``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்...
மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்?
2005ம் ஆண்டு கடலூர் சிறையிலிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவன் ஜீவா ( ஆகாஷ் நாகராஜன்) ஜெயிலில் செய்கிற ஒரு சம்பவத்தால் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படுகிறான்.
அதன் பின் அவன் ஏன் சிறையில் இருக்கிறான் என்று விரிகிறது படம். பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருக்கும் கேங். அதில் நாயகன் ஜீவா மருத்துவக் கல்லூரி மாணவர்.
மற்ற நண்பர்கள் வெவ்வேறு வேலைகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அட்டிப் போட்டாலே, இவர்களின் பேசுபொருள் பெண்கள்தான்.

நண்பர் கேங்கில் இருக்கும் மோகன் பெண்களைப் பற்றி தனக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மற்ற நண்பர்கள் அதை ஆச்சரியத்துடனும் சந்தேகத்துடனும் கேட்டுக்கொண்டிருப்பது இவர்கள் வழக்கம்.
இவர்களில் சமத்து பையனான ஹீரோ ஜீவா, தான் சந்தித்த ஒரு பெண் சுமதியைப் ( ஜானகி சீனிவாசன்) பற்றிப் பேச ஜீவா அந்தப் பெண் குறித்து ஒரு முன்முடிவுக்கு வருகிறான். அதன் பிறகு எதேச்சையாக சந்திப்புகள் நடக்க, ஜீவாவும் சுமதியும் பழக ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இருவரும் தனியே சந்திக்கும்படியான சூழலை உருவாக்குகிறார் ஜீவா. அந்தச் சூழலுக்குப் பிறகு நடந்தது என்ன, ஜீவா - சுமதி மீண்டும் சந்தித்தார்களா, ஜீவா எதிர்கொண்ட சம்பவங்கள் என்னென்ன போன்றவைதான் `மாயபிம்பம்' படம்.
ஜாலியாக சொல்லத் தொடங்கி, இரண்டாம் பாதியை மிக அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் படத்தை எழுதி, இயக்கித் தயாரித்தும் இருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர்
வீட்டிற்கு நல்ல பிள்ளையாக, நண்பர்கள் மத்தியில் ஜாலியாக அதே சமயம் பொறுப்பான இளைஞன் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் ஜீவாவாக நடித்திருக்கும் ஆகாஷ் நாகராஜ்.

சுமதியிடம் பழகும்போது தனக்குள் தோன்றும் எண்ணத்தையும், நண்பர்கள் சொல்வதையும் போட்டுக் குழப்பிக்கொண்டு பின் குற்றவுணர்வில் வருந்தும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
நாயகி சுமதியாக வரும் ஜானகி... வழக்கமான சினிமா நாயகிகளிடம் இருந்து விலகி தனித்துத் தெரிகிறார். இவர் வரும் காட்சிகளில் சினிமாத்தனமற்ற உணர்வு வெளிப்படுவது பெரிய ப்ளஸ் !
ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஜானகி.
20 ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றாலும், படம் சொல்ல வருகிற செய்தி இந்தக் காலத்திற்கும் பொருந்திப்போவது படத்தின் பலம். நண்பர்களாக வரும் எஸ். ஹரிகிருஷ்ணா, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகிய மூவரில் ஹரி மட்டுமே ஸ்கோர் செய்கிறார்.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், துணைக் கதாபாத்திரங்கள் எனத் தெரிந்த முகமே இல்லாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே வைத்து சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் KJ சுரேந்தர்.

இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் `எனக்குள்ளே' பாடல் கவனிக்க வைத்ததோடு, முக்கியமான காட்சிகளில் பின்னணி இசையிலும் அழுத்தம் கூட்டியிருக்கிறார்.
கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாக்கி. முதல் பாதியில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தன் கத்திரியால் வினோத் சிவகுமார் மெருகேற்றியிருக்கலாம்.
2005-ல் நடக்கிற கதை என்பதால் பீரியட் உணர்வுக்காக அவ்வகையில் காட்சிகள் இருந்தாலும், கதை சொல்லும் பாணியிலும் அதே காலகட்டத்தைச் சேர்ந்த முறையைப் பின்பற்றியிருப்பது பல இடங்களில் அயர்ச்சியைத் தருகிறது.
பெண்கள் பார்வையிலிருந்து பல விஷயங்களைச் சொல்லிய விதம் அருமை. ஆனால், அதே சமயம் மருத்துவமனையில் வரும் அந்தப் பெண் பாத்திரத்தை பாசிட்டவாகக் காண்பித்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் அவ்வளவு கேலி செய்திருக்கத் தேவையில்லை.

முதல் பாதியில் எதை நோக்கிச் செல்கிறது எனத் தெரியாமல் நகரும் கதை இடைவெளிக்கு முன் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.
நாம் சந்திக்கும் மனிதர்கள் குறித்து நமக்கு தோன்றுகிற முன்முடிவு, பிறர் சொல்கிற அபிப்பிராயம் என மனிதர்களை எடைபோட்டுவிட்டு அணுகுவது எவ்வளவு அபத்தம் என்ற அழுத்தமான பேசுபொருளைப் பேசும் `மாயபிம்பம்', காட்சியமைப்பில் புதுமையையும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனத்தையும் சேர்த்திருந்தால் தவிர்க்கமுடியாத படைப்பாகியிருக்கும்.


















