குமரி மாவட்டத்தில் இரவுநேர கடைகளுக்கு தடை: மாவட்ட எஸ்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இரவுநேர கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போன கைப்பேசிகள் சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட, ரூ.48 லட்சம் மதிப்பிலான 305 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கைப்பேசிகள் காணாமல் போனால் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு (2024) 1033 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தோ் திருவிழா பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.
குமரி மாவட்டத்தில், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளை திறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.