கோத்தகிரி: கலையின் வழியாக பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிர்ம...
`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே குடியர்த்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். அதோடு எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு மனைவிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் அதனை கொண்டாடுவதை ஆமீர் கான் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது ஆமீர் கான் மூன்றாவதாக கெளரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
முன்பு நடந்த இரண்டு திருமணங்களும் நிலைத்து நிற்காத காரணத்தால் கெளரியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஆமீர் கான் வாழ்ந்து வருகிறார். தற்போது எங்கு சென்றாலும் தனது லைஃப் பார்ட்னரை அழைத்து செல்வதை ஆமீர் கான் வழக்கமாக கொண்டுள்ளார். புதிய லைஃப் பார்ட்னர் குறித்து ஆமீர் கான் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில்,' 'கௌரியைச் சந்தித்ததும், எங்கள் உறவு தொடங்கியதும் எனது அதிர்ஷ்டம். அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் இருக்கும்போது நான் மன அமைதியை உணர்கிறேன்.
கிரண் (ராவ்) மற்றும் ரீனா (தத்தா) உடனான எனது முந்தைய உறவுகளும் மிகவும் ஆழமானவைதான், ஆனால் அவை சரியாக அமையவில்லை. நீங்கள் கேட்டபோதுதான் உணர்ந்தேன், கௌரி என் வாழ்க்கையில் வந்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் கெளரி வந்த பிறகு இப்போதுதான் முழுமையடைந்ததாக உணர்கிறேன்.
நான் எப்படியோ அப்படியேதான் இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தவறுகள் செய்கிறான். யாரும் முழுமையானவர் (perfect) அல்ல. உங்கள் தவறை நீங்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதால், நீங்கள் சிறியவர் ஆகிவிடமாட்டீர்கள்.
நான் கூட எனது வாழ்க்கை மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நான் எப்போதும் முயற்சிப்பேன். ஒரு மனிதனாகவும், ஒரு நடிகனாகவும் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். எனது தவறுகளை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நான் எதையும் வெளிப்படையாகப் பேசும் மனிதன். நான் எதை நினைக்கிறேனோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். பல ஆண்டுகளாக, மற்ற எல்லாவற்றையும் விட எனது வேலைக்கே முன்னுரிமை அளித்தேன்.
நான் ஏற்கனவே திருத்திக் கொள்ளத் தொடங்கிய ஒரு தவறு என்னவென்றால், எனது நெருக்கமானவர்களுக்கும் உறவுகளுக்கும் போதிய நேரத்தை வழங்காததுதான். நான் 30-35 ஆண்டுகளாக வேலை, திரைப்படம் மற்றும் நடிப்பிற்கு மட்டுமே அடிமையாக இருந்தேன். கோவிட் பெருந்தொற்று காலத்தில் எனது வாழ்க்கையை மீண்டும் ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை.
அப்போதுதான் நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன் என்பதையும், இந்த நேரம் மீண்டும் வராது என்பதையும் உணர்ந்தேன்,''என்று அவர் கூறினார்." ஆமீர் கான் தனது முதல் மனைவி ரீதா தத்தாவை 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2005ம் ஆண்டு தயாரிப்பாளர் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.



















