கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர்.
இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.