Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசி...
கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது
கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42) தவறான நோக்கத்துடன் தன்னை தொட்டதாக வீடியோ வெளியிட்டார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த தீபக் அந்த வீடியோவை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த 18-ம் தேதி காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தனது வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக ஷிம்ஜிதா முஸ்தபா அந்த பதிவை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவமானபடுத்தும் நோக்கில் மனப்பூர்வமாக ஷிம்ஜிதா முஸ்தபா வீடியோ வெளியிட்டதாக தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் தாய் கன்யகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

வழக்குப்பதிவு ஆனதைத் தொடர்ந்து, ஷிம்ஜிதா முஸ்தபா தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிவந்த நிலையில் முன் ஜாமின் பெற அவர் முயன்றார். இதற்கிடையே வடகரா பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கிருந்த அவரை மப்டியில் சென்ற மகளிர் போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
பின்னர், தனியார் காரில் அவரை கோயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவரை குந்தமங்கலம் மஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஷிம்ஜிதா முஸ்தபாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னால் ஏதோ திட்டம் உள்ளதாக தீபக்கின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஷிம்ஜிதா முஸ்தபாவின் மொபைல் போனை கைப்பற்றி பரிசோதிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
















