Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! ...
BB TAMIL 9 DAY 87: விக்ரம் - திவ்யா மோதல்; மீண்டும் பாரு - கம்மு ரொமான்ஸ் - 87வது நாளின் ஹைலைட்ஸ்
சர்ச்சையும் சண்டையும் இல்லாமல் ஸ்போர்டிவ்வாக விளையாடி பாரு அடைந்த வெற்றி ஒன்று உண்டென்றால் அது TTF5 மட்டுமே. அதற்காக பல இடிகளைத் தாங்க வேண்டியிருந்தது. வெல்டன்.
அத்தனை அசிங்கமான சண்டைகளுக்குப் பிறகும் பாரு - கம்மு ரொமான்ஸ் மீண்டும் பூக்க ஆரம்பித்திருக்கிறதா?! அது உண்மையெனில் பாரு அனத்தியது அத்தனையும் பொய் என்று பொருள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 87
‘கோடு போட்டா’ என்கிற பாடலுடன் நாள் 87 விடிந்தது. ஊர்க்கிழவிகள் போல பாருவும் சான்ட்ராவும் அவ்வப்போது கூடி புறணி பேசுகிறார்கள்.
“இந்த விக்ரம்.. சபரி கிட்டலாம்.. ஹாய்.. பாய்.. உறவுதான். அவ்வளவாம் வெச்சுக்க மாட்டேன்” என்றார் பாரு. “கனி போனப்புறம் அந்த கேங்கலாம் ஒரு மாற்றம் தெரியுது. நம்ம கிட்ட வந்து பேசறாங்க.. அப்படின்னா கனியோட கண்ட்ரோல்ல இருந்தாங்க போல” என்று சான்ட்ரா செய்த ஆராய்ச்சிக்கு ஆமாம் போட்டார் பாரு.
தனது பரம எதிரியான அரோராவை பிரத்யேகமாக திட்டுவதற்கு பாரு மறக்கவில்லை. “இவ இன்னொரு கனி. குட்டி கனி. இனிமையா பேசறா மாதிரிதான் இருக்கும். ஆனா உள்ள அவ்வளவும் வெஷம். அவளோட வலைல மாட்டியிருக்கிற மீன்கள்தான் சபரி, வி்க்ரம், வினோத், கம்மு.. இவங்கள்ளலாம்.
பொண்ணுங்களால இதை கண்டுபிடிச்சிட முடியும். ‘நம்ம ஆளாச்சே’ன்னு கம்மு எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கலாம்ல.. ஆனா பண்ணலை.. நான் வெளியே வர்றதுக்கு இன்னமும் டைம் எடுக்கும்” என்றார் பாரு.
“ஏன் ஐம்பது நாள் அமைதியா இருந்தே?” என்று அரோராவிடம் திவ்யா கேட்க “எனக்கு செட்டில் ஆக கொஞ்ச நாளாவும். இப்பத்தான் கம்பர்ட்டபிளா இருக்கு” என்று அரோ சொல்ல, “அப்ப வேற கம்பர்ட் ஜோன்ல இருந்தா” என்கிற மாதிரி கிண்டலடித்தார் சபரி. வினோத்திற்குப் பிறகு சபரி அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகள் சுவாரசியமாக இருக்கின்றன.

தான் அவுட் ஆனதற்கு விக்ரம் மீது காண்டான திவ்யா
TTF4 துவங்கியது. ராட்டினம் மாதிரி ஒரு கம்பு சுற்றி வர, போட்டியாளர்கள் தங்களின் கால்களில் அது இடறாதாவாறு தாண்ட வேண்டும். அந்தக் கம்பின் திசையும் வேகமும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இந்த ஐடியாவை எல்லாம் எந்த பொருட்காட்சியில் இருந்து பிடிக்கிறார்களோ தெரியவில்லை.
“ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு.. இப்ப இது வேறயா?” என்கிற மாதிரி இந்த டாஸ்க்கில் திவ்யாவிற்கும் விக்ரமிற்கும் ஆட்டோமேட்டிக் வம்பு ஆரம்பித்தது. இருவரையும் நேர் எதிரே நிற்க வைத்தது பிக் பாஸ் டீமின் சதியா என்று தெரியவில்லை. விக்ரம் எகிறி தாண்டிய போது, கட்டையின் அதிர்வால் அது திவ்யாவின் காலில் இடித்தது.
விக்ரம் அவுட் என்று இறங்கி விட “விக்ரம் கால் பட்டு தூக்கிடுச்சு. என் மேல தப்பு இல்ல பிக் பாஸ்” என்று புகார் செய்த திவ்யா, “மாதாந்திர அவஸ்தையோடு ஆடறேன்.. அவுட்ன்னு சொல்றாங்க. என்னாகப் போகுதோ?” என்று புலம்ப “third umpire செக் பண்றாரு. வெயிட் பண்ணு” என்று ஆறுதல் அளித்தார் அரோ.ஆனால் கல்லுளி மங்கனான பிக் பாஸ், ‘திவ்யா அவுட்’ என்று சொல்ல, எரிச்சலோடு உள்ளே போய் படுத்துக் கொண்டார் திவ்யா.
திவ்யாவின் கோபத்தில் எண்ணைய்யை ஊற்றுவது போல நாய் குரைக்க, ‘இது வேற சனியன்’ என்கிற மாதிரி கண்களை மூடிக் கொண்டார் திவ்யா.

பாரு - கம்மு - மறுபடியும் பூக்க ஆரம்பித்திருக்கும் ரொமான்ஸ் 2.O
“நிக்கற டாஸ்க்ல விக்ரம் பாட்டு பாடச் சொல்லித்தான் நீ அவுட் ஆனே” என்று அரோ ஜாலியாக போட்டுக் கொடுக்க “அது விக்கல்ஸ்னால இல்ல. என் நக்கல்ஸ்னால நடந்தது” என்று கம்மு ரைமிங்காக அடித்த கமெண்ட் சிறப்பு. இப்படிப்பட்ட பக்கங்களை கம்மு நிறைய வெளிப்படுத்தலாம்.
இறுதியில் சபரி வெற்றி பெற்றார். கீழே இறங்கிய கம்மு, கடந்து போகும் போது பாருவிடம் கை நீட்ட, சற்று ஜெர்க் ஆனாலும் பாருவும் கை குலுக்கி ஹக் செய்தது நன்று. (நன்றுதான்.. ஆனால் இது மறுபடியும் ‘பேபி’ லெவலுக்கு போகக்கூடாது). பாருவை தனியாக அழைத்த விக்ரம் “என்னாச்சு.. பவுண்ட்ரி வெவல் செட் பண்ணியிருக்கன்னு சொன்னே?” என்று ஜாலியாக விசாரித்தார். (திரும்பவும் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து மைக்கை கழட்டி ஓரமா ஒதுங்கினா, நமக்கு முட்டை போயிடப் போவுதுன்னு விக்ரமிற்கு பயம் வந்துடுச்சா?!)
பாரு - கம்முவிற்கு இடையில் பூக்க ஆரம்பித்திருக்கும் ரொமான்ஸை, பிக் பாஸூம் மறைமுகமாக கிண்டல் செய்தார் போல. “கம்ருதீன்.. நீங்க சாப்பி்ட்ட ஆப்பிளை தூக்கிப் போட்டிங்களே.. அதை குப்பைல போட்டீங்களா?” என்று கேட்க பதறி ஓடினார் கம்மு. “நீ நெனக்கறாப்பல எல்லாம் இல்லை” என்று விக்ரமிடம் காதைக் கடித்தார் பாரு. (ஆதாம் - ஏவாள் கதையெல்லாம் ஞாபகத்திற்கு வருது!).
“பாஸ்.. பாஸ்.. இன்னொரு முறை சுத்தி விடுங்க பாஸ்.. ஜாலியா இருக்கு. ஆடணும்” என்று குடை ராட்டினத்திற்காக கெஞ்சும் பள்ளிப் பிள்ளைகள் மாதிரி பிக் பாஸை நச்சரித்தார்கள்.

வம்பிழுத்த திவ்யா - காண்டான விக்ரம் - ஏற்றி விட்ட பாரு
அநியாயமாக தனக்கு அவுட் தரப்பட்டதாக நினைத்த திவ்யா, விக்ரமிடம் ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார். “உங்களால அவுட் ஆனேன்னு சொல்ல வரலை. ஆனா என் கெரகம்.. உங்க எதிர்க்க நிக்கறா மாதிரி ஆயிடுச்சு.. நான் அவுட் ஆனதுல உங்க சந்தோஷம் மூஞ்சுல தெரிஞ்சது” என்று திவ்யா வம்பிழுக்க “அப்படியெல்லாம் இல்லை. எதையாவது கௌப்பாதீங்க” என்று விக்ரம் சொல்ல “நீங்கதான் டிராமா ஆடுவீங்க” என்று திவ்யா மல்லுக்கட்டினாா.
“நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன்டா.. இந்த திவ்யா வந்து வம்பிழுக்கிறா’ என்று சபரியிடம் அனத்தினார் விக்ரம். ‘ஒரு முறை ஆனதுதான். இனிமே டிரிக்கர் ஆக மாட்டேன்” என்று விக்ரம் சொன்னாலும் உள்ளுக்குள் பொங்கும் கோபத்தை அவரால் மறைக்க முடியவில்லை.
“கம்மு கிட்ட ஒரு வாரம் பேசாம இருந்தா கூட போதும். கடந்து போயிடுவேன். திரும்ப பேசினா.. அவனுக்கு இதுவே வழக்கமாகயிடும்” என்று சான்ட்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. (ஆனால் அப்படித் தெரியலையே!)
இன்னொரு பக்கம் திவ்யாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் கம்மு. “இந்த சான்ட்ரா அக்கா ரொம்ப சீன் போடறாங்க.. நான் பாரு கிட்ட பேசினா இவங்களுக்கு என்னவாம்.. கண்ணைக் காட்டி உருட்டறாங்க. கோப்படறாங்க.. லவ் கேம் ஆடறேன்னு சொல்றாங்க.. பிரஜின் போன காண்டுல இவங்களும் இப்படி டிராமா ஆடினதா சொன்னா ஒப்புத்துக்குப்பாங்களா?” என்று கம்மு புலம்ப “பாருவிற்கு மறுபடியும் ஏதாவது ஆகிடப் போகுதுன்னு அவங்களுக்கு தோணலாம்” என்றார் திவ்யா.

பாருவின் ரீப்பீட் ரொமான்ஸை கண்டிக்கும் சான்ட்ரா - விக்ரம்
“நான் கம்மு கூட கைகுலுக்கியதை ஊரே பார்த்திருக்கு பாரேன்” என்று ஆச்சரியப்பட்டார் பாரு. (உலகமே பார்த்துட்டு இருக்கற ஒரு ஷோல இப்படி ஒரு கேள்வியா?!) “ஆமாம். நேத்தி ஏன் கேம்ல ஏன் அவன் கை கொடுக்கலை.. அதுக்கு பதில் சொல்லு.. பவுண்ட்ரிலாம் என்ன ஆச்சு?” என்று சான்ட்ரா உரிமையுடன் கண்டிக்க “பகை.. பகைதான்.. சபரி சொல்றான். புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி தெரியுதுன்னு..” என்று சொல்லி பாரு சிரிக்க “உன் மூஞ்சுல துப்பவா.. டீல துப்பவா?” என்று சான்ட்ராவின் செல்லக் கோபத்தின் சதவீதம் அதிகரித்தது. அதற்கும் ஹஹி என்று சமாளித்தார் பாரு. இதுவே வேறு யாராவது கேட்டிருந்தால்?
விக்ரம், சபரி, சுபி க்ரூப் வலிமையை உடைப்பதற்காக பாருவும் சான்ட்ராவும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல் இருவருக்குமே பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிவார்கள் என்றாலும் இதுவொரு சந்தர்ப்பவாத கூட்டணி. அரசியல் மொழியில் சொன்னால் ‘காலத்தின் கட்டாயம்’. இன்னொரு பக்கம் பார்த்தால், Keep your enemy close என்கிற வகையில் பாருவை விக்ரம் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறாரோ?! அவருமே கம்மு கூட பாரு சேர்வதை கண்டிக்கிறார்.
TTF5 ஆரம்பித்தது. தலைக்கு மேல் சிறு கதவின் வழியாக பவுடர் கொட்டுவதை தடுக்கும் வகையில் கையை வைத்து தாங்க வேண்டும். ‘நான் அவுட் ஆகலை’ என்று இதில் சொல்லவே முடியாது. பவுடர் மேலே விழுவதுதான் அடையாளம்.
அவுட் ஆனவர்கள் பந்தை வீசி போட்டியில் இருப்பவர்களை தொந்தரவு செய்யலாம். ஆரம்பத்திலேயே திணறிய அரோ, கை வலி காரணமாக உடனே இறங்கி விட்டு அழுதார். பிறகு பூ எறிவது பந்துகளை எறிய ‘ப்பா.. ன்னா போர்ஸா வருது?” என்று கிண்டலடித்தார் கம்மு.

‘அடி வாங்கியது நானு.. கப்பு எனக்குத்தான்’ - 5வது டாஸ்க்கில் பாரு வெற்றி
அடுத்ததாக வினோத் அவுட் ஆனார். அரோ எறிந்த பாலை கேட்ச் பிடித்த கம்மு, திரும்ப அரோவை அடித்தது நல்ல காமெடி. அடுத்து விக்ரம் அவுட் ஆனார். ‘சான்ட்ராவை அடிக்கவா?” என்று அவர் கேட்க, சான்ட்ரா முகம் சுளித்தபடி நின்றார். பிறகு வெறுப்பில் அவுட் ஆனது மாதிரியாக தெரிந்தது. அடுத்து கம்முவும் அவுட்.
சபரி கைவலியால் துடித்தால் கூட பவுடர் கொட்டாததைக் கவனித்த சான்ட்ரா “கதவு லாக் பண்ணியே இருக்கா?” என்று சந்தேகம் எழுப்பினார். கை வலி தாங்காமல் சபரியும் அவுட்.
பந்து எறிபவர்கள் பெரும்பாலும் பாருவைத்தான் டார்கெட் செய்தார்கள். ‘எருமை மாடுங்களா. என்னா அடி’ என்றாலும் பாரு சிரித்துக் கொண்டே ஏற்றது சிறப்பு. ‘பாட்சா.. பாரு.. யேசு போல பொறுமை பாரு’ என்று பாட்டுப்பாடி டைமிங்கில் கிண்டல் செய்தார் வினோத். கம்மு அடிப்பதைப் பார்த்து பாரு சிணுங்கியதால் ‘செல்லச் சண்டை போடுகிறாய். தள்ளி நின்று தேடுகிறாய்’ என்கிற பாடலைப் பாடி கிண்டல் செய்தார்கள். “கார்க் பால் தந்திருக்கலாம். பாருவோட முகம் குருதிப்புனல் கமல் மாதிரி ஆகியிருக்கும்” என்று கொடூரமான காமெடி செய்தார் வினோத்.
சுபிக்ஷா குறைந்த பாயிண்ட்டில் இருந்ததால் அவரை யாரும் பெரும்பாலும் தொந்தரவு செய்யவில்லை. பிறகு அவரும் அவுட் ஆகி அழுகையுடன் அமர்ந்திருந்தார். “அப்பத்தா கிட்ட போங்கடா.. என்னையே அடிக்காதீங்க” என்று கதறினார் பாரு. ஆனால் அந்தப் பக்கம் போக விக்ரமிற்கு பயம். (ஏற்கெனவே வில்லங்கம்) “பாரு.. பத்த வைக்காத’ என்று காண்டானார் திவ்யா.
“அடிக்கப் போறேன். தயாரா இருங்க” என்று திவ்யாவை அடிக்க முடிவு செய்தார் விக்ரம். “மூஞ்சி மேல அடிக்காதீங்க. அத வெச்சுதான் பொழப்பு ஓடுது” என்றார் திவ்யா. (ஸ்மைலி பாலில் என்னவாகி விடும்?!) “மூஞ்சை மூட முடியாது” என்று திவ்யா அடம்பிடிக்க “இதுக்குத்தான் அந்தப் பக்கம் போகமாட்டேன்னு சொன்னேன்” என்று எரிச்சலானார் விக்ரம்.
பிறகு திவ்யாவும் அவுட் ஆக இறுதி வரை தாக்குப் பிடித்த பாரு வெற்றி. அத்தனை பந்தடிகளைத் தாங்கிக் கொண்டு இறுதி வரை நின்ற பாருவிற்குப் பாராட்டு.

துரத்தி ஓடி விளையாடிய பாரு - கம்மு. என்னடாங்கடா நடக்குது?
விக்ரம் - திவ்யா சண்டை மீண்டும் ஆரம்பித்தது. “யம்மா.. தாயி.. மன்னிச்சிடும்மா” என்று பாவனையாக கும்பிட்ட விக்ரம், ‘ஆளும் மண்டையும்..’ என்று முனகிக் கொண்டே சென்றார்.
பொறுமைசாலி விக்ரமின் பிம்பம் கரைந்து அவருடைய கோப தாபங்கள் வெளிப்படத் துவங்கியிருக்கிறது. இது இயல்புதான். கம்மு போன்ற முன்கோபியோடு ஒப்பிடும் போது ஒருவர் இத்தனை பொறுமையாக இருப்பதே பாராட்டத்தக்கதுதான்.
“உன் மேல தனி காண்டுல இருக்காங்க” என்று திவ்யாவை ஏற்றித் தந்தார் பாரு. “திவ்யா பயங்கர வெஷம்” என்று நண்பர்களிடம் வெறுப்பைக் கொட்டினார் விக்ரம். “பாரேன்.. இதப் பத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் பேசுவான். லைட் ஆஃப் பண்ணப்புறம் சுபிக்ஷா கூட மூணு மணி நேரம் பேசுவான்” என்று வெறித்தனமாக புறணி பேசினார் திவ்யா.
கார்டன் ஏரியாவில் கம்மு - பாரு ரொமான்ஸ் மீண்டும் துவங்கியது. பவுடரை வாரி கம்முவின் முகத்தில் அடித்தார் பாரு. பனிப்பிரதேசத்திற்கு ஹனிமூன் சென்றிருக்கும் தம்பதியினர் ஐஸ்கட்டிகளை எடுத்து அடித்துக் கொள்வதற்கு இணையான காட்சி. பாரு ஓட கம்மு துரத்தி வர ஒரே கூத்தாக இருந்தது.

இதைப் பார்த்து காண்டான விக்ரம் “என்னாதிது.. பாரு கம்மு ரொமான்ஸ் 2.Oவா?.. கோவத்தைக் காட்டினேன்னு சொல்றே.. ஆடியன்ஸிற்கு அப்படித் தெரியாது” என்று பாருவை எச்சரித்தார். “தலைவன் தலைவி படம் பார்க்கற மாதிரி இருக்கு” என்று கிண்டடிலத்தார் சபரி.
பாருவின் இந்த செல்லமான கோபம், மீண்டும் திரைமறைவிற்கு செல்லாமல் இருந்தால் சரி.
TTF5 முடிந்த நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து முன்னணியில் இருப்பவர் சபரி. யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.





















