உதயமானதா அய்யா பாமக? | PMKவிலிருந்து உருவான கட்சிகள் லிஸ்ட்! | TN Election 360 u...
`சிகை கொற்றன் வர கண்ட' - எகிப்து பிரமிடுகளில் தமிழ் கல்வெட்டுகள்; 2,000 ஆண்டுக்கால ஆச்சர்யம்!
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று நாம் வைத்திருப்பது போன்ற நவீன திசைகாட்டிகளோ அல்லது ஜிபிஎஸ் வசதிகளோ இல்லாத காலத்தில், பாய்மரக் கப்பல்களில் காற்றையே துணையாகக் கொண்டு கடல் கடந்தவர்கள் நம் முன்னோர்கள்.
அவர்கள் வெறும் வணிகத்திற்காக மட்டும் செல்லவில்லை; தங்களின் கலாசாரம் மற்றும் மொழியையும் அந்த மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக எகிப்தின் 'அரசர்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Kings) திகழ்கிறது.
எகிப்தின் லக்ஸர் (Luxor) பகுதியில் உள்ள புகழ்பெற்ற பார்வோன் மன்னர்களின் கல்லறைகள் உலக அதிசயங்களில் ஒன்று. அங்குள்ள பாறைகளில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் பல குறிப்புகள் உள்ளன. ஆனால், 2014-15 காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் அங்கு ஆய்வு செய்தபோது, எதிர்பாராத விதமாக சில பாறைகளில் 'தமிழ் பிராமி' எழுத்துக்களைக் கண்டு திகைத்தனர். அந்தப் பாறைகளில் ஒரு தமிழ் வணிகன், தனது வருகையை மிக அழகாகப் பதிவு செய்துள்ளான்.
இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பு குறித்த விரிவான ஆய்வு முடிவுகள், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கல்வெட்டியல் கருத்தரங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஸ்மித் ஆகியோர் தங்களின் ஆய்வறிக்கையை இம்மாநாட்டில் சமர்ப்பித்தனர்.
உலகளாவிய அறிஞர்கள் கூடியிருந்த அந்த மேடையில், எகிப்தின் அடர் மணற்பாங்கான பள்ளத்தாக்குகளில் கண்டறியப்பட்ட தமிழ் எழுத்துக்கள், தமிழர்களின் பழங்காலக் கடல்வழிப் பயணங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக அமைந்தது.
அங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் சுவாரஸ்யமான பெயர் 'சிகை கொற்றன்'. இவன் ஒரு சாதாரண மனிதன் அல்ல, பெரும் வணிகக் குழுவின் தலைவனாக இருந்திருக்க வேண்டும். 'சிகை' என்றால் குடுமி அல்லது தலைமுடி என்று பொருள்; 'கொற்றன்' என்பது சங்க காலத்தில் வெற்றியாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர்.
அங்குள்ள ஒரு கல்வெட்டில் "சிகை கொற்றன் வர கண்ட" என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, "சிகை கொற்றன் இங்கு வந்து பார்த்தான்" என்று பொருள். இன்று நாம் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றால் "நான் இங்கு வந்தேன்" என்று எழுதுவதைப் போல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழன் எகிப்தின் பிரமிடுகளைப் பார்த்து வியந்து தனது பெயரை அங்கு செதுக்கிச் சென்றுள்ளான்.
தமிழகத்தின் சேர நாட்டுத் துறைமுகங்களான முசிறி மற்றும் தொண்டி ஆகியவற்றிலிருந்து மிளகு, துணிகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களை ஏற்றிக்கொண்டு எகிப்தின் பெரினிகே துறைமுகத்திற்குத் தமிழ் வணிகர்கள் சென்றனர்.

அங்கிருந்து ஒட்டகங்கள் மூலம் பாலைவனத்தைக் கடந்து, நைல் நதிக்கரையில் உள்ள நகரங்களுக்குச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றபோதுதான், உலகப் புகழ்பெற்ற இந்த அரசர்களின் கல்லறைகளைப் பார்க்க சிகை கொற்றன் போன்ற வணிகர்கள் சென்றிருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த வரலாற்றுப் பயணத்தின் அடையாளமாகும்.
இதுவரை வரலாற்று ஆசிரியர்கள், மேலை நாட்டு வணிகர்கள் மட்டுமே இந்தியாவுக்கு வந்து சென்றதாகக் கருதி வந்தனர். ஆனால், எகிப்தின் மிக முக்கியமான மற்றும் புனிதமான இடமாகக் கருதப்பட்ட 'அரசர்களின் பள்ளத்தாக்கிற்குள்' தமிழர்கள் நுழைந்துள்ளார்கள் என்பது, தமிழர்களின் உலகளாவிய செல்வாக்கை நிரூபிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பண்டைய காலத்திலேயே தமிழர்கள் உலக வரைபடத்தில் எவ்வளவு வலுவான தடம் பதித்திருந்தார்கள் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.


















