`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தி...
`அமெரிக்காவின் ஒரு மெயில்' அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 லட்சம் கோடி இழப்பு?
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதானி நிறுவனம் விளங்குகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரிகள் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாகவும் அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் எழுப்பப்பட்ட இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே பலமுறை அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து மீண்டு வந்தது. இவ்விவகாரத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானிக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் அவர்களை சென்றடையவில்லை.

இந்த சம்மனை அனுப்ப பல வழிகளில் முயற்சி மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. இதற்காக மத்திய அரசின் உதவியையும் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் நாடியது.
ஆனால் மத்திய அரசும் இதற்கு உதவி செய்யவில்லை. இதையடுத்து இவ்விவகாரத்தில் சம்மனை இமெயில் மூலம் அனுப்ப முடிவு செய்து இருக்கிறது. இதற்கு அனுமதி வாங்க நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் மனுத்தாக்கல் செய்து இருக்கிறது.
அதானி நிறுவன பங்குகள் சரிவு
அமெரிக்க பங்குச்சந்தை கமிஷனின் இம்முடிவால் இந்திய பங்குச்ச ந்தையில் அதானி நிறுவனத்தில் பங்குகள் வெகுவாக சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 11 சதவீதம் சரிந்தது. இதே போன்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதானி நிறுவனத்தின் பங்குகள் ரூ.1.1 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்து இருக்கிறது.

அமெரிக்க பங்குச்சந்தை கமிஷனின் குற்றச்சாட்டுக்களை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குற்றச்சாட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் புதிதாக சம்மனை அனுப்ப அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அதானி நிறுவனமோ அல்லது மத்திய சட்ட அமைச்சகமோ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதற்கு முன்பு சட்ட அமைச்சகம் இப்பிரச்னை குறித்து வெளியிட்டு இருந்த செய்தியில், இது அதானி நிறுவனத்திற்கும், அமெரிக்காவுக்குமானது என்று சொல்லி நழுவிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.




















