Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும்...
``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்
கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 விக்கெட்டுகள்) சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும், 537 விக்கெட்டுகளுடன் அஷ்வின் ஏன் திடீரென விடைபெற்றார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த 'RevSportz Conclave' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அஷ்வின், ``பெர்த் டெஸ்டில் ஜடேஜாவும் நானும் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்தோம். ஆனால் வாஷிங்டன் சுந்தர் விளையாடிய விதம் மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் நான் அணியில் சேர்க்கப்படுவதும், பிறகு நீக்கப்படுவதுமாக இருந்த சூழல், 'எனது காலம் முடிந்துவிட்டது' என்பதை எனக்கு உணர்த்தியது.
மற்றொருவர் அந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால், அவருக்கு அந்த இடத்தையும் நேரத்தையும் நான் கொடுத்தே ஆக வேண்டும். கௌதம் மீது யாருக்காவது வருத்தம் இருக்க வேண்டும் என்றால், அது எனக்குத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவரது பயிற்சியின் கீழ் வந்த இரண்டாவது அல்லது மூன்றாவது தொடரிலேயே நான் வெளியேற வேண்டியிருந்தது.
ஆனால், ஒரு பயிற்சியாளராக அணிக்கு எது சிறந்தது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு. கம்பீரின் திட்டத்தில் நானோ அல்லது விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடம் இல்லை என்று அவர் கருதினால், அதில் தவறு ஏதுமில்லை. அவர் தனது கடமையைச் செய்கிறார்.
அந்த நேரத்தில் எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம், அது மனித இயல்பு. ஆனால், அந்த உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், கம்பீரின் திட்டத்தில் எனக்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. நம் நாட்டில் கிடைக்கும் புகழால் நாம் வீழ்த்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம், ஆனால் அது உண்மையல்ல.
எனது ஈகோவைத் தள்ளி வைத்துவிட்டு எதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன். என் தந்தை எனது நலனில் அக்கறை கொண்டவர். நான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியபோது அவர் ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தார். ஆனால், நான் வீட்டில் இருக்கும்போது சக வீரர்களைப் பற்றித் தவறாகப் பேச வேண்டாம் என்று அவரிடம் பலமுறை சண்டையிட்டுள்ளேன்." என்றார்.
















