FIFA: கத்தார் அணியில் ஒரு கண்ணூர் புயல்! தந்தையின் கனவை சுமந்து உலகக்கோப்பையில்...
`ஷாருக் கானுக்கு கிரிக்கெட்டே பிடிக்காது; அவரை கொல்கத்தா அணியின் உரிமையாளராக்கினேன்..!'- லலித் மோடி
இன்றைக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிதான் முக்கிய காரணம் ஆகும். அவர் தான் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து ஐ.பி.எல். அணிகளை விலைக்கு வாங்க வைத்தார். பாலிவுட் நடிகர்கள் ஐ.பி.எல் அணிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இந்த கிரிக்கெட் போட்டிகளை மிகவும் பிரபலப்படுத்த முடியும் என்று லலித் மோடி நினைத்தார். இதனால் ஷாருக் கான் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியையும், நடிகை பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியையும், நடிகை ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் அணியையும் விலைக்கு வாங்கினர்.
தற்போது லண்டனில் இருக்கும் லலித் மோடி ஷாருக் கானை எப்படி ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை வாங்க வைத்தார் என்பது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பேட்டியில், ''நான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராக இருந்தபோது ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றை காண ஷாருக் கானை அழைத்துச் சென்றேன். ஜெய்ப்பூரில் நடந்த முதல் சர்வதேசப் போட்டி இது. இது ஐபிஎல்-க்கு முந்தையது. ஒரு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன்.
அவர் வந்ததால் கூட்டம் முற்றிலும் வெறித்தனமாக இருப்பதை நான் பார்த்தேன். அவர் போட்டியின் ஹைலைட்டாக ஆனார். கிரிக்கெட்டையும் பாலிவுட்டையும் இணைத்து இந்திய தொலைக்காட்சியுடன் போட்டியிடக்கூடிய ஒரு பிரான்ச்சைஸ் கிரிக்கெட் லீக்கை உருவாக்குவது குறித்து ஏற்கெனவே நான் ஆலோசித்துக் கொண்டிருந்தேன்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை கிரிக்கெட் ஆக்கிரமித்து இருந்தது. இந்தியாவில், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டு பொருள்கள் விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகிறது. கிரிக்கெட் தொடர்பான விளம்பரதாரர்களில் தொடர்புடைய பணத்தை நான் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
மீதமுள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மாமியார், மருமகள் நிகழ்ச்சிகளுக்கானது. எனவே கிரிக்கெட்டை மட்டும் வைத்து ரசிகர்களை இழுக்க முடியாது என்று நினைத்தேன். எனவேதான் பாலிவுட் பிரபலங்களை ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களாக மாற்ற முடிவு செய்தேன். அதற்கு ஷாருக் கான் சரியான ஆளாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஷாருக் கான் கிரிக்கெட் ரசிகர் கிடையாது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஷாருக் கானுக்கு கிரிக்கெட் பிடிக்காது, கிரிக்கெட்டைப் பற்றியும் அவருக்கு உண்மையில் புரியாது.
அவர் ஒரு கால்பந்து ரசிகர். நான் அவரிடம் ஓர் அணியை வாங்கச் சொன்னபோது, அவர் தயங்கினார். எனக்கு கிரிக்கெட் புரியாது என்றார். நான் அவரிடம் அதை என்னிடம் விட்டுவிடுமாறும், சரியான அணியும் அமைப்பும் அமைக்கப்படுவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அடுத்து நான் ஓர் அணியை வாங்க நேர்ந்தால், அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். முன்பணம் ரூ.20 கோடியாக இருக்கும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
ஆனால் அது தனக்கு பெரிய முதலீடு என்று சொன்னார். அந்த நேரத்தில் மொபைல் போன் பிராண்டுகளில் ஒன்றான நோக்கியா, ஷாருக் கானை தங்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய ஆசைப்பட்டது, ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவருடைய ஒப்புதல் வியாபாரத்தில் என்னால் தலையிட முடியவில்லை. அதனால் நான் நோக்கியாவிடம் கேட்டேன், ஷாருக் கான் ஓர் அணியை விலைக்கு வாங்கினால், அந்த அணியின் ஜெர்சியின் முன்பக்கத்தை ஸ்பான்சர் செய்வீர்களா? என்று நோக்கியா நிறுவனத்திடம் கேட்டேன்.
ஷாருக் கான் உங்களின் டீஷர்ட் மற்றும் தொப்பிகளை அணிவார் என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று அவர்களிடம் சொன்னேன். மேலும் அவர்களிடம் $5 மில்லியன் அட்வான்ஸ் கொடுப்பீர்களா என்று கேட்டேன். அவர்கள் ஆம் என்றார்கள். இந்த ஏற்பாடு இரு தரப்பினருக்கும் வெற்றியாக அமைந்தது. மேலும் இது அனைத்தும் ஒரே நாளில் நடந்தது. 12 மணிக்கு, ஷாருக் கான் ஒரு காசோலை எழுதி அணியை விலைக்கு வாங்க கொடுத்தார். மாலைக்குள், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்பான்சர் செய்ய நோக்கியா மற்றொரு காசோலையை எழுதிக் கொடுத்தது'' என்றார்.


















