செய்திகள் :

கேஸ் தட்டுப்பாடு: 30 நாள் வரும் சிலிண்டரை 40 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும்! - சில டிப்ஸ்!

post image

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல  நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே,  தமிழகத்திலும் வணிக ரீதியான சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், எரிபொருளைச் சேமிக்கவும், சமையல் வேலைகள் தடைப்படாமல் தொடர மாற்று சமையல் முறைகளைக் கையாளவும் இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் (NRAI) உணவகங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.

உணவகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ஆலோசனைகளில், தற்போதைய  அரசியல் சூழல் காரணமாக வணிக எல்பிஜி விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை மோசமடைந்தால் உணவகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவகங்கள் தங்களது மெனுவை  முறைப்படுத்தவும், எரிபொருளைச் சேமிக்கவும், குறைந்த எரிவாயு மற்றும் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய உணவுகளுக்குத் தற்காலிகமாக முன்னுரிமை அளிக்கவும் NRAI வலியுறுத்தியுள்ளது.

மொத்தமாகச் செய்கிற 'பேட்ச் குக்கிங்' (batch cooking ), சமைப்பதற்கு முன் தானியங்கள், அரிசி போன்றவற்றை ஊறவைப்பது,  பாத்திரத்தின் அளவுக்கேற்ற சரியான பர்னரை பயன்படுத்துவது என பல விஷயங்களை வலியுறுத்தியிருக்கிறது.


வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களைப் பீடித்துள்ளது.  வீட்டில் சமைக்கும்போது, எரிபொருளை சேமிக்க என்னவெல்லாம் செய்யலாம், எப்படியெல்லாம் திட்டமிடலாம்....? 

சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் வழங்கும் டிப்ஸ் உங்களுக்காக....

சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

சமைக்க ஆரம்பிப்பதற்கு முன் சமைக்கத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை ஆன் செய்துவிட்டு, அரிசியை எடுப்பது, கழுவுவது, காய்கறிகளை நறுக்குவது என  செய்யாமல், காய்கறிகள் நறுக்குவதில் தொடங்கி, புளியைக் கரைப்பது, தாளிக்கும் பொருள்களை எடுத்து வைப்பது என எல்லாவற்றையும் முன்கூட்டியே ரெடி செய்து கொண்டுதான் அடுப்பையே ஆன் செய்ய வேண்டும்.

கூடியவரையில் சமையலுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தப் பழக வேண்டும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகளையும் நன்றாகக் கழுவிவிட்டு, பருப்புடன் சேர்த்து அப்படியே முழுதாக குக்கரில் வேகவைக்கலாம். வெந்ததும் தேவைப்பட்டால் தோல் நீக்கி, வெட்டி, பொரியல் செய்யலாம். சமைக்கவும் எளிதாக இருக்கும். வேலையும் ஈஸியாகும். 

அடுப்பை பெரிதாக எரியவிட்டுச் சமைக்கும்போது, எரிபொருள் அதிகம் வீணாகும்.  உணவுப்பொருள் கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பை  மீடியம் அல்லது குறைந்த தணலில் வைத்தே சமைக்க வேண்டும்.

எப்போது மூடிவைத்துச் சமைக்க வேண்டும், எந்த அளவு தண்ணீர் விட்டுச் சமைக்க வேண்டும் என்பதில் சமைக்கும் எல்லோருக்கும் தெளிவு இருக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் வைத்துக் கொதிக்கவைத்து, மீதமாகும் நீரைக் கொட்டுவது தவறு. அளவான தண்ணீர் விட்டு, மூடி வைத்துச் சமைப்பதுதான் சரியானது. 

4-5 நாள்களுக்கொரு முறை இப்படி மொத்தமாக தாளித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

தாளிப்பு என்பது தினசரி சமையலில் தவிர்க்க முடியாதது.  ஒவ்வோர் உணவுக்கும் தினம் தனித்தனியே தாளிப்பதால் எரிபொருள் வீணாகும்.

 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்ந்த தாளிதம் தனியேவும்,  கடுகு, சீரகம், வெந்தயம் சேர்ந்த தாளிதம் தனியேவும் தயார்செய்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். எந்தச் சமையலுக்கு எது தேவையோ, அதைப் பயன்படுத்தலாம்.

மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் அதை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தப் பழக வேண்டும்.  காய்கறிகளை வேக வைக்கக்கூட அதைப் பயன்படுத்தலாம். இண்டக்ஷன் ஸ்டவ் இன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். அப்பளம், வடகம் போன்றவற்றைப் பொரிக்கவும் பயன்படுத்தலாம்.

தண்ணீர் கொதித்த பிறகு காய்கறிகளைச் சேர்ப்பதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. அதற்கு பதில் கெட்டிலில் வெந்நீர் வைத்துக்கொண்டு, அதைப் பயன்படுத்தினால், தண்ணீர் கொதிக்கும் நேரமும் எரிபொருளும் மிச்சமாகும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரையும் பல விதங்களில் பயன்படுத்தலாம். அதிலேயே ஸ்டீமர், கீழே அரிசி வேகவைக்கவெல்லாம் வசதிகள் வந்துவிட்டன. ரோபோ அடுப்புகள் இன்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன.  டைமர் செட் செய்து விட்டால், அதுவே ஆன் ஆகி, சரியான பக்குவத்தில் சமைத்து முடித்துவிடும்.

சரியான கேட்ஜெட் பயன்பாடு நேரம், எரிபொருள் என எல்லாவற்றையும் மிச்சப்படுத்தும்.

ரோபோ அடுப்புகள் இன்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன. டைமர் செட் செய்து விட்டால், அதுவே ஆன் ஆகி, சரியான பக்குவத்தில் சமைத்து முடித்துவிடும்.

கொஞ்சமாகச் சமைக்க சிறிய பாத்திரமும், அதிகம் சமைக்க பெரிய பாத்திரமும் பயன்படுத்துவதுதான் சரியானது. பெரிய பாத்திரத்தில் கொஞ்சமாகச் சமைத்தால் எரிபொருள் வீணாகும்.  அகலமான பாத்திரத்தில் சமைக்கும்போது சீக்கிரம் வேகும், எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

இந்த விஷயங்களை ரெகுலராகவே பின்பற்றத் தொடங்கினால், வழக்கமாக 30 நாள்கள் வரும் சிலிண்டரை இன்னும் 10 நாள்கள் தள்ளி 40 நாள்கள் வரை வரும்படி செய்யலாம்'' என்கிறார் மல்லிகா பத்ரிநாத்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலை வேண்டாம்; சிலிண்டர் இல்லாமலும் சமைக்க சில ஐடியாக்கள்!

போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் எரிவாயு (LPG) விநியோகத்தில் சிக்கல்கள் வரலாம் என்ற செய்திகள் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒரு சிறந்த மாற்று எ... மேலும் பார்க்க

`போனுக்கும் செக், நண்பர்களுக்கும் தடை! 23 ஆண்டு திருமணத்திலும் தொடரும் சந்தேகம்' - `பேசும் மனசு' 01

கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்த பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்க... மேலும் பார்க்க

Virtual Hug: வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா? மொத இதைப் படியுங்கள்!

என்னங்க, ஒரே எந்திரத்தனமா, "என்னடா வாழ்க்கை இது?" அப்படின்னு தோணுதா? எப்பவும் ஒரே மாதிரி வேலை, படிப்பு, வீடு, டிராஃபிக் அப்படின்னு ஓடிட்டே இருக்கும்போது இந்தச் சலிப்பு வர்றது ரொம்ப சகஜம்தான். நீங்க மட... மேலும் பார்க்க