செய்திகள் :

கன்னத்தில் முத்தமிட்டால் : தாயின் பாடல் | அமுதாவின் கேள்விக்கு பதில்? | `சினி'ஸ்கோப் 05

post image

ஒன்பது வயதே ஆகும் அமுதா, மிகப்பெரிய ஒரு போராட்டத்திற்கு பின்னர், தான் விருப்பப்பட்டபடியே தன்னை ஈன்ற அம்மாவைச் சந்திக்கிறாள்.

இந்தச் சந்திப்பு இத்தனை வலி நிறைந்ததாய், இத்தனைச் சிரமமானதாய் இருக்கும் என்பதை அவள் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அந்த நிலையில் தன் அம்மாவைக் கேட்கிறாள்.

“என்னை ஏன்ம்மா விட்டுட்டு போயிட்டீங்க?”

அவ்வளவு பெரிய கேள்விக்கு பின்னால் இருப்பது ஒரு பெருவலி. அப்படியானால் அதற்கான பதில் இன்னும் எத்தனை வலி நிறைந்த தாய் இருக்கும்? அதை ஓர் ஒன்பது வயது குழந்தைக்குப் புரியும்படி சொல்லிவிட முடியுமா? புரிந்தாலும் கூட அந்த வலியை ஒரு தாயால் தன் குழந்தைக்குத் தரத்தான் முடியுமா? பதிலின்றித் தவிக்கிறாள் சியாமா. மிக நீண்ட அமைதிக்குப் பிறகு வாய் திறக்கிறாள்.

“தருணம் அப்படி”

கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05
கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05

பெற்றெடுத்த தாயும், தந்தையும், பிறந்து கிடந்த மண்ணும்தான் ஓர் உயிரின் அடிப்படை மற்றும் ஆதார அடையாளம். அதில் எந்தச் சிக்கலும் இல்லாத நம்மைப் போன்ற மனிதர்களே, ஓர் அடையாளத்தைத் தேடி நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த அடிப்படை அடையாளத்தையே இழந்த புலம்பெயர் மக்களின் வலியை நம்மால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்.

அதைச் சொல்ல முயன்ற ஒரு படம்தான் இந்தக் ’கன்னத்தில் முத்தமிட்டால்’!

ஈழத்தின் இக்கட்டான போர்ச்சூழலில், ஓர் அப்பாவிப் பெண்ணான சியாமா, புலம்பெயர் அகதியாய் இந்தியாவை வந்தடைகிறாள். அவளுக்கென்று ஓர் அழகான காதலும், வாழ்க்கையும் இருந்தது. அதன் பரிசாக அவள் இப்போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள்.

பிள்ளையைப் பெற்ற கையோடு நிற்கும் அவளை, மண்ணுக்கான விடுதலைக்காக அவளது பங்கைக் கோரி நிற்கிறது தாய்நிலம். கைவிடவே முடியாத ஓர் உறவைக் கைவிட்டுவிட்டுச் செல்கிறாள். காலம் அந்தக் குழந்தையின் மீது சற்றே கருணை காட்டுகிறது.

மனிதர்களுக்காகச் சிந்திக்கும் ஓர் எழுத்தாளனின் கண்களில் படுகிறாள் அமுதா.

அந்த எழுத்தாளன் திருச்செல்வனும், அவனது காதலி இந்திராவும் அமுதாவை முன்னிட்டே இணைகிறார்கள். இன்னும் இரண்டு பிள்ளைகளும் பிறக்க அவர்களின் குடும்பம் ஓர் அழகான பறவைக்கூடாகிறது. அன்பையும், அறிவையும் ஒருங்கே கைக்கொண்டிருக்கும் திருச்செல்வன், ஒன்பதாவது பிறந்த நாளில் அமுதாவிடம், அவளது பிறப்பைப் பற்றிக் கூறுகிறான்.

பிஞ்சு மனதிற்குள்ளோ தாங்கவியலாத சூறாவளி. அதனால் பெற்ற தாயைச் சந்திக்க ஆசைப்படுகிறாள். அவளது போராட்டம், போர்க்களத்தின் நடுவே நின்றுகொண்டிருக்கும் அவளது தாயிடம் கொண்டு சேர்க்கிறது. அமுதாவின் கேள்விகளுக்கு தாயிடமிருந்து விடைகிடைத்ததா என்பதே கதையின் முடிவு.

கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05
கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05

2002ல் வெளியான இப்படத்தை நாம் இப்போது 2026ல் மீள்வாசிப்பு செய்துகொண்டிருக்கிறோம்.

இரண்டாம் உலகப்போரின் தாக்கத்துக்குப் பிறகு கடந்த 2025ம் ஆண்டை மிக அதிக போர்ப் பாதிப்புகளால் தாக்குண்ட ஆண்டு எனக்குறிப்பிட்டு, ஒஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம் (Peace Research Institute, Oslo - PRIO) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகளவில் அதிகப்படியான அரசுகள் சார்ந்த போர்கள், மற்றும் நாடுகளுக்கிடையேயான நேரடியான மோதல்கள் (8 Interstate conflicts) நடந்த ஆண்டாக 2025 பதிவாகியுள்ளது. குறிப்பாக ரஷ்ய-உக்ரேன் போர், சூடான் உள்நாட்டுப்போர், மத்தியக்கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்றவை அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

2025-ல் மட்டும் சுமார் 2,45,000 பேர் போர்க்கள வன்முறைகளால் உயிரிழந்துள்ளனர். அதற்காக, அதற்கு முன்பாக இத்தனை ஆண்டுகளாக உலகம் அமைதியாக இருந்ததாக எண்ணிவிடாதீர்கள். ஒவ்வொரு ஆண்டுமே ஆயிரக்கணக்கில், சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் உயிர்ப்பலிகளைப் ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன போர்கள்.

சுமார் 26 ஆண்டுகால ஈழவிடுதலைக்கான போரிலும் லட்சக்கணக்கில் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டுள்ளனர். தனி ஈழத்துக்கான இலங்கை உள்நாட்டுப் போரின் குறிப்பித்தக்க நிகழ்வான 1995-2001 போர்க் காலகட்டத்தின் பின்னணியில் இந்தக் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கதை புனையப்பட்டுள்ளது.

அறிவுலகால், போர் என்பது மனிதகுலத்தின் தோல்வி மற்றும் அவமானம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால், போரில்லாத உலகைக் காண்பது என்பது கனவாகவே போய்விடும் போலிருக்கிறது.

மணிரத்னத்தின் கதைக்களங்கள் எப்போதும் புதிதானவை என்று சொல்வதை விட நாம் அறியாத மற்றும் அறிந்துகொள்ள வேண்டிய களங்களாகவே இருந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

’கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஒரு குழந்தையின் கோணத்திலிருந்து போரின் இழப்புகளை, போரின் வலியை நமக்குக் காண்பிக்க முயன்றிருக்கிறார் மணிரத்னம். தமிழில், வெகுஜன சினிமாவில் இத்தனை நெருக்கமாய் ஒரு போரைப் பதிவு செய்த ஒரே படமாகவும் இது இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05
கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05

கதை நான்கு முக்கியமான கதாபாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. நான்கும், ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்து கிடக்கின்றன. அமுதாவின் அப்பாவாக திருச்செல்வன் எனும் எழுத்தாளன் அழுத்தமாகவும், திருத்தமாகவும், நியாயமாகவும் இருக்கும் அதே நேரம் குழந்தையின் மீதான பாசத்திலும் உருகுகிறான்.

பெற்றோர் இறப்பிலோ, ஏழ்மையாலோ கைவிடப்பட்ட குழந்தையல்ல அமுதா. அமுதா ஓர் அசாதாரண சூழலில் பிறந்தவள். அவள் கேட்பதை நிறைவேற்றுவது என்பது அசாதாரணமான காரியம் என்பதை அவன் அறிவான். ஆனால், அவன் அமுதாவின் ஆழ்மன விருப்பத்தை உணர்ந்துகொள்கிறான். அதனால்தான் அவளைச் சமாதானம் செய்வதற்குப் பதிலாக தாயைக் காண்பிக்கிறேன் என்று வாக்களிக்கிறான். இந்தப் பாத்திரத்தைச் செவ்வனே செய்திருப்பவர் மாதவன்.

அடுத்தது திருச்செல்வனின் மனைவி இந்திரா.

ஒப்பீட்டளவில் அதிக திரைநேரம் உள்ள பாத்திரம். அத்தனையும் உணர்வுப்பூர்வமான காட்சிகள். ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ என்ற வரிகளுக்குப் பொருத்தமாக அமுதாவிடமிருந்துதான் அவளது கதை ஆரம்பிக்கிறது.

‘எனக்காக அமுதாவைத் தத்தெடுக்கப் போறீங்களா, அல்லது அமுதாவைத் தத்தெடுப்பதற்காக என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறீங்களா?’ என்ற கேள்வியுடன்தான் அவள் தன் திருமண வாழ்க்கையையே தொடங்குகிறாள்.

மணமாகும் முன்பே தாயாக உணரும் வாய்ப்பு இந்திராவுக்கு.

ஓரிடத்தில் ’அம்மா, பொண்ணு ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான். ஒண்ணைச் சரி செஞ்சா, இன்னொண்ணு மக்கர் பண்ண ஆரம்பிச்சிடும்’ என்று சலித்துக்கொள்கிறான் திருச்செல்வன்.

அப்படித்தான் அமுதாவுக்கும், இந்திராவுக்குமான பாசப்போராட்டம் இருக்கிறது. அமுதாவின் நம்பிக்கையை, பாசத்தை ஒரு கட்டத்தில் அவளையே இழந்துவிடுவோமோ எனும் பரிதவிப்பு இருந்தாலும், இறுதிக்காட்சியில் அமுதாவின் வேட்கை நிறைவேறக் காரணமாக இருப்பதே இந்திராதான். இந்த அற்புதமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியவர் சிம்ரன்.

கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05
கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05

ஒரு கட்டத்தில் கணவன் திலீபனின் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்ணாக ஆரம்பித்து, பின்னர் இழப்பின் வலியால் களப்போராளியாக மாறி நிற்கிறாள் சியாமா, அமுதாவின் நிஜ அம்மா.

தேடி வந்த பிள்ளையைப் பார்க்கப்போவதில்லை எனும் உறுதியோடு இருப்பினும், அவளை அழைத்து வருகிறது சூழல். பிள்ளையைப் பார்த்ததும் அவளது உறுதி குலைகிறது. ஆழத்தில் புதைத்து வைத்திருந்த தாய்மை உணர்வு மெல்ல மெல்ல எழுந்து கண்ணீராக வழிகிறது. நந்திதா தாஸ் சியாமாவாக அவ்வளவு சிறப்பாக வெளிப்பட்டிருந்தார்.

இறுதியாக அமுதா.

துள்ளலும், துறுதுறுப்புமாக ஓடியாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் வண்ணமயமான உலகம், உண்மையை அறிந்துகொண்டதும் கலைந்துபோய் விடுகிறது. இனம்புரியாத உந்துதலால், பெற்ற தாயைப் பார்க்க விளைகிறாள் அவள். எல்லா ஊரும், நம்முடையதைப் போல இப்படித்தானே இருக்கும். எல்லா வீடும், நம்முடையதைப்போல இப்படித்தானே இருக்கும். எல்லா அம்மாவும் இந்திராவைப் போலத்தானே இருப்பார் என்று நினைக்கும் இளம் மனது. அந்த எதிர்பார்ப்பைத்தான் நிஜம் கலைத்துப்போடுகிறது. அமுதாவாக பி.எஸ் கீர்த்தனா. இந்தப் படத்துக்காக நடிப்புக்கான தேசிய விருதை வென்றார்.

கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05
கன்னத்தில் முத்தமிட்டால் | `சினி'ஸ்கோப் 05

ஒப்பிட முடியாத அளவில் இந்த நான்கு பேரின் மனப்போராட்டமும் தனித்துவமானது. இந்த நான்கு கேரக்டர்களில் நடித்தவர்களும் அவற்றுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் போன்ற அனுபவமிக்க மூத்த நடிகர்களுக்கு இணையான நடிப்பை, சிறுமி பிஎஸ் கீர்த்தனா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முக்கியமான பாத்திரங்களில் டெல்லி குமார், பிரகாஷ்ராஜ், சக்கரவர்த்தி, பசுபதி போன்றோர் நடித்திருந்தார்கள்.

ஒளிப்பதிவு ரவி கே சந்திரன், படத்தின் பாடல் காட்சிகள் இணையற்ற அழகுணர்ச்சியுடன் எடுக்கப்பட்டிருந்தன. இறுதிக் காட்சியையும், இறுதி ஷாட்டையும் ஓர் ஓவியத்தைப் போல தீட்டியிருந்தார் ரவி கே சந்திரன். அந்த அழகே படத்தின் கதை பேசும் இழப்புக்கான வலியை அதிகப்படுத்தியது.

இசை ஏ.ஆர் ரகுமான். அற்புதமான பின்னணி இசை. பாடல்கள் படத்தின் பெரும்பலமாக அமைந்தன. அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து. ஒரு தாயின் பாடலாக ஒலிக்கும் ’ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலைப் பாடியவர் சின்மயி. இடம்பெயர்பவர்களின் வலியை நம் மனதிலும் ஏற்றியது எம்எஸ்வி பாடிய ’விடைகொடு எங்கள் நாடே’. ஏஆர் ரகுமான் பாடிய ‘வெள்ளைப்பூக்கள் மலரவே’ எனும் பாடல் விடுதலையின், அமைதியின் வேட்கை நிறைந்ததாக இருந்தது.

படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், வசனம் சுஜாதா, திரைக்கதை எழுதி இயக்கியவர் மணிரத்னம். மிகச் சிக்கலான அரசியல் பின்னணியை, ஒரு குடும்ப நாடகத்தின் உணர்வுத் தளத்தோடு சிறப்பாக இணைத்த விதத்தில், இதன் திரைக்கதை கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்காக இந்தப் படத்தைத் தயாரித்தவர் மணிரத்னம். அந்தாண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிப்பு-குழந்தை நட்சத்திரம், சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 6 தேசிய விருதுகளை வென்றது இந்தப்படம். போலவே தமிழக அரசு விருது, பிலிம்பேர் விருது மற்றும் உலகளாவிய திரைவிழாக்களிலும் ஏராளமான விருதுகளையும் குவித்தது.

துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிகுண்டுச் சத்தங்களுக்கும் நடுவே தன் தாயைச் சந்திக்கிறாள் அமுதா.

இந்த கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுள் ஒன்றாக என்றும் நிலைத்து நிற்கும். தாயின் இறுக்கத்தை உடைக்கிறது பிள்ளையின் கேள்விகள். தாயின் பிடிவாதத்தை வெல்கிறது பிள்ளையின் பிடிவாதம்.

முதலும், கடைசியுமாக ஒரு முறை அமுதாவை இறுக அணைத்து முத்தமிட்டுவிட்டுக் கிளம்புகிறாள் சியாமா. அதை மறுத்து, ‘எங்களோடு வந்துவிடுங்கம்மா’ எனும் அமுதாவைச் சமாதானம் செய்வதற்காக சியாமா சொல்கிறாள்,

“என்றைக்காவது ஒருநாள் இது யுத்தமில்லாத பூமியாக மாறும். விடியல் வரும். அன்றைக்கு திரும்ப வா”

”அது என்னிக்கும்மா?”

சட்டென அழுகை வெடிக்கக் கேட்கிறாள் அமுதா. அப்பாவையும், இரண்டு அம்மாக்களையும், நம்மையும் பார்த்துக் கேட்கிறாள் அமுதா.

அதற்கான பதில்தான் நம் யாரிடமும் இல்லை!

(தொடரும்)

Gatta Kusthi 2: ``மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ என்ற பயம்" - நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க

தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார்

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான ஒளிப்பதிவாலும், அழுத்தமான படைப்புகளாலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) இயற்கை எய... மேலும் பார்க்க

இயக்குநர் பாரதிராஜாவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி; குடும்பத்தினருடன், சீமான் சடங்கு செய்து மரியாதை!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி இன்று தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது.பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி ... மேலும் பார்க்க

`தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன?

நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அடுத... மேலும் பார்க்க

'சினிமா பிடிக்காமலேயே துறைக்கு வந்தவர் தனுஷ்; அழுதுகொண்டேதான் நடிப்பார்' - கஸ்தூரி ராஜா ஷேரிங்ஸ்

'லவ் ஓ லவ்' படத்தின் ப்ரீ - ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, " செல்வராகவன் தான் சினிமா பிடித்து வந்தார். தனுஷிற்கு சி... மேலும் பார்க்க

PR Show: ஒரு கதை, ஒரு படம்; ஆனால் 6 இயக்குநர்கள் - இந்த 'ஆல்ஃபா யூனிட்'டின் ஸ்பெஷல் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போ... மேலும் பார்க்க