இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்; தள்ளிப் போகிறதா தனுஷ் படம்? 'வாழை 2' உண்மையா? - பரபர அப்டேட்
அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். 'பைசன்' படத்திற்கு பின் அடுத்து தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. 'கர்ணன்' படத்திற்கு பின் தனுஷ் -மாரி செல்வராஜ் இணையும் படம் எதிர்பார்ப்பிற்குள்ளாக இருக்கும் நிலையில், இப்போது 'வாழை 2'வை இயக்குகிறார் என்கிறார்.

எளிய மனிதர்களின் வலிகளையும் உணர்வுகளையும் தனது இயல்பான, விறுவிறுப்பான கதைகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் மாரிசெல்வராஜ். சமூகம் வெறும் செய்தியாகக் கடந்து செல்லும் விஷயங்கள் வெறும் செய்தி மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வாழ்க்கை, பெருங்கனவு என்பதை தனது படங்களில் சொல்லி வரும் மாரி செல்வராஜ், 'பைசன்' படத்திற்கு பின் தனுஷை வைத்து இயக்குகிறார் என்றார்கள்.
தனுஷும் `கர்ணன்' படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து படம் பண்ணுவேன்'' என அப்போது அறிவித்திருந்தார். 'கர்ணன்' வெளியான இரண்டாவது ஆண்டில் மாரி செல்வராஜை தன் வீட்டிற்கு அழைத்து, அடுத்த படம் குறித்து அறிவித்திருந்தார் தனுஷ்.
இப்போது தனுஷ் அடுத்தடுத்து கமிட்மென்ட்கள் வைத்திருப்பதால் இதற்கிடையே ஒரு படம் செய்துவிட தீர்மானிந்திருந்தார் மாரிசெல்வராஜ். 'பைசன்' படத்திற்கு முன் அவர் 'வாழை' படத்தை இயக்கியிருந்தார். அதன் முதல் பாதியில் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கடத்திய இயக்குநர் மெல்ல மெல்ல அந்த வாழைத்தாரின் சுமையை நமது தலையில் வைத்ததுபோலக் காட்சிகளை உலவவிட்டிருந்தார்.

தனுஷ் படத்திற்கு இடையே மாரி செல்வராஜின் 6 வது படமாக 'வாழை2' எடுக்கப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து மாரி செல்வராஜ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் படத்தின் கதையை ரெடி செய்து விட்டார். இதற்கிடையே அவர் ஒரு படத்தை இயக்குகிறார். அதன் கதையும் ரெடியாகிவிட்டது. ஆனால் இது 'வாழை 2' அல்ல. இது ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்ட கதை எனத் தகவல்.
இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர், கயாது லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள். 'பைசன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் இருவரும் கிராமத்து கதாபாத்திரங்களாகவே மாறியது போல, இந்த படத்தின் நடிகர்களும் அந்த கேரக்டர்களாகவே மாற உள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போவதாக சொல்கிறார்கள். இதற்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் என இணைந்த மாரி, முதல்முறையாக இளையராஜாவுடன் இணைவதால் பாடல்களும், பின்னணி இசையும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரத்திற்குள் ஆரம்பமாகிறது'' என்கிறார்கள்.
மாரி செல்வராஜ் - கதிர் கூட்டணியின் 'பரியேறும் பெருமாள்' படம் மாரி செல்வராஜ் மட்டுமல்ல... தமிழ் சினிமாவே மார்தட்டி சொல்லிக்கொள்ளும்படியான படைப்பாக இருந்தது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் அழுத்தமான ஒரு கதையை எதிர்பார்க்கலாம் என்கின்றனர். இதற்கிடையே தனுஷ் பட வேலைகளும் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறதாம்.!
















