"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" - நடிகை அ...
`இப்ப தேவை 1 கோடி; ஆனா 10 ஆண்டுகள் கழித்து 1.79 கோடி தேவை' பணவீக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தப்பிக்கலாம்
இன்றைக்குப் பல பேருடைய டார்கெட் ஒரு கோடி ரூபாயை முதலீட்டின் மூலமாகச் சேர்க்க வேண்டும் என்பதுதான். சொந்தமாக இருக்கும் வீடு, பீரோவில் இருக்கும் தங்க நகை இவற்றை எல்லாம் தாண்டி ரூ.1 கோடி உங்கள் முதலீட்டில் இருக்க வேண்டும். அந்தப் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
இந்த ஒரு கோடி ரூபாயை வீடு, தங்க நகை, வங்கி எஃப்.டி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சேர்க்க நினைக்கிறார்கள். ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய நினைப்பவர்கள் நீண்ட கால நோக்கில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாதந்தோறும் அவரவர் முதலீட்டுத் திறனுக்கேற்பவும் எதிர்காலத் தேவையைப் பொறுத்தும், வயதைப் பொறுத்தும் முதலீட்டுத் தொகையை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் மூலமாகவோ அல்லது வங்கி எஃப்.டி., தங்கம், ரியல் எஸ்டேட் என எதன் மூலமாக முதலீடு செய்து எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்ப்பதாக இருந்தாலும், ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த முக்கியமான விஷயம்தான், பணவீக்கம். பணவீக்கம் என்றால் என்ன...?

பொருள்களின் விலை ஒவ்வோர் ஆண்டும் உயர்கிறது. பொருள்களின் விலை உயரும்போது, நம் வாங்கும் சக்தி குறைகிறது. இதனால் எதிர்காலத்தில் பல பொருள்களை நம்மால் வாங்கி அனுபவிக்க முடியாமல் போகும் நிலை உருவாகும்.
நம் வாங்கும் சக்தி குறையாமல் இருக்க வேண்டும் எனில், நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு குறையாமல், அதிகமாகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் பணவீக்கம் என்கிற பிரச்னையை நம்மால் சமாளிக்க முடியும்.
உதாரணமாக, ரமேஷுக்கு இப்போது 40 வயது. அடுத்த 20 ஆண்டு காலத்தில் ரூ.1 கோடியை சேர்க்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். மாதந்தோறும் ரூ.11,000 சேர்த்து இதற்கு 12% ஆண்டுதோறும் லாபம் கிடைக்கும் பட்சத்தில் அவர் சேர்க்க நினைக்கும் ரூ.1 கோடியை சேர்த்துவிட முடியும் என்று நினைக்கிறார் ரமேஷ்.

ஆனால், பணவீக்கம் என்கிற விஷயத்தை ரமேஷ் கணக்கில் கொள்ளவில்லை. இப்போது ஒரு கோடி ரூபாய் பணத்துக்கு இருக்கும் மதிப்பு, ஆண்டுதோறுமான பணவீக்கம் 6% என்கிற அளவில் இருக்கும்போது அடுத்த 5, 10, 15, 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக இருக்கும் தெரியுமா?
தற்போதைய மதிப்பு - ரூ.1 கோடி
5 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு - ரூ.74.73 லட்சம்
10 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு - ரூ.55.84 லட்சம்
15 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு - ரூ.71.73 லட்சம்
20 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு - ரூ.31.18 லட்சம்
ரமேஷ் அடுத்த 20 ஆண்டுகளில் சேர்க்க நினைத்தது ரூ.1 கோடி. ஆனால், 20 ஆண்டுகளில் அந்த ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.31.18 லட்சம் மட்டுமே. இந்த ரூ.31 லட்சத்தை வைத்து ரமேஷ் செய்ய நினைத்த பல செலவுகளை செய்ய முடியாது. 60 வயதாகிவிட்ட நிலையில், மேற்கொண்டு அதிகமான பணத்தையும் அவரால் சேர்க்க முடியாது. எனவே, 40 வயதில் பணம் சேர்க்கத் தொடங்கும்போதே பணவீக்கத்தைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை ஓரளவுக்குக் கணித்து, அந்த அளவுக்கான தொகையை ரமேஷ் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

ரமேஷ் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.1 கோடியை சேர்க்க வேண்டும் என்று நினைக்காமல், ஆண்டுதோறும் 6% என்கிற அளவில் பணவீக்கம் இருக்கும். அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அந்தத் தொகையை சேர்க்க நினைத்திருந்தால், அவர் தேவையைக் கொஞ்சம்கூட குறைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கும்போது பணவீக்கம் என்பதைக் கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், ரமேஷுக்கு அடுத்த 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் தெரியுமா?
இப்போது சேர்க்க நினைக்கும் பணம் ரூ.1 கோடி
5 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்படும் தொகை ரூ.1.34 கோடி
10 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்படும் தொகை ரூ.1.79 கோடி
15 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்படும் தொகை ரூ.2.40 கோடி
20 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்படும் தொகை ரூ.3.21 கோடி
ஆக, ரமேஷ் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3.21 கோடி அளவுக்கான பணத்தை சேர்த்து வைத்திருந்தால்தான் அவர் விரும்பும் பொருள்களை அவரால் வாங்கி அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது புரிகிறதில்லையா?

என்னது, அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3.21 கோடியை சேர்க்க வேண்டுமா? ரூ.1 கோடியை சேர்க்கவே நாக்கு தள்ளுகிறது. ரூ.3.21 கோடியை எப்படி சேர்ப்பது? இதற்கு எந்தப் பணத்தையும் சேர்க்காமல் இருந்துவிடலாமே என்று மட்டும் நினைக்காதீர்கள்.
உங்களால் முடிந்தால் ரூ.3.21 கோடியோ அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான தொகையையோ சேர்க்க ஆரம்பியுங்கள். இமய மலையை ஏற நினைக்கிறோம். ஆனால், பரங்கி மலையை ஏறினால்கூட சந்தோஷம்தானே!
குறைந்தபட்சம் ரூ.1 கோடியையாவது நீங்கள் சேர்க்க நினைத்தால்தான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் ரூ.31 லட்சம் அளவுக்கான மதிப்பு கொண்ட பணமாவது உங்களிடம் இருக்கும்.
நீங்கள் எந்தப் பணத்தையும் சேர்க்காமல் போனால், உங்களிடம் எந்தப் பணமும் இருக்காது. அப்போது உங்களுக்குத் தேவைப்படும் பணத்தைப் பெற மற்றவர்களிடம்தான் நீங்கள் கையேந்தி நிற்க வேண்டும். அந்த நிலை உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் எனில், உங்கள் எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை இப்போதே சேர்க்க ஆரம்பியுங்கள்!

SIP மூலம் பணம் சேர்க்கணுமா? SWP மூலம் பணம் எடுக்கணுமா?
மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் - 89259 44568
சபரிநாதன் - 89259 44569
தங்கலட்சுமி - 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

















