போலீஸ் புகாருக்குப் பிறகும் தொடர்ந்த ஆபாச மெசேஜ்கள்; தொந்தரவு செய்தவரை தேடிப் பி...
சிற்பக்கலையில் 50 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு; பத்ம ஶ்ரீ விருது பெறும் ராஜா ஸ்தபதி!
தமிழ்ச்சிற்பக்கலைத் துறையில் கடந்த 51 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதிக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது. இளம் தலைமுறையினரின் பெரும் நம்பிக்கையாய் திகழும் இவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, பேசத் தொடங்கினேன்.


“சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சி கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். ஏழு பேர் கொண்ட எளிய விவசாய குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயதிலிருந்தே எனக்கு படிப்பின் மீதும் கலையின் மீதும் ஆர்வம் இருந்தது. அந்தக்காலத்தில் ‘ஓல்ட் எஸ்.எஸ்.எல்.சி’ என்றழைக்கப்பட்ட எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது, பெரும் நம்பிக்கையாக இருந்தது.
அதன்பின் ஓவியத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வம் சிற்பக்கலை பக்கம் திரும்பியது. 1973ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் கைவினைஞர்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) என்ற தனி வாரியத்தை அமைத்தார். அந்த வாரியத்தின் மூலம் மூன்று ஆண்டுகள் சிற்பக்கலையில் முறையாகப் பயிற்சி பெற்றேன்.

அதன்பின் மெல்ல மெல்ல திறமையை வளர்த்துக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதை வைத்து எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்படுவதற்காக 1980ல் ‘பாலமுருகன் உலோக சிற்பச்சாலை’ என்ற நிறுவனத்தை தொடங்கினேன். 45 ஆண்டுகளைக் கடந்து என் குருநாதர்கள் கற்றுத்தந்த விதியைக் கடைப்பிடித்து நடத்தி வருகிறேன்.
எந்தவிதமான சிற்ப பொருள்களைச் செய்வீர்கள்?
வீட்டு பூஜைக்கான சிறிய விக்ரகங்களிலிருந்து கோயில்களில் நிறுவப்படும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள், மிகப்பெரிய அளவிலான உலோகச் சிலைகள் வரை செய்வேன். ஒவ்வொரு விக்ரகமும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம், ஜீவன், நேத்திரம் போன்ற ஆன்மிகக் கூறுகளைப் பார்த்து, பாரம்பர்ய “லாஸ்ட் வேக்ஸ்” முறையில்தான் உருவாக்குவோம். இந்த முறையே எங்களுடைய சிலைகளுக்கு உயிரோட்டமும் தனித்துவமும் அளிக்கிறது.

தற்போது காமதேனு விக்ரகம் மற்றும் ஆலயம் உருவாக்கி வருகிறோம். அது சுமார் 7 அடி உயரம், 3½ டன் எடையுடன் கூடிய காமதேனு விக்ரகம், 16 அடி உயர கற்பக விருட்ச மரம் மற்றும் 6 அடி ஆதார பீடத்துடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மிகம் மற்றும் சிற்பக்கலை இரண்டையும் இணைக்கும் ஓர் அபூர்வ முயற்சி என்றே சொல்லலாம்.

என்னுடைய கலைச்சேவையை பாராட்டி அரசு பல்வேறு விருதுகளை எனக்கு கொடுத்திருக்கிறது. இந்திய அரசிடமிருந்து பத்ம ஸ்ரீ விருது பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" என மனம் நெகிழ்கிறார் ராஜா ஸ்தபதி.


















