தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போ...
'இந்தியப் பத்திரிகை சுதந்திரம்?' Helle Lyng கேள்வி; மோடி 'நோ' பதில்; சுழற்றியடிக்கும் நார்வே பயணம்
இந்தியப் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை (மே 18), நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது நார்வே நாட்டைச் சேர்ந்த ஹெல் லிங் (Helle Lyng) என்கிற பத்திரிகையாளர் மோடியிடம், 'உலகின் மிக சுதந்திரமான பத்திரிகைகளிடமிருந்து சில கேள்விகளை எடுத்துக்கொள்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்.
ஆனால், மோடி எந்தப் பதிலும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

இது குறித்து ஹெல் லிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. உண்மையில் அவர் பதிலளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.
உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index) நார்வே முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவோ பாலஸ்தீனம், அமீரகம் மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு 157-வது இடத்தில் இருக்கிறது.
நாம் யாருடன் இணைந்து செயல்படுகிறோமோ, அந்த அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதுதான் நமது வேலை"
ஹெல் லிங்கின் இந்தப் பதிவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ரீஷேர் செய்துள்ளார்.
நார்வேயில் அன்று மாலை இந்தியாவின் மேற்கு நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஹெல் லிங், சிபி ஜார்ஜிடமும் கேள்விகளை முன்வைத்தார். அவர் சிபி ஜார்ஜிடம் கேட்ட கேள்வி, "நமது கூட்டாண்மையை நாம் வலுப்படுத்தி வரும் வேளையில், நாங்கள் உங்களை ஏன் நம்ப வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது? உங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க முயற்சிப்பதாக உங்களால் உறுதியளிக்க முடியுமா?
மேலும், இந்தியப் பிரதமர் எதிர்காலத்தில் என்றாவது ஒரு கட்டத்தில், இந்திய ஊடகங்களின் கடுமையான/விமர்சன ரீதியான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்குவாரா?

முடிந்தால் இதற்கு நீங்கள் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்".
இதற்கு சிபி ஜார்ஜ் கூறிய பதில் - "இந்தியா என்பது உலகிற்குத் தனித்துவமான பல விஷயங்களை வழங்கிய, இப்போதும் தொடர்ந்து வழங்கி வருகிற ஒரு நாகரிகத் தொட்டில்.
2023-ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு முன்பு ஒரு கூட்டுப் பிரகடனத்தைக் கொண்டுவர முடியவில்லை. அதன் பிறகு நடந்த ஜி20 மாநாடுகளிலும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை எட்ட முடியவில்லை.
விபரமில்லாதவர்கள்...
ஆனால், 2023-இல் இந்தியா ஜி20 மாநாட்டை நடத்தியபோது என்ன நடந்தது? உலக நாடுகளுக்கு இடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவரும் ஒன்றிணைந்தனர்.
நம்மால் 'டெல்லி பிரகடனம்' என்ற பொதுவான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இது இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
உண்மையில், பலருக்கு இந்தியாவின் பிரமாண்டத்தைப் பற்றிய புரிதலே இல்லை.
ஏதோ சில விபரமில்லாத தொண்டு நிறுவனங்கள் (NGOs) வெளியிடும் ஒன்று அல்லது இரண்டு செய்திகளைப் படித்துவிட்டு, இங்கு வந்து கேள்வி கேட்கிறார்கள்.

அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு ஜனநாயக நாடாக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் துடிப்பான ஊடகச் சூழல், வலுவான அரசியலமைப்புக் கட்டமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களே இதற்குச் சாட்சி."
ஹெல் லிங் உளவாளியா?
இந்தியா குறித்த ஹெல் லிங்கின் பேச்சு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. சிலர் ஹெல் லிங்கை 'உளவாளி' என்றும் விமர்சித்தனர்.
இவர் யார் என்று அவரது சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தால் தன்னை, "முன்னாள் அமெரிக்க நிருபர். தற்போது நார்வேஜிய செய்தித்தாளில் வர்ணனையாளர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம்
2024-ம் ஆண்டிற்குப் பிறகு, இவரது சமூக வலைதளம் கடந்த 18-ம் தேதி முதல்தான் மீண்டும் ஆக்டிவாகி உள்ளது.
மோடியை கேள்வி கேட்டப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் மோடியை முன்னிறுத்தி நார்வே பிரதமரிடம், "சுதந்திரமான பத்திரிகை சூழல் இல்லாதபோது நாம் ஏன் அவர்களை ஒரு ஜனநாயக நாடு என்று அழைக்க வேண்டும்?
மோடி கடந்த 12 ஆண்டுகளாகத் தனது சொந்த நாட்டில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. சுதந்திரமான பத்திரிகை சூழல் என்பது இனி ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக இருக்காதா?" என்று ஹெல் லிங் கேட்டுள்ளார்.

அதற்கு நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், "பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான்.
150 கோடி மக்கள், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட இந்தியாவில், பத்திரிகைத் துறையின் சில அம்சங்கள் நம்முடைய முறையிலிருந்து மாறுபட்டு இருக்கலாம்.
ஆனால், அந்த நாடு தனது மாநிலங்களிலும் தேசிய அளவிலும் தேர்தல்களை நடத்துகிறது. எனவே, இந்தியா ஒரு ஜனநாயகம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதன் வரலாறு மற்றும் அனுபவங்கள் நோர்டிக் நாடுகளிலிருந்து மாறுபட்டவை" என்று பதிலளித்துள்ளார்.
மோடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் தான்
இதன் தொடர்ச்சியாக ஜோனாஸிடம், "மோடி இங்கே எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளவில்லை. அதற்கு அவர் திட்டமிடவில்லை. நாம் அனைத்தையும் அவருடைய விருப்பப்படியே செய்ய வேண்டியிருந்தது" என்றும் ஹெல் லிங் பதிவு செய்துள்ளார்.
அதற்கு ஜோனஸ், "ஆம், ஆனால் அதை நாம் மதிக்க வேண்டும். பொதுவான பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேச வேண்டாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். நமக்கு அது (பத்திரிகையாளர் சந்திப்பு) இயல்பான ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுப்பதாலேயே அவர் ஒரு ஜனநாயகவாதி இல்லை என்று நான் கூறமாட்டேன். அவர் இந்தியாவில் தனது நாட்டுப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே செய்கிறார்" என்று பதிலளித்திருக்கிறார்.
மோடி கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் முன்பே கேள்விகள் கேட்கக்கூடாது என்று பத்திரிகையாளர்களிடம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

















