ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை 'லட்சங்களாக' மாற்றுவது ...
இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?
புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கைகோர்த்திருப்பதன் மூலம், புதுச்சேரியிலும் அந்தக் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. அதேபோல பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் இருந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக பேட்டி கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு தொகுதி உடன்பாடு குறித்து உள்ளூர் பா.ஜ.க-வினருடன் அவர் பேசாமல் இருந்தார். அதனால், `ல.ஜ.க தலைவரும், `லாட்டரி’ தொழிலதிபருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதை ரங்கசாமி விரும்பவில்லை. அதனால் சார்லஸ் மார்ட்டினை வெளியேற்றுமாறு பா.ஜ.க-வுக்கு ரங்கசாமி அழுத்தம் கொடுக்கிறார்’ என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.
இந்த நிலையில்தான் கடந்த 12.03.2026 அன்று, காமராஜர் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தன்னுடைய கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி.
நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி, `என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது, `என்.ஆர்.காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறதா..?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, `நாங்கள் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனை செய்தோம்’ என்று பதிலளித்ததுடன், த.வெ.க குறித்து எழுப்பிய கேள்வியை கவனமாக தவிர்த்தார்.
தொடர்ந்து, `மாநில அந்தஸ்து குறித்து உங்கள் கோரிக்கைக்கு மத்திய பா.ஜ.க பதிலளிக்கவில்லை. அதை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்குமா…’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ``எங்களைப் பொறுத்தவரை மாநில அரசின் மிக முக்கியமான கோரிக்கை. அதை வலியுறுத்துவோம்” என்று மட்டும் கூறினார். அதையடுத்து நேற்று 13.03.2026 அன்று புதுச்சேரிக்கு வந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுவில் மாண்டவியா, பா.ஜ.க அமைச்சர்கள், எம்.ல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதியில் ஆலோசனை செய்தார்.
அதன்பிறகு நேற்று மாலை தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, ``கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் இணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணிக்குள் வரும் புதிய கட்சிகள் குறித்தும் அவர்களுக்கான தொகுதிகள் குறித்தும் பிறகு அறிவிப்போம்” என்றார்.
அதற்கு, `எங்கள் முதல்வரையும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்த `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும்போது, பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்று சொன்ன விஜய் எங்கள் கூட்டணிக்குள்ளும் வரலாம்’ என்று பின்னணி பாடுகின்றனர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள். அதையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாலர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்.

அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல த.வெ.க-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை. மேலும் எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க கடந்த தேர்தலில் சீட் கேட்கவில்லை.
இந்த தேர்தலிலும் இதுவரை கேட்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும். கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால் 5 தொகுதிகள் ஒதுக்கினோம். இந்த தேர்தலில் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதையும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் விரைவில் பேசி முடிவு செய்வோம்” என்றார்.














