`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராம...
முதல்வரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியின் `பதவி பறிப்பு' - கூண்டுடோடு ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்
சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுற்ற தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருக்க அந்தக் கட்சியின் களப்பணி மட்டும் காரணமல்ல. கோவை திமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னையும் முக்கிய காரணமாகும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்தால் அந்த பிரச்னை சரியாகும் என்று அவரை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தனர்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக செந்தில் பாலாஜி வந்த பிறகு அந்த பிரச்னை அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த பிரச்னை தற்போது பூதாகரமாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களே உள்ள நிலையில், இப்போதும் கோவை திமுகவில் நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மதுக்கரை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் விஜயசேகரன் மறைவால், திருமூர்த்தி என்பவர் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம், திருமலையம்பாளையம் திமுக பேரூர் செயலாளர் ராமராஜ் என்பவருக்கு பதிலாக ஆர். கிருஷ்ணசாமி என்பவர் அந்தப் பகுதி பேரூர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆனைமலை கிழக்கு ஓன்றியம், கோட்டூர் திமுக பேரூர் செயலாளர் பால்ராஜ் என்பவருக்கு பதிலாக ராமகிருஷ்ணன் என்பவர் அந்தப் பகுதியின் பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்ற கூறப்பட்டிருந்தது. தேர்தலுக்கு மிகவும் குறைந்த காலமே உள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் திமுக உடன்பிறப்புகளிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையம்பாளையம் பேரூர் செயலாளர் ராமராஜ் மாற்றப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதியின் 8 வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து திருமலையம்பாளையம் பகுதி திமுகவினர் கூறுகையில், ”ராமராஜ் சுமார் 30 ஆண்டுகளாக திமுகவில் களப்பணியாற்றி வருகிறார். பெரியளவுக்கு பொருளாதாரம் இல்லாவிடினும் தன் சொத்துகளை விற்று கட்சி நடத்தியவர். அதிமுக வலுவாக உள்ள இந்தப் பகுதியில் எஸ்.பி வேலுமணியின் உறவினர்களை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்கிறார்.
அண்மையில் நடந்த ஸ்டாலின் ‘ஒன் டு ஒன்’ நிகழ்ச்சியில் கூட, இவரின் பணி சிறப்பாக உள்ளது என்று முதலமைச்சர் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

சமீப காலமாக கட்சி தேர்தல் நடத்தப்படாமல், மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் சாதிய அடிப்படையில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை நீக்குகிறார்கள். இப்படிப்பட்ட பதவியே எங்களுக்கு தேவையில்லை.

திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 11 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 8 பேர் எங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்து விலகிவிட்டோம். மேலும் சில வட்ட செயலாளர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.















