"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சா...
கம்யூனிஸம் உருவாக்கிய மகா நடிகன்| உளவன் 16
1955 அக்டோபர் 25.
வறண்ட வானிலை சற்று மாறத் தொடங்கி இருந்தது. ஆங்காங்கே சாரலாக மழை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெப்பம் தகித்தது. மக்கள் பிரதிநிதிகளிடையே அமளி. ஊடகங்களில் வெளிவந்த ஒரு செய்தி நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது.
“அந்த ‘மூன்றாவது மனிதர்’ ஹரோல்ட் அட்ரியன் ரஸ்ஸல் ஃபில்பி என்ற இயற்பெயர் கொண்ட கிம் ஃபில்பி. ரஷ்யாவுக்கு உளவு பார்த்த இரண்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிக்க அவர் உதவி இருக்கிறார்.” என்ற செய்திதான் அது. பிரிட்டன் எங்கும் உச்சரிக்கப்பட்டது கிம் ஃபில்பி என்ற பெயர்.
அந்தோனி ஈடன் தலைமையிலான அரசு, பிரிட்டன் தேசத்தின் பாதுகாப்பை அடகு வைத்து விட்டது. ரஷ்ய உளவாளிகளோடு சமரசம் செய்து விட்டது. தேசத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள் பாதுகாப்பாக வலம் வருகின்றனர். இதுதான் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத்தில் வைத்த குற்றச்சாட்டு. போதாதா…?

வின்ஸ்டன் சர்ச்சில் வயது மூப்பு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகினார். மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மறுபடியும் கன்சர்வேடிவ் கட்சியே ஆட்சியை தக்க வைத்தது. சர்ச்சிலின் அமைச்சரவையில் நீண்ட காலம் வெளியுறவு அமைச்சராக இருந்தவரே இந்த அந்தோனி ஈடன். துணைப் பிரதமராகவும் கூடுதலாக பதவி வகித்தார். ஆக, சர்ச்சிலின் அரசியல் வாரிசாக அறியப்பட்டவர். அதனால் பிரிட்டனின் பிரதமரானார்.
பிரதமராக பதவியேற்ற நான்கே மாதங்களில் சர்ச்சையில் சிக்கினார். அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில்தான் கிம் ஃபில்பி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்தார். இப்போது அதே கிம் ஃபில்பி உருவில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அஞ்சினார். மூடி மறைக்கப்பட்டு மறந்து போன ஒரு பூதம் மீண்டும் கிளம்பியது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகம்தான் சர்ச்சையின் மையப்புள்ளி. அங்கு பணியாற்றியவர்கள் மேக்லீன் மற்றும் பர்கெஸ். இருவரும் ரஷ்யாவுக்கு உளவு வேலை பார்த்தது வெனோனா இடைமறிப்பு தகவலில் தெரிய வந்தது. விசாரணையில் சிக்கிக் கொள்ளாமல் இருவரும் தப்பி விட்டனர். கிம் ஃபில்பி அவர்களுக்கு உதவியதாக பலமான சந்தேகம் எழுந்தது.
கிம் ஃபில்பி வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் முதல்நிலை செயலாளர். இது வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் பதவி. MI6, CIA, FBI ஆகிய உளவு அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பு அதிகாரி என்பதே பிரதான பணி. அதாவது வாஷிங்டன் பிரிவின் MI6 தலைவர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியில் உள்ள ஒருவர் உளவாளிகளுக்கு உதவி செய்கிறார். இதை சகித்துக் கொள்ள முடியாது, அவரும் உளவாளியாகத்தான் இருப்பார் என்பது MI5 அதிகாரிகளின் வாதம். அவரைக் கைது செய்ய MI5 தீர்மானித்தது. ஆனால் கைது நடவடிக்கைக்கு MI6 அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் வர்க்க அதிகாரிகளுக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்குமான வர்க்க மோதலாக இது உருவெடுத்தது.

மேல்தட்டு கனவான்கள் பயிலும் பள்ளிக்கூடங்களில் படித்து, ஆக்ஸ்ஃபோர்ட் - கேம்பிரிட்ஜ் போன்ற தரமான கல்லூரிகளில் உயர்கல்வி பயின்ற அதிகாரிகளைக் கொண்ட அமைப்புதான் MI6. இவர்களின் ஆடை மற்றும் ஆங்கில உச்சரிப்பு மேதைமையான தோற்றத்தைக் கொடுத்தது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட அமைப்புதான் MI5. இவர்களின் உடை உடுத்தும் பாங்கு, ஆங்கில உச்சரிப்பு ஆகியவை சற்று இழிவானதாக பார்க்கப்படும். இதனால் MI6 அதிகாரிகள், இவர்களை பண்பாட்டு ரீதியாக கீழானவர்களாகப் பாத்தனர்.
கிம் ஃபில்பியை நேரடியாக விசாரணைக்கு அழைக்கவில்லை. நட்பு ரீதியிலான தகவல் பறிமாற்றம் என பொய் சொல்லி அழைத்தனர். ஜூன் 15, 1951-ம் ஆண்டு ஃபில்பி லண்டன் வந்தார். வந்ததும் அவரை பணியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனர்.
H.P. மில்மோ தலைமையில் விசாரணை தொடங்கியது. குழுவில் வெளியுறவுத்துறை, MI5 மற்றும் MI6 அதிகாரிகளும் இடம்பெற்றனர். ஃபில்பியை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே விசாரணை நகர்வதாக MI6 அதிகாரிகள் குற்றம்சாட்டினர். அவரை முறையாக நடத்தவில்லை என குமுறினர்.
இறுதியில், கிம் ஃபில்பி மீதான சந்தேகம் உறுதியானது. அவர் சோவியத்தின் உளவாளிதான். ஆனால், வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. பலமான ஆதாரமும் இல்லை. நீதித்துறைக்கு சந்தேகமோ, நாட்டின் பாதுகாப்பில் அக்கறை என்ற உணர்வோ அவசியமில்லை. ஆதாரம்தான் தேவை. மில்மோ விசாரணைக் கமிட்டியிடம் துளி ஆதாரம் இல்லை. எனவே, 1955-ம் ஆண்டு மத்தியில் விசாரணையில் இருந்து ஃபில்பி விடுவிக்கப்பட்டார்.
இதனையறிந்த அமெரிக்காவின் FBI இயக்குநர் எட்கர் ஹூவர் கொதித்துப் போனார். ‘கிம் ஃபில்பி சோவியத்தின் உளவாளி, அவரை பாதுகாக்க பிரிட்டன் அரசு துணை போகிறது.’ பிரிட்டன் ஊடகங்களிடம் இந்தத் தகவலை கொளுத்திப் போட்டார். பிரிட்டனில் பற்றி எரிந்தது தேசப்பற்று நெருப்பு.

பிரிட்டன் உளவுத்துறை மீது, குறிப்பாக MI6 மீது எட்கர் ஹூவருக்கு கடுமையான வெறுப்பு. முதல் காரணம் கிம் ஃபில்பி. FBI செயல்பாடுகளை மிக மோசமாக விமர்சித்தவர் ஃபில்பி. “பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர், பாதுகாவலர் என ஒன்றுக்கும் உதவாத தகவல்களை சேகரிப்பதை பெரிய சாதனையாக காட்டிக் கொள்கிறது FBI. அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மனித வளத்தையும் திறமையையும் வீணடிக்கும் விதத்திலேயே இருக்கிறது.” இதுதான் ஃபில்பியின் விமர்சனம். இது ஹூவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.
இரண்டாவது காரணம் கிளாஸ் ஃபுக்ஸ். அமெரிக்காவின் மன்ஹாட்டன் அணுகுண்டு திட்ட ரகசியங்களை கசிய விட்டவர் கிளாஸ் ஃபுக்ஸ். அவரை அமெரிக்கா சார்பில் விசாரிக்க, பிரிட்டன் உளவுத்துறை போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. இதுவும் ஹுவருக்கு கடும் கோபம்.
அதனால் நேரம் பார்த்து பழிவாங்கினார். ஹூவர் கொடுத்த பிரேக்கிங் நியூஸ் இப்போது பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. விவாதமும் நடைபெற்றது. இறுதியில் ஃபில்பிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லையென்று நாடாளுமன்றத்தில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அரசு மீது ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார் எதிர்க்கட்சி உறுப்பினர் லிப்டன்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கிம் ஃபில்பி. உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது கிடையாது. ஆனால், துரோகப் பட்டம் கட்டப்பட்டதாலும், அவரை அரசு பாதுகாக்கிறது என்ற செய்தியாலும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மீண்டும் பணியில் சேர ஆர்வம் காட்டினார் கிம் ஃபில்பி. ஆனால் சந்தேகம் காரணமாக அதிகாரமிக்க பதவியில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் அவருடைய நண்பர்களின் பரிந்துரையால், ஊதியம் பெறும் வகையில் ஏஜெண்ட்டாக இணைந்தார். The Observer மற்றும் The Economist பத்திரிகைகளின் மத்திய கிழக்கு நிருபராக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வேலை. பத்திரிகையாளர் போர்வையில் உளவுப் பணி.
ஏறக்குறைய நான்காண்டுகளுக்கும் மேலாக பெய்ரூட்டில் வாழ்க்கை அமைதியாக ஓடியது. 1961 மத்தியில் அனடோலி கோலிட்சின் (Anatoli Golitsyn) என்ற உருவில் மீண்டும் சிக்கல். ரஷ்ய உளவுத்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றியவர் கோலிட்சின். அமெரிக்காவில் தஞ்சமடைந்து, ரஷ்யாவின் உளவு திட்டங்களை விவரித்தார். அந்தத் திட்டங்களெல்லாம் அமெரிக்காவுக்கு பெரிதாக தெரியவில்லை. கிம் ஃபில்பி பெயரை அவர் உச்சரித்தார். அவர் ரஷ்யாவின் உளவாளி என்றார். அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சுதாரித்தனர்.

ஃபில்பி இப்போது பிரிட்டனில் இல்லை. வெளிப்படையாக எந்தப் பதவியிலும் இல்லை. அதனால், பிரிட்டன் உளவுத்துறை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அமெரிக்கா விடுவதாக இல்லை. அழுத்தம் அதிகரிக்க 1962 இறுதியில் ஒப்புக்காக ஒரு விசாரணையை தொடங்கியது பிரிட்டன்.
மீண்டும் ஃபில்பியிடம் கேள்விகள். இந்த முறை பெய்ரூட்டில் வைத்து. அவருடைய நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளர் பணியை பெற்றுத் தந்தவருமான நிகோலஸ் எலியட் விசாரித்தார். “எல்லாம் எங்களுக்கு தெரியும். KGB-க்குள்ளேயே ஊடுருவி விட்டாம். நண்பா, இனி மறைக்க முடியாது.” நெருங்கிய நண்பர் மனசாட்சி போலல்லவா…! தடுமாறிப் போனார் ஃபில்பி. அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அடுத்த நாள் வாக்குமூலத்தில் கையெழுத்திடுவாக கூறிய அவர் காணாமல் போனார். மேக்லீன் - பர்கெஸ் மறைந்தது போல. 1963-ம் ஆண்டு ஜனவரி இறுதியில் தலைமறைவானார்.
அந்த மூன்றாவது நபர்? அந்த சிவப்பு ட்ரோஜன் குதிரை? ஆம். அது கிம் ஃபில்பியேதான். இப்போது அனைத்தையும் ரீவைண்ட் செய்து பாருங்கள்.
இஸ்தான்புல் பிரிட்டிஷ் தூதரகத்தில் தஞ்சமடைந்த வோல்கோவிடம் விசாரணை செய்ய ஏன் தாமதமாகச் சென்றார்? தெரிந்தேதான் தாமதமாகச் சென்றார். அப்போதுதான் அவர் கடத்தப்பட முடியும். வோல்கோவ் உளவாளிகளின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுக்கவில்லை. ‘மூன்று ரஷ்ய உளவாளிகள்’ என சொன்ன தகவலைக் கேட்டதுமே ஃபில்பிக்கு புரிந்து விட்டது. யார் திருடன் என்பது களவாணிக்குத்தானே தெரியும்.
அதேபோல, பர்கெஸை லண்டனுக்கு அனுப்பியதும் ஃபில்பிதான். மேக்லீனையும் பர்கெஸையும் தப்பிக்கச் சொன்னதும் அவர்தான். பிக்ஸீக்களைப் பற்றி ரஷ்யாவை எச்சரித்து அல்பேனியாவைக் காப்பார்றியதும் அவர்தான்.
வெனோனா தகவல்களில் ஃபில்பி பெயர் கிடையாது. அதனால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அமெரிக்காவில் வெனோனா தகவல்களை அணுகும் பதவியில் இருந்தார். அதனால் தப்பித்துப் போகும் முடிவை அப்போது எடுக்கவில்லை. ஆனால் பெய்ரூட்டுக்குப் போன பின், பிரிட்டிஷ் உளவுத்துறையின் மேல்மட்ட தகவல்களை அவரால் அணுக முடியவில்லை.
அதனால் தப்பித்துப் போவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
கிம் ஃபில்பி இரட்டை உளவாளி கிடையாது. அதற்கும் மேலே. ஊடுருவல் உளவாளி (Penetration Agent).

பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அம்பாலாவில், 1912-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் பிறந்தவர் கிம் ஃபில்பி. தந்தை ஜான், ஆங்கிலேயர் கால இந்திய ஆட்சிப் பணியாளர். பின்னர் ஜான், இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி, சவூதி அரேபிய மன்னருக்கு ஆலோசகராக மாறினார்.
ஃபில்பி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். அப்போதே அவருக்கு கம்யூனிஸம் மீது ஈர்ப்பு. சோவியத் ரஷ்யாவுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கத் துணிந்தார்.
பிரிட்டனின் உளவு அமைப்பில் சேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, உயர்மட்டப் பதவிக்கு வந்தார். MI6-ல் எதிருளவு (Counter Intelligence) பிரிவான Section V-ன் தலைவரானார். ரஷ்யாவை கண்காணிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாகப்பட்ட Section IX-ன் தலைவரும் அவரே. அமெரிக்காவில் CIA, FBI-யுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
ஆக, பிரிட்டன் - அமெரிக்க உளவுத்துறையின் அத்தனை நடவடிக்கைகளையும் ரஷ்யாவுக்கு கடத்தி இருக்கிறார் கிம் ஃபில்பி. ரஷ்யாவுக்கு எதிரான எத்தனையோ நடவடிக்கைகளை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறார். அல்லது தாமதப்படுத்தி இருக்கிறார். குறைந்தபட்சம் அத்தகைய நடவடிக்கைகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.
பகலில் ஒரு முகம். உற்சாகமான மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். பிரிட்டனின் ஆதர்ச குடிமகன். இரவில் வேறொரு முகம். ரஷ்யாவுக்கு தகவல்களை அனுப்புபவர்.
ஜெர்மனிக்கு உளவு பார்த்த உளவாளிகளை இரட்டை உளவாளிகளாக்கி, நேச நாடுகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது பிரிட்டன். இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றிய பெருமை பிரிட்டனுக்கே சேரும். அப்படிப்பட்ட பிரிட்டன் உளவுத்துறைக்குள்ளேயே ஒருவனை ஊடுருவச் செய்து, அந்நாட்டு உளவுத்துறையையே ஆட்டிப் படைத்தது சோவியத் ரஷ்யா.!




















