Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
"ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா
ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி
புதுக்கோட்டை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
"வரும் நாட்களில் பா.ஜ.க, அ.தி.மு.க, இன்னும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறோம். எப்படியாவது தி.மு.க கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம். ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்று சொன்னால் அது தி.மு.க-தான்.

இந்துக்கள், அவர்களது சமய நம்பிக்கை, வழிபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் பூமி பூஜையின்போது அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்படுகிறது அரசமைப்பின் மாண்பை, இந்துக்களின் சமய நம்பிக்கையை குலைத்துள்ளீர்கள் ஸ்டாலின்" என்றார்.
அண்ணாமலை
அடுத்து பேசிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை,
"தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருட்டு ஆட்சியில் இருந்து மக்களை காப்பதற்காக இந்த யாத்திரை நடைபெற்றுள்ளது. தி.மு.க-வை பற்றி ரோடு முதல் வீடு வரை திட்டுகிறார்கள். நான் சொல்வதற்கு இன்னும் என்ன இருக்கிறது?. ஏதாவது செய்து தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். 2026 - க்கு பிறகு தி.மு.க வேண்டாம் என்று மக்கள் சொல்வது யாத்திரையின் வெற்றியை பிரதிபலிக்கிறது. எதிர்கட்சித் தலைவரும் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 2026 - ல் மாற்றம் நிகழ்ந்தே தீரும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையதினருக்கே பாதுகாப்பு இல்லை.

முதல்வரே பொய் சொல்லும் ஆட்சி இது. தி.மு.க கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார். வாக்குறுதிகள் நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாவட்ட வாரியாக கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க இணையதள பக்கத்தில் இருந்து நீங்கியுள்ளனர். தமிழகத்தில் என்ன நடக்கிறத்து என்றே தெரியாமல் 4 ஆண்டு காலம் கடத்தியிருக்கிறார் முதல்வர். தமிழகம் வரும் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்கிறார்கள். பொங்கல் பரிசாக ரூ. 3000 கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்" என்றார்.
`முதல்வரின் போலியான மதச்சார்பின்மை' - நயினார் நாகேந்திரன்
அடுத்து பேசிய, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்,
"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. பா.ஜ.க அனைத்து மத விழாக்களிலும் கலந்துகொள்கிறது. முதல் அமைச்சர் போலியான மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறார். தி.மு.க கூட்டணி என்பது போலியான கூட்டணி. கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்புக்கு செந்தில் பாலாஜிதான் காரணம். உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம்.

செந்தில் பாலாஜியை காப்பாற்றவே கரூருக்கு இரவோடு இரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய போலியான கூட்டணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அமித் ஷா உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி" என்றார்.


















