3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? ...
கடன் பிரச்னையால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்களா? - 12 லக்னக்காரர்களுக்கும் எளிய பரிகாரங்கள்!
`கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று ஒரு பாடல் வரி உண்டு. சகல உலகங்களையும் அடக்கி ஆண்ட ராவணனுக்கு உண்டான மனக்கவலையை கடன் வாங்கியவரின் நிலைமையோடு ஒப்பிடுகிறார் கவிராயர்.
அந்த அளவுக்குக் கொடுமையானது கடன் பிரச்னை. ஜாதகத்தில் 6 ம் இடம் கடனுக்கானது (கடனுக்கானது மட்டுமல்ல நோய் மற்றும் எதிரிகளையும் குறிக்கும்.)
இந்த 6-ம் இடத்தின் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு ஆகிய நிலையிலிருந்தால், ஆயுள் முழுதும் ஏதோ ஒருவகையில் கடன் பிரச்னை இருக்கும். இந்த இடத்தில் சனியைத் தவிர மற்ற கிரகங்கள் இருக்கலாம்.

6-ம் இடத்தின் அதிபதியான கிரகத்தின் தசை நடக்கும் காலத்திலும் கடன்கள் உண்டாகும்.
ஏழரைச் சனி நடைபெறும்போது உண்டாகும் கடன்கள் அவமானத்தைத் தரலாம். அஷ்டம ராசியில் சனி சஞ்சரிக்கும்போது கடன் வாங்கினால் மனநிம்மதி பறிபோக வாய்ப்புண்டு. அதேபோல் 6, 8 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது கடன் வாங்கினால், திரும்ப செலுத்தமுடியாத சூழல் உருவாகும். சந்திராஷ்டம நேரத்தில் உண்டாகும் கடன்களால் புதிய பிரச்னைகள் தோன்றும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் திண்டாடும் அன்பர்களுக்கு ஜோதிடம் சொல்லும் எளிய பரிகாரங்கள் உள்ளன.
இதோ 12 லக்னக் காரர்களுக்குமான பரிகாரங்கள்:
மேஷ லக்னம்:
இதன் அதிபதி செவ்வாய். இதற்கு ஆறாம் பாவம் கன்னி. புதன் கன்னிக்கு அதிபதி. செவ்வாயும் புதனும் பகை ராசிகள். ஆகவே, ஜாதகத்தில் புதன் சூரியனுடன் இருப்பது நன்மையைத் தரும். மாறாக வேறு எப்படி இருந்தாலும் சிறு சிறு கடன்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட கடன் குறையும்.
ரிஷப லக்னம்:
சுக்கிரனை அதிபதியாகக்கொண்ட ரிஷப லக்னத்துக்கு 6-ம் வீடு துலாம். துலாத்துக்கு அதிபதியும் சுக்கிரன்தான். சூரியனோடு சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் குருவோடு சேர்ந்திருந்தாலும் கடன் தொல்லை தீராது. இல்லையெனில் பரிகாரம் செய்யவேண்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்ரஹோரையில் (காலை அல்லது இரவு ) மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் கடன் சுமை படிப்படியாகக் குறையும்.
மிதுன லக்னம்:
புதனை அதிபதியாகக்கொண்ட மிதுன லக்னத்துக்கு 6-ம் இடமான விருச்சிகம்; அதிபதி செவ்வாய். இவர் மகரம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் பிரச்னை நிறைய உண்டு.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு. ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சமர்ப்பியுங்கள். வெற்றிலை மாலை சாத்துவதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.

கடக லக்னம் :
சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடகம். இதற்கு ஆறாம் இடத்தின் அதிபதி குரு. இவர் மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் தொல்லைகள் ஏற்படும்.
பரிகாரம்:
திங்கள்கிழமைகளில் ஏழுமலையானை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். நெய் தீபம் சிறப்பு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நின்றகோலப் பெருமாளை தரிசனம் செய்வது அவசியம்.
சிம்ம லக்னம்:
சூரியனின் ஆதிக்கம் கொண்ட லக்னம் இது. இந்த லக்னத்துக்கு 6-ம் இடமான மகர ராசிக்கு அதிபதி சனி. இவர் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால், கடன்தொல்லை அதிகமிருக்கும்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நீராடிவிட்டு உதய வேளைக்கு முன்பாக சூரிய பகவானுக்கு 3 முறை அர்க்கியம் விட வேண்டும். கோதுமையில் சர்க்கரைப்பொங்கல் செய்து சமர்ப்பணம் செய்துவர கடன் குறையும்.
கன்னி லக்னம் :
புதனை அதிபதியாகக் கொண்ட லக்னம். கன்னிக்கு 6-ம் இடமான கும்ப ராசியின் அதிபதி சனி. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் கடன் சுமை ஏற்படும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டு நெய்தீபம் இடுவது சிறப்பு. மேலும் தாயாருக்கு வாசனை மலர்களை சமர்ப்பித்துவர சகல நன்மைகளும் கூடும்.
துலா லக்னம்:
சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இந்த லக்னத்துக்கு ஆறாம் அதிபதி குரு. இவர் மேஷம், கடகம், தனுசு மற்றும் மீன ராசிகளில் இருந்தால் கடன் தொல்லை இருக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகள் குருஹோரையில் மௌனவிரதம் இருந்து ஆலயம் சென்று நவகிரக குருவை பிரதட்சணம் செய்து வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். கடனும் படிப்படியாகத் தீரும்.
விருச்சிக லக்னம்:
செவ்வாய் அதிபதியாக உள்ள விருச்சிக லக்னத்துக்கு 6-ம் இடம் மேஷம். இதற்கு அதிபதி செவ்வாய். இவர் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசியிலிருந்தால் கடன்கள் கஷ்டம் தரும்.
பரிகாரம்:
முருகன் வழிபாடு இவர்களுக்கு அருமருந்தாகும். கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்யவேண்டும். தொடர்ந்து 45 நாள்கள் பாராயணம் செய்து வர கடன் பிரச்னைகள் தீர வழிபிறக்கும்.
தனுசு லக்னம்:
குருவின் ஆதிக்கம் கொண்ட தனுசு லக்னத்துக்கு ஆறாம் ராசி ரிஷபம். அதிபதி சுக்கிரன். இவர் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளிலிருந்தால் கடன்தொல்லை பெரும் தொல்லையாக இருக்கும்.
பரிகாரம்:
சக்கரத்தாழ்வார் வழிபாடு விசேஷம். பெருமாள் கோயிலுக்குச் சென்று கை அளவேணும் துளசி வாங்கி சமர்ப்பியுங்கள். 11 வாரங்கள் தொடர்ந்து செய்ய கடன்களுக்குத் தீர்வு உண்டாகும்.

மகர லக்னம்:
சனியின் ஆதிக்கம்கொண்ட மகர லக்னத்துக்கு 6-வது ராசி மிதுனம்; அதிபதி புதன். இவர் மிதுனம், கன்னி, விருச்சிக ராசிகளில் நின்றிருந்தால், கடன்கள் தொடர்கதையாக இருக்கும்.
பரிகாரம்:
புதன்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். ஏகாதசியில் ஒருவேளை உபவாசமாவது இருந்து பெருமாளை வணங்குங்கள். கடன் தொல்லை விரைவில் நீங்கும்.
கும்ப லக்னம்:
சனியின் ஆதிக்கம்கொண்ட கும்ப லக்னத்துக்கு 6-வது ராசி கடகம்; அதிபதி சந்திரன். இவர் கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் கடன்கள் தொல்லை தரும்.
பரிகாரம்:
பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொள்ளுங்கள். வாய்ப்பிருப்பவர்கள் திங்களூர் சென்று வழிபட்டு வாருங்கள். பிரதோஷ பூஜையில் நந்தி அபிஷேகத்துக்கு பசும்பால் வாங்கி சமர்ப்பியுங்கள்.
மீன லக்னம்:
குருவின் ஆதிக்கம்கொண்ட மீன லக்னத்துக்கு ஆறுக்குடையவன் சூரியன். இவர் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் நின்றால் கடன்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்:
சிவ வழிபாடு சிறந்தது. திங்கட்கிழமை மற்றும் சிவராத்திரி திதி நாள்களில் சிவாலய தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொள்ள கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.


















