Jana Nayagan: 'ஜனநாயகன்' ரீமேக்கா? - சொல்கிறார் 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனி...
BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ - சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா
டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ்.
அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 86
TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா வலி தாங்காமல் இறங்க, பாடலுக்கு ஆடிய கம்மு கால் விலகி அவுட் ஆனார். இந்த டாஸ்க்கில் அரோராவிடமிருந்த நகைச்சுவை உணர்வு நன்றாக வெளிப்பட்டது.
“பசிக்குது.. குளுருது.. பாத்ரூம் போகணும்.. அப்லோட், டவுன்லோட் பண்ணணும்.. டிக்கெட் டாஸ்க்ல வந்து மேலே டிக்கெட் வாங்கிடுவேன் போலயே?!” என்றெல்லாம் ஜாலியாக அனத்திக் கொண்டிருந்த அரோவை ‘தடை... அதை உடை’ என்று பாடலைப் போட்டு vibe ஏற்றி உற்சாகப்படுத்தினார் பிக் பாஸ்.

தன் பங்கிற்கு அரோவை உற்சாகப்படுத்த ‘பொண்ணு இவ்ளோ கஷ்டப்படுதேன்னு அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஈஸியாத்தான் தருவாரு பிக் பாஸ். ரொம்ப நல்ல மனுஷன்’ என்று விக்ரம் சொல்ல, ‘நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்’ என்று பங்கப்படுத்தினார் பிக் பாஸ்.
‘இல்ல.. பாஸ்.. லுலுவாய்க்கு.. பொய்மையும் வாய்மையுடைத்த.. திருக்குறளை கனி சொல்லிக் கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று விக்ரம் சமாளிக்க “யாகாவாராயின் நா காக்க’ன்னு சொல்லித் தரலையா?” என்று கவுன்ட்டர் அடித்தார் பிக் பாஸ்.
பாரு - கம்மு சண்டையைத் தொடர்ந்துகாட்டி வெறுப்பேற்றுவதைவிடவும் இதுபோன்ற ஜாலியான தருணங்களை காட்டுவது சிறப்பு.
இந்த முதல் டாஸ்க்கில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நின்று முதலிடத்தை பிடித்தவர் சுபிக்க்ஷா.
விஜய்சேதுபதிக்காக வலி தாங்கிய அரோரா
நாள் 86. ‘அர்ஜூனரு வில்லு’ என்கிற வேக் அப் பாடல் ஒலிக்க, அரோரா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரையும்விட அதிகமாகப் போராடிய சுபிக்ஷா உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்.
‘பரவாயில்லயே.. அரோ. டாஸ்க்லாம் உன்னால பண்ண முடியாதுன்ற மாதிரியே சொல்வாங்க.. இப்ப சாதிச்சிட்ட’ என்று சபரி பாராட்ட “என்னால டாஸ்க் பண்ண முடியாதுன்னு அமித் சொன்னாரு. ‘இல்ல.. அவங்களால பண்ண முடியும்ன்னு சேது சார் சொன்னாரு.. இது அவருக்காக” என்று விசேவிற்கு ஐஸ் வைத்தார் அரோ.
ஒரு பக்கம், கம்மு - வினோத் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சான்ட்ராக்கா ஏன் PR விஷயத்தையெல்லாம் இழுத்தாங்க தெரியுமா.. அவங்க கேம் டவுன் ஆகுது.. பருப்பு வேகலை.. அதான்” என்று கம்மு சொல்ல, ‘அதான் ஓப்பனா தெரியதே?” என்று பின்பாட்டு பாடினார் வினோத்.

இன்னொரு பக்கம் கம்முவைப் பற்றி விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. “பிரேக் அப் ஆயிடுச்சு.. ஒருத்தனை நம்பி சில விஷயங்களை சொன்னேன்.. அதுவே மைண்ட்ல ஓடுது. நான் பகடைக்காயா பயன்படுத்தப்பட்டேனா.. அப்படி வர்ற ஃபீல் எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்று புலம்பிக்கொண்டிருந்தார் பாரு.
இப்படியெல்லாம் ‘அபலை’ பாத்திரம் ஏற்று புலம்புமளவிற்கு பாரு அத்தனை அப்பாவியா என்று சந்தேகம் வருகிறது. கம்முவுடனான சண்டைக்குப் பிறகு, பாரு இப்போதெல்லாம் விக்ரம் பக்கம் சாய்ந்து வருகிறார். விக்ரம் உஷாராக இருப்பது நல்லது.
டாஸ்க்கின் இடையே கடுமையாக மோதிக் கொண்ட பாரு - கம்மு
TTF- டாஸ்க் 2 துவங்கியது. ஒரு பெட்டியில் இருக்கும் துளைகளின் மூலம் பந்துகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் வெள்ளை பந்துகள் இருக்கும் நிலையில் ஒரு கறுப்பு பந்து இருக்கும். தங்க நிற பந்துகளும் இருக்கும். கறுப்பு பந்து வந்தவர் அவுட். தங்க பந்து வந்தவர், சக போட்டியாளர் ஒருவரைத் தேர்வு செய்து அவரிடமிருந்து ஐம்பது சதவிகித பந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
முதல் சுற்றில் அரோவும் சுபியும் ஜாலியான மோடில் உக்கிரமாக மோதிக் கொண்டார்கள். சுபிக்ஷாவிடம் கருப்பு பந்து சிக்கியதில் அவர் அவுட். இந்த டாஸ்க்கிலும் முன்னிலையில் வரலாம் என்று நினைத்திருந்த சுபிக்ஷா ஏமாந்து போனார். விக்ரமிற்கும் பாருவிற்கும் தங்கப் பந்து கிடைத்தது. இருவருமே கம்முவிடமிருந்து பந்தைப் பிடுங்க முடிவு செய்தார்கள். இந்தச் சுற்றில் பாருவிற்கு அதிக புள்ளிகள். எனவே கம்மு காண்டானார்.

“யாரு அதிக பாயின்ட் வெச்சிருக்காங்களோ.. அவங்களை உடைக்கணும்” என்று விக்ரமிடம் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார் பாரு. இரண்டாம் சுற்றில் வினோத் அவுட். வழக்கம் போல் தலையில் அடித்துக்கொண்டு நொந்துகொண்டே விலகினார்.
ஆட்டத்தின் இடையே கம்முவிற்கும் பாருவிற்கும் இடையே ஆவேசமான சண்டை ஆரம்பித்தது. “நீ என்ன ஹீரோவா.. நான் என்ன வில்லியா.. போடா” என்று சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் பாரு.
‘பாரு என்னை அடிச்சிட்டா’ - சீன் போட்டு அலறிய கம்மு
மூன்றாவது சுற்றில் விக்ரமின் பந்துகளை கம்மு கைப்பற்ற முயன்றபோது ‘உன் ஏரியாவிற்கு நான் வரல.. என் ஏரியாவிற்கு நீயும் வராத’ என்று டீல்போட முயன்றார் விக்ரம். இந்தச் சுற்றில் பாரு - கம்மு இரண்டு பேருமே அவுட் ஆனார்கள். ‘கர்மா is a பூமராங்.. வன்மம் வீழ்த்தப்பட்டது” என்று இருவருமே சர்காஸமாக கிண்டல் செய்து கொண்டார்கள்.
அதற்கு முன்னால் பாருவின் அருகே சென்ற கம்மு ‘உச்ச்ச்ச… ‘என்று ஒழுங்குகாட்ட முயல, ‘போடா அங்கிட்டு’ என்று மேலே தட்டினார் பாரு. அது செல்லமான அடி போலத்தான் இருந்தது. ஆனால் கம்முவோ “என்னை அடிச்சிட்டா.. இவ யாரு என்ன அடிக்க.. ஒழுங்கா மன்னிப்பு கேட்கணும்” என்று ஓவர் பில்டப் செய்து ஆர்ப்பாட்ட செய்ய ஆரம்பித்துவிட்டார்.
சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் பறந்தன. பாருவின் பேஸ்கெட்டை கம்மு ஓங்கி உதைக்க “டேய்.. என்னடா பண்றே.. இது என்ன கேம்..?” என்று சபரியும் வினோத்தும் கண்டித்தனர். ‘அவன் பந்தை எடுத்தது தப்பா.. ஏன் இப்படிப் பண்றான்” என்று கதறிய பாருவை, சான்ட்ராவும் திவ்யாவும் சமாதானப்படுத்தினார்கள்.

நிலைமை மோசமாவதை உணர்ந்து ‘நீ வா.. உள்ள போகலாம்’ என்று கம்முவை அழைத்துச் சென்றார் விக்ரம். “வேணும்னே.. பண்றாங்க.. நீ ஏன் கூடையை அடிச்சே.. பாருவை அடிக்க வேண்டியதுதானே?” என்று உண்மையை வாய் தவறி சொன்னார் வினோத். “டேய் ரெட் கார்டு கொடுத்துடுவாங்கடா” என்று கம்ருதீன் சொல்லவும் ‘அய்யோ. காமிரா.. நான் அடிக்கச் சொல்லலை. கேட்கச் சொன்னேன்” என்று மாற்றிக்கொண்டார் வினோத்.
“உன்னை அப்படில்லாம் அடிவாங்க விட்ற மாட்டோம்” என்று பாருவிற்கு ஆறுதல் சொன்னார் சபரி. (டேய்… ஆரம்பத்துல என்னை அடிச்சவனே நீதாண்டா’ என்று பாருவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம்!). ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என்கிற மோடில் “ஆட்டத்துல இருக்கறவங்க வெளியே வந்து ஸ்கோர் சொல்லுங்க’ என்றார் பிக் பாஸ்.
பாருவும் கம்முவும் ஆட்டத்திலிருந்து வெளியேறியதால் ஆட்டம் சற்று அமைதியாகத் தொடர்ந்தது.
சான்ட்ராவிற்கு அடித்த லக் - அதிக பந்து பெற்று முன்னணி
அடுத்த சுற்றில் அரோவிடம் கறுப்பு பந்து சிக்கினாலும் கூடவே தங்கப் பந்தும் இருந்தது. எனவே தான் காப்பாற்றப்படுவோம் என்கிற மாதிரி அரோ நம்பிக்கையுடன் இருக்க, அவரிடமிருந்து கணக்கு பார்த்து பந்துகளைப் பிடுங்கிய பின்னர் ‘அரோ அவுட்’ என்று டிவிஸ்ட் தந்தார் பிக் பாஸ். ‘யாரிடமிருந்து பந்துகளை வாங்கப் போகிறீர்கள்?” என்று பிக் பாஸ் அரோவிடம் கேட்க, சபரி பக்கம் நைசாக கை காட்டினார் பாரு. அடுத்த சுற்றில் திவ்யா அவுட்.

கடைசி சுற்றில் விக்ரம், சான்ட்ரா மற்றும் சபரி மிஞ்சினார்கள். சான்ட்ராவிடம் கறுப்பு பந்து சிக்கியது. அதை விக்ரமிடம் போட்டு விட்டார். அதை விக்ரம் மீண்டும் சான்ட்ராவின் கூடையில் போடுவதற்கு பஸ்ஸர் அடித்து விட்டது. எனவே விக்ரம் அவுட். மட்டுமல்லாமல் சான்ட்ராவிடம் தங்கப் பந்து இருந்ததால் கூடுதல் அதிர்ஷ்டம். கடைசி சுற்றில் சான்ட்ராவிற்கு 84 பந்துகள் கிடைத்தன. சபரியிடமிருந்து பாதி பந்துகளை பிடுங்கினார் சான்ட்ரா. இந்தச் சுற்றில் சான்ட்ராதான் லீடிங்.
“கம்ருதீன் ஆக்ரோஷமா நடக்கற பார்த்தா எனக்கு பதட்டமாயிருக்கு” என்று சான்ட்ரா நடுங்க, ‘எனக்கும் அப்படித்தான் இருக்கு” என்று பின்பாட்டு பாடினார் பாரு. “அவன் கிட்ட பழகிய மொமெண்ட்ஸை நினைச்சாலே கடுப்பா இருக்கு” என்று நொந்து கொண்டார் பாரு.
மன்னிப்பு கேட்டு டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கிய கம்மு
காமிரா முன்பு வந்த கம்மு “இங்க நடக்கறது எனக்குத்தான் தெரியும். என்னை ரொம்ப டிரிக்கர் பண்றாங்க. என்னை மன்னிச்சிடுங்க” என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டார். (எத்தனை முறை இப்படி பண்ணுவீங்க?!). இரண்டாவது டாஸ்க்கின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்று அரோரா லீடிங்கில் இருந்தார்.
TTF- டாஸ்க் 3 துவங்கியது. ‘சுத்திச் சுத்தி வந்தீக’ என்று தலைப்பிட்டிருக்கலாம். ஒரு வட்டப்பலகையை சுற்றி ஸ்க்ருவிலிருந்து விடுவித்து எதிர்ப்பக்கம் சென்று பொருத்திவிட்ட பிறகு, துண்டுப்படங்களை சரியாகப் பொருத்தவேண்டும்.
வட்டப்பலகையில் இருந்து விடுவிப்பதற்கு அதன் கூடவே சுற்ற வேண்டும் என்பதால் பெரும்பாலோனோர் தலை சுற்றி அரை மயக்கத்துடன் எதிர்ப்பக்கம் சென்றார்கள். அந்த மயக்கத்துடன் துண்டுகளை அடுக்கவேண்டும். இதில் பலகையை எடுப்பதற்கே சுபிக்ஷா நிறைய நேரம் தடுமாறினார். குறைந்த நேரத்தில் முடிப்பவருக்கு முதலிடம் என்கிற வகையில் விக்ரம் முதலில் வந்து 9 பாயின்ட்டுகளைப் பெற்றார்.

விக்ரம், சபரி, அரோ இப்போதைக்கு முன்னிலையில் இருந்தாலும், சான்ட்ராவிற்கு அதிர்ஷ்டம் அடித்ததுபோல் அடித்தால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடைசியில் வந்த சுபிக்ஷா, சோகமான முகத்துடன் நிற்க அவருக்கு ஆறுதல்சொன்னார் சான்ட்ரா.
முன்கோபத்துடன் வார்த்தைகளையும் காலையும் வீசி விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு டேமேஜ் கன்ட்ரோல் செய்யும் வேலையை கம்மு தொடர்ந்து செய்துவருகிறார். அவரை டிரிக்கர் செய்யும் வேலையை பாரு சிறப்பாக செய்து விட்டு பிறகு ‘விக்டிம் கார்டை’ கையில் எடுக்கிறார்.
பாரு -கம்மு சண்டையில்தான் டிஆர்பியின் சூட்சுமம் அடங்கியிருப்பதாக பிக் பாஸ் டீம் கருதுகிறதோ என்னமோ?!


















