5 States Exit Poll 2026 Live: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? - இன்று மாலை வெளிய...
ஊட்டி: மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழப்பு; மற்றொன்றை சென்னைக்கு அனுப்ப முடிவு
வங்கப் புலிகளின் வாழிடப் போதாமை என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வாழிடங்களை இழந்து தவிக்கும் புலிகளால் மனித உயிர்கள் பறிபோகின்றன.
மனித செயல்பாடுகளால் புலிகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்தான் ஊட்டி அருகில் உள்ள சோலாடா பகுதியில் இரண்டு புலி குட்டிகள் உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரிவதைப் பார்த்த கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் கடந்த 4 நாள்களே தேடுதல் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் 2 புலி குட்டிகளையும் உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த நீலகிரி வனக்கோட்ட அலுவலர்கள், "மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். 2 புலி குட்டிகள் தனியாக இருப்பதை உறுதி செய்தோம். தாய் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் நவீன கேமராக்களைப் பொறுத்தி கண்காணித்தோம்.
ஆனால், தாய் புலியின் நடமாட்டம் தென்படவில்லை. வேறு வழியின்றி இரண்டு குட்டிகளையும் மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிறந்து 5 மாதங்களே ஆன அந்தப் புலி குட்டிகளால் தனியாக வேட்டையாட முடியவில்லை. உணவின்றி உடல் மெலிந்து காணப்பட்டது.
சிறந்த கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பராமரித்து வந்தோம். ஒரு புலி குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மற்றொன்றை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய் புலி என்ன ஆனது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது" என்றனர்.



















