தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்க...
கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக்கிய நல்லிரவு கொலை
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. மாநில முதல்வர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.
அதோடு மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கலவரம் மற்றும் வன்முறை நடந்து வருகின்றன. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு கொல்கத்தா அருகில் உள்ள மத்யகிராம் என்ற இடத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுவந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் காரில் சென்ற போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவரது காரைப் பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சந்திரநாத் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
கொலையாளிகள் ஒரு கார் மற்றும் நான்கு இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முன்பு சந்திரநாத் சென்ற காரை மற்றொரு கார் ஒன்று குறுக்கிட்டு வழிமறித்தது. சந்திரநாத் கார் நின்றவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் துப்பாக்கியால் சரமாறியாகச் சுட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் திட்டமிட்டு இப்படுகொலையைச் செய்துள்ளனர். காரில் சந்திரநாத் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
துப்பாக்கி தோட்டா காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சந்திரநாத்தைத் தாக்கியது. இதில் கார் கண்ணாடியும் சேதம் அடைந்தது. சந்திரநாத் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இத்துப்பாக்கிச்சூட்டில் சந்திரநாத் கார் டிரைவரும் காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தின் போது சுவந்து அதிகாரி காரில் இல்லை.
இது குறித்து கேள்விப்பட்டதும் சுவந்து அதிகாரியும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். மருத்துவமனையில் சந்திரநாத் உயிரிழந்தார். அவர் கடந்த பல ஆண்டுகளாக சுவந்து அதிகாரிக்கு உதவியாளராக இருக்கிறார். சந்திரநாத்தான் சுவந்து அதிகாரியின் அரசியல் பணிகளை ஒருங்கிணைத்து வந்தார்.
இத்துப்பாக்கிச்சூட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுவந்து அதிகாரியின் சகோதரர் திப்யந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ஜ.க நிர்வாகி நிகில் பிரசுன் கூறுகையில், ''இந்தச் சம்பவம், இத்தனை ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் வளர்த்தெடுத்த, வன்முறை கலாசாரத்தின் ஒரு வெளிப்பாடாகும்.
அவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்தக் கொலைக்குப் பின்னால் ஒரு ஆழமான சதி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அப்பாவிகளைக் கொலை செய்கிறது," என்று தெரிவித்தார்.
ஆனால் இத்தாக்குதலுக்கு பா.ஜ.கதான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தக் கொலையைக் கண்டித்ததுடன், பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகள் கடந்த மூன்று நாட்களாக தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
மத்யகிராம் தொகுதியில் கடுமையான போட்டிக்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 2399 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில் ஈடுபட்டதாக 80பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகங்கள் பா.ஜ.கவினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.






















