"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும...
மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?
கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்து வந்தது. ஆனால் ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு கடுமையான கடன் சுமையில் இருக்கிறது.
லாட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் திட்டத்திற்கு அதிக அளவில் நிதி செலவிட வேண்டியிருக்கிறது.
2026–27ல் மாநிலத்தின் மொத்த பொதுக்கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் லாட்கி பஹின் யோஜனா போன்ற நலத் திட்டங்களுக்கு அதிக கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

லாட்கி பஹின் யோஜனாவுக்கான, பயனாளிகள் எண்ணிக்கை 80 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மாநில பட்ஜெட்டில் 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.26,500 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய திருப்பமாக மாநில அரசு விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. மொத்தம் ரூ. 36,600 கோடி அளவுக்குகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது 55.7 லட்சம் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளது.
தற்போது சட்டமேலவை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடன் வாங்கிய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பட்னாவிஸ் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், செப்டம்பர் 30, 2025 வரை பயிர்க்கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், தங்கள் பயிர்க்கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இப்போது, ரூ. 2 லட்சம் வரை கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளின் முழு கடனையும் அரசு செலுத்தும். ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான கடன் உள்ள விவசாயிகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னரே, மீதமுள்ள ரூ. 2 லட்சம் கடனை அரசு செலுத்தும்.
அதே சமயம், தங்கள் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்,” என்று ஓர் அதிகாரி கூறினார்.
அதேசமயம் ஜூன் மாதம் வரை கடனைத் தாமதப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கண்டித்தன. கடந்த ஆண்டு, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று பட்னாவிஸின் அறிவிப்பு குறித்து விமர்சித்திருந்தார்.
இதற்கு முன்பு 2019ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசும் இதே போன்று ரூ.2 லட்சம் அளவுக்கு உள்ள விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தது. அதற்கு முன்பு 2017ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசு 1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது.
ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும்போது விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை மட்டும் மகாராஷ்டிராவில் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.




















