"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெக...
காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று டிரம்மில் வைத்து மூடிய மனைவி - மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த டிரம் படுகொலை நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. கப்பலில் வேலை செய்த கணவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது அவரை காதலன் துணையோடு கொலை செய்து உடலை நீலகலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்ட மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். மீரட்டை சேர்ந்த சௌரப் ராஜ்புத் மற்றும் முஸ்கான் ரஸ்தோகி ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். முஸ்கானுக்கும் தனது நண்பரான சாஹிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து பின்னர் செளரப்பிற்கு தெரிய வந்தது.
இதையடுத்து விவாகரத்து செய்வது குறித்து அந்தத் தம்பதியினர் பரிசீலித்தனர். எனினும், தனது மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சௌரப் அந்த முடிவைக் கைவிட்டார், கப்பல் வேலைக்காக கடந்த 2023ம் ஆண்டு வெளிநாடு சென்றார். அவர் தனது மகளின் ஆறாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி நாடு திரும்பினார்.

அதே ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி இரவு முஸ்கான் தனது கணவனுக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்தார். பின்னர் அவர் தனது காதலன் சாஹிலை வரவழைத்து இருவரும் சேர்ந்து அவரைக் கொன்றனர்.
அதன் பிறகு, உடலை 15 துண்டுகளாக வெட்டி, ஒரு நீல நிற டிரம்மில் வைத்து சிமெண்ட் கொண்டு மூடிவிட்டனர். மறுநாள் அந்த ஜோடி இமாச்சலப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றது. முஸ்கான், தனது கணவர் செளரப் உயிருடன் இருப்பதாகவும், தொழில் விஷயமாகப் பயணம் செய்வதாகவும் நம்பவைக்க, அவரது மொபைல் போனை பயன்படுத்தி அவரது குடும்பத்தினருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார். மார்ச் 17ம் தேதி அந்தத் தம்பதியின் ஆறு வயது மகள் அக்கம்பக்கத்தினரிடம், அப்பா டிரம்முக்குள் இருக்கிறார் என்று கூறியதாகத் தகவல் வந்ததை அடுத்து, உறவினர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் அந்த வீட்டிற்குச் சென்றனர்.
போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் இருந்த டிரம்மை திறந்தபோது, செளரப் உடற்பாகங்களைக் கண்டெடுத்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு முஸ்கானும், அவரது காதலன் சாஹிலும் கைது செய்யப்பட்டனர். செளரப் உடல் கொலை நடந்த 14 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிபதி அர்விந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் 22 பேர் சாட்சியம் அளித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இதில் தண்டனை விபரம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்கானும் சாஹிலும் சௌரபைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, அவரது துண்டிக்கப்பட்ட உடலை ஒரு நீல நிறத் டிரம்மில் போட்டு சிமெண்ட் மற்றும் மணலைப் பயன்படுத்தி மறைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பை வழங்கும்போது, நீதிமன்றம் பகவத் கீதையை மேற்கோள் காட்டியது. நீதிபதி மகாபாரதத்திலிருந்து சில குறிப்புகளைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும் என்று உறுதிபடக் கூறினார். ஏனெனில், தவறு செய்பவர்களைத் தண்டிப்பதும் தர்மமே ஆகும் என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சௌரப்பின் தாயார் ரேணு மற்றும் அவரது சகோதரர் ராகுல், "நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கிறது'' என்று கூறினர். அதேசமயம் முஸ்கான் பெற்றோர் இத்தீர்ப்பு குறித்து கூறுகையில்,'' செளரப் நல்லவர். எனவே எங்களது மகளுக்கான மரண தண்டனையை எதிர்க்கமாட்டோம்'' என்று தெரிவித்தனர். மரண தண்டனையை கேள்விப்பட்டதும் முஸ்கானும், சாஹிலும் சிறையில் தொடர்ந்து அழுதுகொண்டு இருப்பதாகவும், சாப்பிட மறுப்பதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோடு அவர்கள் இருவரும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு புதிய கைதி எண் வழங்கப்பட்டு இருப்பதாக சிறை அதிகாரி தெரிவித்தார். மரண தண்டனை வழங்கப்பட்ட பிறகு இருவருக்கும் சிறையில் உடையும் மாற்றுப்பட்டுள்ளது. சாஹில் வெள்ளை குர்தா-பைஜாமா அணிவார்.
முஸ்கான் கிரீம் நிற புடவை அல்லது சூட் அணிவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறையில் முஸ்கானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை யாருடையது என்பதை தெரிந்து கொள்ள டி.என்.ஏ.சோதனை நடத்த வேண்டும் என்றும், அது செளரப் குழந்தையாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று செளரப் சகோதரர் தெரிவித்தார்.

















