதையும் விளக்கவில்லை. கூட்டணிகள், அரசியல் வரலாறு, கொள்கைகள் பற்றி அது பேசவில்லை. அதில் இருந்தது வெறும் பெயர்களும் சின்னங்களுமே. ஆனால், அதுவே அரசியலின் நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக மாறியது.


கட்சிப் பிளவுகள் வாக்குச்சீட்டில் உடனே பிரதிபலித்தன. ஒரே மாதிரியான பெயர்களுடன், தெரிந்த அரசியல் பின்னணியுடைய பல வேட்பாளர்கள் அருகருகே தோன்றினர். இது, பல நேரங்களில் வாக்காளர்களைக் குழப்பியது. அதனால் தான், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தேர்தல் சின்னங்கள் மிகவும் முக்கியமான அடையாளமாக மாறின. குறிப்பாக கல்வியறிவு குறைந்த வாக்காளர்களுக்கு, பெயரைவிட சின்னமே அடையாளமாக திகழ்ந்தது.

காகித வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது ஒருங்கிணைந்த செயலாக இருந்தது. வாக்காளர், வாக்குப்பதிவு அறைக்குள் சென்று, சீட்டை திறந்து, விரும்பிய வேட்பாளரைக் கண்டுபிடித்து, முத்திரையை கவனமாக பதித்து, மீண்டும் மடித்து, மூடப்பட்ட பெட்டியில் போட வேண்டும். இதனால், வாக்குப்பதிவு மெதுவாக நடந்தது. அதே நேரத்தில், அது  சிந்தித்துச் செயல்படக்கூடியதாக இருந்தது. வாக்குச்சாவடி பணியாளர்கள், வாக்காளர்களின் தேர்வில் தலையிடாமல், சரியாக எப்படி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை விளக்க கூடுதல் நேரம் செலவிட்டனர்.

பல வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், வரிசைகள் மெதுவாக நகர்ந்தன. ஆனால், வாக்காளர்கள் காட்டிய அந்த நிதானம்தான் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது. அந்தத் தருணங்களில், ஜனநாயகம், வாக்காளர்களிடமிருந்து பொறுமையை எதிர்பார்த்தது. 

1970-கள் தொடங்கி, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு அதிகரித்ததுடன், வாக்குச்சீட்டுகளும் மெதுவாக நீளமானதாக மாறின. கட்சிப் பிளவுகள், சாதி அடிப்படையிலான அமைப்புகள், பிராந்திய குழுக்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என அரசியல் களம் விரிந்தது. தேர்தலில் போட்டியிடும் உரிமை அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டிருந்ததால், ஒவ்வொருவருக்கும் வாக்குச்சீட்டில் இடம் கிடைத்தது. பல சட்டமன்றத் தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேறு சிலர், பிரபலம் அடைவதற்காக, தோற்போம் எனத் தெரிந்தே சுயேச்சையாக போட்டியிட்டனர். இவை தவிர, உள்ளூர் பணக்காரர்கள் சிலரும் சுயேச்சையாக போட்டியிட்டது உண்டு.   

இன்னொருபுறம், குறிப்பிட்ட தொகுதி ஒன்றில் முக்கியத் தலைவர் யாரேனும் போட்டியிடும் தொகுதியாக இருந்தால், அதே பெயருடைய வேறு பலர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். உதாரணத்துக்கு ஒரு கட்சியின் முக்கிய வேட்பாளரின் பெயர் மனோகரன் என்றால், அதே மனோகரன் என்கிற பெயரில் உள்ள ( இனிஷியலில் மட்டும் மாற்றம் இருக்கும்) பலரை, எதிர்க்கட்சி களமிறக்கும். இதனால், வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு, குறிப்பிட்ட முக்கிய கட்சியின் வேட்பாளரான மனோகரன் என்பவருக்கு விழும் வாக்குகள், வேறு மனோகரன்களுக்கு விழுந்து, வாக்குகள் சிதறும் என்கிற உத்தியிலேயே ஒரே பெயரிலான இந்த சுயேச்சை வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். இதனால், அந்தத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் நீளமானதாக இருக்கும் என்பதால், வாக்குச் சீட்டும் நீளமானதாக இருக்கும். இது குறித்து அப்போது வியப்புடன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது உண்டு. 

இந்த வேட்பாளர் பெருக்கம் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. நீளமான வாக்குச் சீட்டை அச்சடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு, வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்திய பின்னர், அதனைப் போட வேண்டிய பெட்டிகளை, வழக்கத்தைவிட பெரிதாக வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. இதனால், கூடுதல் செலவுகளும் சிரமங்களும் ஏற்பட்டன. 

இந்த நீளமான வாக்குச்சீட்டு , தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்லாது, வாக்காளர்களுக்குமே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு, சிரமத்தைக் கொடுத்தது. தாங்கள் விரும்பிய வேட்பாளரின் பெயரையோ அல்லது சின்னத்தையோ சரியாக தேர்வு செய்வது, முத்திரையைத் துல்லியமாக குத்துவது, தவறு ஏற்படாமல் கவனிப்பது என அனைத்தும் முக்கியமான செயல்களாக மாறின. முத்திரை சற்று விலகி, அருகில் உள்ள வேட்பாளரின் பெயரின் கட்டத்தில் பட்டுவிட்டால், அந்த வாக்குச் செல்லாத வாக்குகளாகிவிடும். எனவே, மிக கவனத்துடன் வாக்களிக்க வேண்டிய தேவை இருந்தது. 

எந்த ஒரு தேர்தலிலும், வாக்குப்பதிவு நாளைவிட வாக்கு எண்ணிக்கை அன்றே கூடுதல் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கும். இன்றைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வருகைக்குப் பின்னர், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கினால், தபால் வாக்குகளைத் தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 அல்லது 11 மணிக்குள் வெளியாகி, குறிப்பிட்ட தொகுதியின் வேட்பாளரின் வெற்றி/தோல்வியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. நண்பகல் 12 மணி அளவிலேயே பெரும்பாலும் வாக்கு எண்ணிக்கை முடிவு ஓரளவு உறுதியாகி விடுகிறது.

ஆனால், வாக்குச் சீட்டின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கையின் முடிவு தெரிய இரண்டு நாளாகிவிடும். வாக்குப் பெட்டிகள் கடும் கண்காணிப்பில் திறக்கப்பட்டு, சீட்டுகள் 50 அல்லது 100 என்கிற எண்ணிக்கையால் தனித்தனியாக கட்டப்பட்டு, சந்தேகமான வாக்குகள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன.

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல்களில், வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நீடிக்கும். ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறிக் கொண்டே இருக்கும். நீளமான வாக்குச்சீட்டுகள் இருந்த தொகுதிகளில் முடிவுகள் தாமதமாகத்தான் தெரியவரும். இதனால், வேட்பாளர்கள், கட்சித் தலைமை, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினருக்குமே வாக்கு எண்ணிக்கையைத் தெரிந்துகொள்வதில் பதற்றமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.

குறிப்பிட்ட பெட்டியில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் முகவர்களில் ஒருவர், ஏதாவது சந்தேகம் கிளப்பிவிட்டாலோ, அந்தப் பெட்டியில் போடப்பட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். இதனால், விடிய விடிய எண்ணினாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க மூன்றாவது நாள் காலையும் ஆகிவிடுவது உண்டு. அந்த இடைவெளியில், வதந்திகள் பரவும்; அரசியல் பதற்றம் உச்சம் அடையும்.

என்றாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் நாளன்று மாலைக்குள், முடிவு எப்படி இருக்கும் என்பது ஓரளவு தெரிந்துவிடும். சில நேரங்களில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியின் வாக்குகளை எண்ணும்போது, கடைசி நேரத்தில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தல் முடிவு எதிர்பாராதவிதமாக மாறிவிடுவதும் உண்டு.முடிவுக்கு வந்த வாக்குச் சீட்டு முறை 

1980-களின் இறுதி மற்றும் 1990-களின் தொடக்கத்தில், காகித வாக்குச்சீட்டு முறையின் வரம்புகள் தெளிவாகத் தெரிந்தன. அதிகரித்த வேட்பாளர்கள் எண்ணிக்கை, வாக்காளர்கள் பெருக்கம், வாக்குச்சீட்டு அச்சிடும் செலவுகள், சேமிப்பு சிக்கல்கள், செல்லாத வாக்குகள் தொடர்பான சர்ச்சைகள் போன்ற அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பெரிய நிர்வாகச் சவால்களாக மாறின.

இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தேர்தல் முறையில் மாற்றம் அவசியம் என்ற விவாதம் தீவிரமடைந்தது. அதன் விளைவாகத்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தும் முயற்சி தொடங்கியது.  1990-களில், குறிப்பாக டி.என். சேஷன் போன்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் முன்னெடுத்த சீர்திருத்த முயற்சிகளின் போது, EVM பயன்பாடு விரிவடைந்தது. 2000-களின் தொடக்கத்தில், சட்டமன்றத் தேர்தல்களில் EVM-கள் முழுமையாக வழக்கமான முறையாக மாறின.

இந்த மாற்றம் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு நிர்வாக மற்றும் அரசியல் மாற்றமாகவும் இருந்தது. முத்திரை தவறாகப் பதிந்ததால் செல்லாத வாக்குகள் என்ற பிரச்னை நீங்கியது. வாக்கு எண்ணிக்கை நேரம் பெரிதும் குறைந்தது. நீளமான வாக்குச்சீட்டுகள் என்ற  தொல்லையும் முடிவுக்கு வந்தது.

மின்னணு வாக்கு இயந்திரம்

EVM மீது எழும் சந்தேகங்கள்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வருகையால்,வாக்குச் சீட்டுகளால் ஏற்பட்ட சிரமங்களும் கால விரயமும் முடிவுக்கு வந்தன என்றாலும், பலருக்கும் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் நாளுக்கு நாள் மிகுதியாகிக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, EVM-கள், மக்கள் அளிக்கும் உண்மையான தீர்ப்பை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம், வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுபோன்ற சந்தேகங்கள் தேர்தல் காலங்களில் அடிக்கடி எழுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்தாலும், சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

வாக்குச் சீட்டு

இதன் காரணமாக பல்வேறு கட்சிகளும் பழைய காகித வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றன. “வேகமான எண்ணிக்கையைவிட நம்பகமான தேர்தலே முக்கியம்” என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளிலும் இன்னும் காகித வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்குச்சீட்டு என்பது கண்ணால் பார்க்கவும், கையால் எண்ணவும் கூடிய ஒன்று என்பதால், அதில் மக்களின் தீர்ப்பு தெளிவாகப் பதிவாகும் என்ற நம்பிக்கையும் இந்தக் கோரிக்கையின் அடிப்படையாக உள்ளது. இதனால், தேர்தல் முறைகள் குறித்து விவாதம் இன்று மீண்டும் தீவிரமாகியுள்ளது. ஜனநாயகத்தில் தொழில்நுட்பம் முக்கியமா, அல்லது நம்பகத்தன்மையா என்பதே அதன் மையக் கேள்வியாக உள்ளது. 

இனி, நினைவுகளாக மட்டுமே வாக்குச்சீட்டு


இன்றைக்கு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு இல்லாமல்போயிருந்தாலும், தமிழ்நாட்டின் தேர்தல் நினைவுகளில் அது இன்னும் உயிருடன் இருக்கிறது. நீளமான வாக்குச்சீட்டுகள் பற்றிய அரசியல் நினைவுக்குறிப்புகள், பத்திரிகையாளர்களின் அனுபவக் குறிப்புகள், இப்போதும் தேர்தல் தொடர்பான ஆய்வுகளிலும் விவாதங்களிலும் அடிக்கடி இடம்பெறுகின்றன. அவை, வெறும் நிர்வாகச் சிக்கல்களாக மட்டுமல்ல; உயிரோட்டமான, போட்டி நிறைந்த ஜனநாயகத்தின் அடையாளங்களாகவே நினைவுகூரப்படுகின்றன. 

அரசியலின் பன்முகத்தன்மையின் முழுச் சுமையையும் அந்த வாக்குச்சீட்டுதான் சுமந்து நின்றது. சில நேரங்களில் குறைபாடுகளுடன் இருந்தாலும், அதில் எப்போதுமே ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது. ஜனநாயகம்  உண்மையிலேயே, வாக்காளரின் கைகளில் இருந்தது என்பதை நினைவூட்டும் சின்னமாகவே அந்த வாக்குச்சீட்டு இன்றும் நிலைத்திருக்கிறது.

(சுவடுகள் தொடரும்)

முதல்வரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியின் `பதவி பறிப்பு' - கூண்டுடோடு ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுற்ற தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருக்க அந்தக் கட்சியின் களப்பணி மட்டும் காரணமல்ல. கோவை திமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னையும் ம... மேலும் பார்க்க

`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' - அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2... மேலும் பார்க்க

விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்."ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கட்சியின் முடிவு. மற்... மேலும் பார்க்க