Email இயக்கம் நடத்தும் TN Congress - TVK உடன் கூட்டணியா? | NDA -வில் DMDK | DMK ...
கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல' கலைத் திருவிழா
கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்', தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம் ஹாலில் நடைபெற்ற இந்த விழா கலை, புகைப்படம், நாடகம், இலக்கியம், விவாதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது.
1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிந்தனை மன்றம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சமூகப் பிரச்னைகள், முக்கிய நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் மேடையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் கலைத் திருவிழா, மாணவர்களின் பன்முகத் திறன்களைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

விழாவின் நுழைவிடத்தில் வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் விருப்பத்தின்பேரில், ஃபேஸ் பெயின்ட்டிங் செய்யப்பட்டது. ஹால் முழுவதும் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முனைவர் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி ஐஸ்வர்யாவின் அழகிய வரைபடங்கள் தனியாக ஒரு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
முதல் நாள் (பிப்ரவரி 12) காலை அமர்வில், புகைப்படக் கலைஞர் பாலாஜி மகேஸ்வர் சிறப்புரை ஆற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்னர், புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் போட்டோகிராபராக மாறிய அவர், உலகின் முதல் புகைப்படம், முதல் மனித உருவப் புகைப்படம், ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார்.
"ரெசிசீவ் மூவ்மென்ட்" போன்ற நுட்பங்களைப் பற்றி பகிர்ந்த அவர், “புகைப்படங்கள் எடுப்பதற்கு பல்வேறு ஸ்டைல்கள் இருந்தாலும், அவை நினைவுகளாக என்றும் நம்முடன் தொடர்ந்து வரும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
மதிய வேளையில், ஆதி அத்தி என்ற தலைப்பில் சோழப் பெருவளத்தான் மகள் ஆதியும் சேர மன்னன் அத்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம், கரிகாலன் குழுவால் தெருக்கூத்து வடிவில் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் தெருக்கூத்து மாணவர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள், “இது எங்களுக்கு இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்களிடம் தெருக்கூத்தைக் கொண்டு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.

இரண்டாம் நாள் (பிப்ரவரி 13) காலையில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “கலை மற்றும் காதல்” என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான விவாத அமர்வு நடைபெற்றது.
விழாவின் இறுதியில், எழுத்தாளர் முருகவேல் சிறப்புரை ஆற்றினார். கொங்கு இலக்கியங்களின் வரலாற்றை எவ்வாறு எழுத வேண்டும், எழுதக் கூடாது என்பதை விளக்கிய அவர், இலக்கியம் உணர்வு சார்ந்ததாக மட்டுமன்றி அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது குப்பைக்காரன் கதை மூலம் நகைச்சுவையாக விளக்கி, மாணவர்களை ஈர்த்தார்.

விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில்,"குட்டி ஆகாயம்", "ஆம்னி புக் ஹவுஸ்", "பரிசல் பதிப்பகம்' உள்ளிட்ட பதிப்பகங்கள் இரு நாள்களும் புத்தகக் கண்காட்சி நடத்தின. மேலும், Buy a Book - Gift a Book மற்றும் Buy a Photo - Gift a Photo மூலம் புத்தகங்களையும் புகைப்படங்களையும் பகிரும் அன்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்தக் கலைத் திருவிழா, மாணவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதோடு, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. வருடம் தவறாமல் கலைத் திருவிழா நடத்தும் சிந்தனை மன்றத்தின் இத்தகைய முயற்சிகள் கல்லூரி வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.








.jpg)











