`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை ...
ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது.
அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற்றி பெற்றார், ஓ.பி.எஸ்ஸுக்கென தனித்த செல்வாக்கு இல்லை என்கிற பேச்சுகளும் தொகுதி முழுவதும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் அதிமுக-வை எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என அவருடைய ஆதரவாளர்களால் சொல்லப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட் கொடுத்த த.வெ.க, ஓ.பி.எஸ்-ஸுக்கு கடுமையான போட்டியாளராக மாறியது. இறுதியில் போராடி கரை சேர்ந்திருக்கிறார் ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ் வெற்றி பெற்றது எப்படி?
ஓ.பன்னீர் செல்வம் யாருடன் சேரப் போகிறார் என முடிவெடுக்க தாமதமானதாலேயே அவருடன் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலரும் திமுக-வில் ஐயக்கியமாக, தொண்டர்களோ அதிமுக-வில் இணைந்தனர். இனி ஓ.பி.எஸ்ஸுக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்ற நிலையில்தான் திமுக-வில் இணைந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்கிஸ்ஸை தொடங்கினார் ஓ.பி.எஸ்.
அதிமுக-வில் இருந்தபோது திமுக-வில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்கள், அரசியல் செய்தவர்கள் அனைவரையும் தானாகவே நேரடியாக சந்தித்து நட்பாக்கி கொண்டார். கட்சியில் சேர்ந்ததும் முக்குலத்தோர் சமூக மக்களிடையேயும், திமுக-விற்கு ஆதரவாக வாக்களியுங்கள் என பிரசாரங்களை செய்ய தொடங்கினார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தொகுதியில் உள்ள ஒரு அமைப்பு விடாமல் அனைவரையும் சந்தித்து தனக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டு கொண்டார். ‘பென் டீம்’ போடிநாயக்கனூரை அலசி ஆராய்ந்து தேர்தல் வியூகங்களை அவருக்கு வகுத்து கொடுத்தது.
மேலும் தனக்கு அதிகமாக வாக்கு வாங்கி கொடுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும், அரை பவுன் தங்கமும் கொடுப்பதாக ஆஃபர் கொடுத்தது நன்றாகவே எடுப்பட்டது. அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாததது போன்ற காரணங்களால் தி.மு.க சாதகமாக இருக்க அவர்கள் கண்டுகெள்ளமால் விட்ட த.வெ.க தான் கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ், ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்து கட்சி தொடங்கியதும், மாவட்டச் செயலாளராக பொறுப்பு வாங்கியவர். பெரும்பாலான இளைஞர்களுக்கு அறிமுகமான முகம் என்றதோடு, கட்சி தொடங்கியதிலிருந்தே தொகுதி மக்களை பார்த்து அறிமுகமாகியிருக்கிறார். இதனால் அறியப்படுகிற முகமாகவும் வலம் வந்தார். இது தேர்தலின் போது எதிரொலித்தது. ஆரம்பத்திலிருந்தே லீடிங்கில் சென்ற பன்னீர் செல்வம் அதன் பின் பின்தங்கத் தொடங்கினார்.

10-வது சுற்றின் போது தவெக முன்னிலை பெற்றபோது பதறிப்போனார் ஓ.பி.எஸ். அதன் பின்பு 200 ஓட்டுகள் லீடிங்கில் தவெக-வை முந்தியவர், அதே கணக்கிலேயே தொடர்ந்து வந்தார்.
கடைசி சுற்றின் போதுதான் கூடுதலாக வாக்குகளை பெற்று, இறுதியில் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஓ.பி.எஸ். இதன் மூலம் தன்னுடைய ஆறாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஓ.பி.எஸ்.




















