உறவை புதுப்பிக்க மறுப்பு; மாஜி காதலியை அலுவலகத்திற்குள் ஓடஓட விரட்டி 20 முறை குத...
`கட்டாய மதமாற்ற முயற்சி; துன்புறுத்தல்' - விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் `பகீர்' புகார்
சமீபத்தில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் போன்ற சம்பவங்கள் நாசிக் அலுவலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம், இப்போது விப்ரோவிலும் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்து இருக்கிறார். புனேயில் உள்ள விப்ரோ சாப்ட்வேர் அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்ததாக பெங்களூரை சேர்ந்த அப்பெண் குற்றம்சாட்டி இருக்கிறார்.
அப்பெண் கொடுத்துள்ள புகாரில், ``புனேவின் ஹிஞ்சேவாடியில் உள்ள விப்ரோ நிறுவன வளாகத்தில் பணிபுரிந்தபோது, எனது மத நம்பிக்கைகள் காரணமாகவே சில மூத்த மேலாளர்கள் மற்றும் குழுத் தலைவர்களால் குறிவைக்கப்பட்டேன்.

இஸ்லாம் மதத்திற்கு மாறும்படியும், அந்த மத நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் எனக்கு தொடர்ச்சியாக மனரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதோடு அதனை எதிர்த்தபோது பணியிடத் துன்புறுத்தல் தீவிரமடைந்தது.
மேலும், எனது மேலாளர் மோசமான செயல்திறன் மதிப்பாய்வைக் கொடுத்து பணிநீக்கம் செய்வதாக மிரட்டினார். அதோடு திருமணம், வெளிநாட்டு வாழ்க்கை என மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர். அவர்களது கோரிக்கையை நிராகரித்தபோது துன்புறுத்தல் அதிகரித்தது. மன அழுத்தம் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் காரணமாக வேலையை விட்டுவிட்டேன். இது குறித்து விப்ரோ கம்பெனியில் புகார் செய்தபோது எந்த பதிலும் இல்லாததால் இதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் புனே போலீஸில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி பாலாஜி கூறுகையில், ''விப்ரோவின் பெண் திட்ட மேலாளர் ஒருவர் காப்பீடு தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது பெண் சக ஊழியர் தன்னைப் பற்றி சில ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக எங்களிடம் புகார் அளித்துள்ளார். அதோடு அந்த பெண் ஊழியர் தன்னை ராஜினாமா செய்யும்படி தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம். அப்பெண்ணின் புகார் மீது கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குற்றச்சாட்டை விப்ரோ நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விப்ரோவில், ஊழியர்களின் நலன், கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவை முதன்மையானவை. எந்தவொரு வகையிலான முறைகேடு, பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதிக்கும் செயல்கள் ஆகியவற்றின் மீது நாங்கள் எந்த வித சகிப்புத்தன்மையும் காட்டுவதில்லை. போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



















