"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்க...
'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்றனர். ஐம்பது ஐம்பது பேராக குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்து அறிவாலயம் முன்பிருக்கும் அண்ணா சாலையை மறித்து அமர்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறிவாலயத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த காவல்துறையினர், போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 'நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்க வேலையைத்தானே கேட்குறோம். 5 மாசமா வேலை இல்லாம சோத்துக்கு கஷ்டப்பட்டு பாருங்க. அப்போதான் எங்க வாழ்க்கை என்னன்னு உங்களுக்குலாம் புரியும்...' என ஆதங்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே பெண்கள் கைதாகி சென்றனர்.











அறிவாலய முற்றுகையை தொடர்ந்து மதியம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி முன்பும் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து போராடியிருக்கின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங்கில் போராடி கைதான பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தரப்பை அரசு இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














