"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டு...
'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது காலம் ஓய்வெடுக்கபோவதாக எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் வெளிநாட்டில் இருந்த ஒரு நீண்டகால பணியை விட்டு, சமூக முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்.
என் முதல் நேர்காணலிலேயே, ’சமூகநீதி இயக்கத்தின் வரலாறு மற்றும் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து அதன் பங்களிப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மதுரை மக்களுக்காக மேலும் பல செயல்களை செய்ய வேண்டும், என் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டும்’ என்ற மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் கூறியிருந்தேன்.
மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய 60 வயதை எட்டியதும் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, 2016க்கு முன்பு இருந்ததைப் போல சர்வதேச அளவிலான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருந்தது.
என் கட்சி, மதுரை மத்திய தொகுதி மற்றும் தமிழ்நாட்டிற்காக (ஒரு அமைச்சராக) பல்வேறு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் திருப்தி அடைகிறேன். என் மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளேன்.
ஆனால், நான் தொடங்கிய பல திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையிலும், பின்னர் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிலும் இருந்தபோது தொடங்கிய பல மாற்றங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
மதுரைக்காக முழுமையான பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மத்திய சிறை மாற்றம், மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
அதனால், 2026 இல் அரசியலை விட்டு விலகும் எண்ணத்தில் இருந்த என் திட்டத்தை ஒத்திவைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து தொடங்கிய பணிகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் தேர்தல் முடிவால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த 10 ஆண்டுப் பொதுச்சேவை பயணத்தில் நான் ஏற்படுத்திய தாக்கங்களை சில அம்சங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
2017ஆம் ஆண்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணியை அமைக்கும்படி என் தலைவர் கேட்டார். அப்போது, விண்ணப்பங்கள் பெற்று நேர்காணல் நடத்தி திறமையானவர்களை தேர்வு செய்வது போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினேன். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து, கட்சியின் மிகவும் இளம் மற்றும் திறமையான அணியை உருவாக்கினோம்.
எங்கள் முயற்சிகளால் கட்சியின் இணையவழி பிரச்சார வலிமை பெரிதும் உயர்ந்தது. 2019 தேர்தலுக்கான முழு இணைய பிரச்சாரத்தையும் பல புதுமையான முறைகளுடன் நடத்தினோம். 2021இல் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக பிரச்சாரங்களையும் இணைத்து செயல்பட்டோம். இரு தேர்தல்களிலும் கூட்டணி வெற்றிக்கு இணைய தள ஆதிக்கம் முக்கிய காரணமாக இருந்தது.

மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ,250க்கும் மேற்பட்ட தொகுதி மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றினோம். முதல்முறையாக அமைச்சராக இருந்த எனக்கு நிதித்துறையை ஒப்படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே புதிய பாதையில் செயல்பட முயன்றேன்.
இந்த கால கட்டத்தில் மதுரையில் பல முக்கிய கட்டமைப்பு திட்டங்களான கோரிப்பாளையம் மற்றும் வண்டியூர் மேம்பாலங்கள், வண்டியூர் பூங்கா, சுப்பிரமணியபுரம் 9 மாடி குடியிருப்பு திட்டம் ஆகியவை செய்து முடித்துள்ளேன்.
எதிர்பார்க்காத தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் அடிப்படையில் நான் தோல்வியடையுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. தொகுதியில் நான் செய்த பணிகளுக்கான ஆதாரங்கள் எங்கும் இருக்கின்றன.
என் எதிரணியினரின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக தகவல் கிடைத்தது. இருந்தாலும், ஜனநாயக செயல்முறையை பாதிக்க விரும்பாமல் நான் சட்டரீதியான சவால்களை முன்வைக்கவில்லை.
நான் பணம் கொடுத்து வாக்கு வாங்காத ஒருவராகவும், பொய்ப் பிரச்சாரம் செய்யாத ஒருவராகவும் தேர்தலை சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாக்களித்த 44,286 மக்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவன்.

த.வெ.க 25% வாக்குகளை பெற்றால் புதிய அரசியல் யுகம் தொடங்கும் என நினைத்தேன். ஆனால் அது 35% வரை செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது.
தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்திருந்தாலும், அது தமிழ்நாட்டு மக்களின் அரசே. புதிய முதலமைச்சர் விஜய்க்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அரசு இயந்திரத்தில் பழைய நடைமுறைகள் தொடரும் மனப்பான்மையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் முன்னேற்றம் தடைப்படும்.
சிறிய ஓய்வு
10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்சேவையில் இருந்த பிறகு, சில வாரங்கள் தனிப்பட்ட ஓய்வெடுக்க விரும்புகிறேன். முன்பு நேரமின்மையால் செல்ல முடியாத இடங்களுக்கு பயணம் செய்யவும், புத்தகம் எழுதவும், உடல்நலத்தை கவனிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்தப் போகிறேன்.

அடுத்த சில வாரங்களில், நான் செய்த முக்கிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மேலும் விவரங்களை பகிர்வேன். நான் மீண்டும் வருவேன் புத்துணர்ச்சியுடன் " என தெரிவித்திருக்கிறார் .




.jpeg)









