`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த...
காலமானார் 'காலச்சுவடு' அரவிந்தன் - இன்று நாகர்கோவிலில் உயிர் பிரிந்தது
காலச்சுவடு இதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த டி.இ.அரவிந்தன் இன்று (03-04-2026) காலை நாகர்கோவிலில் காலமானார். அவருக்கு வயது 62.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வந்தவர். தொண்ணூறுகளில் 'இந்தியா டுடே' இதழில் பணிபுரிந்தார். பிறகு காலச்சுவடு பொறுப்பாசிரியராக இருந்தார்.
இந்து தமிழ் திசை, சமயம் தமிழ், மின்னம்பலம், நம் தோழி, நம்ம சென்னை முதலான பல முன்னணி அச்சு, இணையதள ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சில ஆண்டுகளாக சென்னை லயோலா கல்லூரியில் கெஸ்ட் லெக்சரராக இதழியல் மாணவர்களுக்கு பாடமும் எடுத்து வந்தார்.
நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய சமயங்களில் இலக்கியம் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை வெகுஜன ஊடகங்களில் கொண்டு வந்தவர் என இவரை நினைவு கூர்கின்றனர் தமிழ் இலக்கிய ஆளுமைகள்.

இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவை குறித்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் என பல்வேறு தளங்களில் இவர் எழுதிய நூல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் உலகில் பெரிய கவனம் பெற்றது நினைவிருக்கலாம். ’பயணம்’ நாவலும் இவர் எழுதியதே. இவரது ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருளுக்காக போற்றப்பட்டது. நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிரிக்கெட் குறித்து எளிமையாக எழுதுவதில் மட்டுமல்லாமல் அந்த விளையாட்டிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
அரவிந்தனின் மனைவி பெயர் தேவி. ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். மகள் நம்ரதா மகன் பெயர் சைதன்யா.
அரவிந்தனின் மறைவு பெரும் அதிர்ச்சி தருவதாக கூறியுள்ள காலச்சுவடு நிறுவனம், இதை பெருந்துயருடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரி்வித்துள்ளது.





















