அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவி...
கேமரா, நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் - மலையாள சினிமாவிலிருந்து முழுநீள ஏ.ஐ படம்!
இன்றைய தேதியில் ஏஐ, நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டிவிடுகிறது.
அதற்கேற்ப தொழில்நுட்பங்களும் விரிந்து, ஏஐ-ம் நம் அன்றாடத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. சினிமாவில் ஏஐ பல்வேறு துறைகளில், பல்வேறு அம்சங்களில் பயன்படுகிறது.

மறைந்துபோன பாடகர்களின் குரலுக்கு ஏஐ மூலமாக மீண்டும் உயிர் தருவது, மறைந்த நடிகர்களை ஏஐ மூலம் மீண்டும் திரைக்குக் கொண்டு வருவது என எண்ணற்ற வடிவங்களில் ஏஐ சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது.
மலையாள சினிமாவில் ஒரு முழுநீளத் திரைப்படத்தையே ஏஐ மூலம் எடுத்து முடித்து, வெளியீட்டிற்கான வேலைகளைத் தற்போது கவனித்து வருகிறார்கள்.
'வாக்தத்த பூமி' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம், மலையாளச் சினிமாவின் முதல் ஏஐ திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.
சுயாதீனத் திரைப்பட இயக்குநர் சித்திக் பறவூர் கதை, திரைக்கதை எழுதி, அனிமேஷன் மற்றும் இயக்கப் பணிகளைக் கவனித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஒரு காட்சிக்குக்கூட கேமராவைப் பயன்படுத்தவில்லையாம். முழுக்க முழுக்கப் படத்தின் அத்தனை வேலைகளையும் ஏஐ மூலமாகவே செய்திருக்கிறார்கள்.
கூகுளின் விஇயோ 3 (Veo 3), ஹிக்ஸ்ஃபீல்ட் (Higgsfield), ஓபன்ஆர்ட் (OpenArt), சாட்ஜிபிடி (ChatGPT), கூகுளின் ஜெமினி (Gemini), லெவன்லேப்ஸ் (ElevenLabs) மற்றும் சீடன்ஸ் 2 (Seedance 2) போன்ற பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் இப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு, ஏஐ குறிப்புகளுக்கு நிஜ மனிதர்களின் முகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 72 நிமிட நீளமுள்ள இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.




















