``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
"எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்" - டிடிவி தினகரன் பேச்சு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
"மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக்கூடியவர். அவர் தி.மு.க-வில் இணைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் இது போன்ற முடிவெடுப்பது துரதிஷ்டவசமானது.
அ.தி.மு.க-வே தற்போது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி தி.மு.க தான். நான் இதைச் சொன்னால் மதுரையில் உள்ள உதயகுமார் கோபித்துக் கொண்டு, 'எங்களை ஒன்று சேர்க்க நீங்கள் யார்?' என்று கேட்கிறார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் பலரும் வேறு இடங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
VIDEO | Chennai, Tamil Nadu: Former CM O Panneerselvam's supporter PH Manoj Pandian joins DMK in the presence of CM MK Stalin; says 'I want to work with a party that stands strongly for Dravidian ideology.
— Press Trust of India (@PTI_News) November 4, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/OiZh8pX2z7
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்களாக விரும்பி ஆரம்பிக்கவில்லை. எங்களை அவர்கள் தான் ஆரம்பிக்க வைத்தார்கள். எடப்பாடி பழனிசாமி எரியும் கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்தார். இப்போது செங்கோட்டையனை நீக்கியதால் அது கொழுந்து விட்டு எரிகிறத. அதைச் சொன்னால் வருத்தப்படுகிறீர்கள்.
உங்கள் அளவுக்கு எங்களிடம் பண பலம் இல்லை என்றாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 100 முதல் 150 ஒன்றிய கவுன்சிலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஒரு சிலரை அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி பணம் கொடுத்து உங்களோடு சேர்த்துக்கொண்டீர்கள்.
எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டுத் திரிகிறார். போன தேர்தலில் நாங்கள் எம்.எல்.ஏ ஆகவில்லை. எம்.பி ஆகவில்லை.. ஆனாலும் உங்களால் ஆட்சியை பிடிக்க முடிந்ததா? கடந்த தேர்தலில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அந்த பணத்தை எல்லாம் வைத்து தொழிற்சாலை கட்டியிருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கு பல ஆயிரம் கோடி பணத்தைக் கொட்டி முயற்சி எடுத்தீர்கள். இந்த முறை அதுவும் நடக்காது. தமிழக மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். நீங்களும் திருந்த போவதில்லை. அதனால்தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க-வில் இணைந்து விட்டார். அவரது அப்பா உள்பட பலர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க-வில் இருந்தவர்கள், பழனிச்சாமியின் நடவடிக்கையால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வெளியேறி விட்டார்கள். மனோஜ் பாண்டியனும் தி.மு.கவுக்கு சென்றிருக்கிறார்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட வாய்ப்பு குறைவு. எங்கள் தலைமையில் கூட்டணி அமையுமா என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமியைப் போன்று பிரமாண்டமான கட்சி கூட்டணிக்கு வருகிறது என்று நான் தொண்டர்களை ஏமாற்ற மாட்டேன். எனவே காலம் இருக்கிறது உறுதியாக எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். நிர்வாகிகளின் மன ஓட்டத்துக்கு ஏற்ப முடிவெடுப்பேன்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நேற்று கூட கோவையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு சரியில்லாமல் இருந்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாங்கள் உள்பட மற்ற கட்சிகள் அனைவருமே யோசிக்க வேண்டும்" என்று கூறினார்.















