செய்திகள் :

கோவை இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்: நோய் தீர்க்கும் சடாரி; வரம் தரும் சத்தியநாராயண பூஜை!

post image

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை.

ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். மேலும் பல கோயில்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார்.

அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் இடிகரை. கோவை மாவட்டம், துடியலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு நடுவே பெருமாள் கோயில் கொண்டிருப்பதுபோலவே இங்கும் இரு காட்டாறுகளுக்கு நடுவே பள்ளிக்கொண்டிருக்கிறார் பெருமாள் என்பது சிறப்பு. எனவே ‘இருகரை’ கொண்ட ஊர் என்று வழங்கப்பட்ட ஊரின் பெயர் நாளடைவில் மருவி இடிகரையாக மாறியது.

ரங்கநாதர்
ரங்கநாதர்

ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்தத் தலத்திலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். ஸ்ரீரங்கத்து ஆகமவிதிகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. உற்சவர் திருநாமம் ஸ்ரீகஸ்தூரிரங்கன். இவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார்.

இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராதாகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். ஆண்டாளுக்கு உகந்த ஆடிப்பூரத் திருவிழா இங்கு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரைப் போன்றே இத்தலத்திலும் ஆண்டாளுக்குத் தனித் திருத் தேர் அமைந்துள்ளது. பிற ஆழ்வார்களும் இங்கு விமானத்துடன் கூடிய சந்நிதியில் அருள்கிறார்கள்.

விஜய நகர மன்னரின் பிரதிநிதியான பெத்தப்ப நாயக்கரால் 36 கல் தூண்களைக் கொண்ட மஹா மண்டபமும் திருமதில்களும் இத்தலத்தில் கட்டப் பெற்றதாக கல்வெட்டு கூறுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வந்தால் கோயிலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாடக்கோயில் போன்ற அமைப்பில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பெருமாளின் பன்னிரு திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே ஏறும்படியாக பன்னிரண்டு படிகளைக் கொண்டது.

அடுத்து உயர்ந்த 3 நிலை ராஜ கோபுரம் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம். அடுத்து பெரிய திருவடி கருடன். சுவாமியை நோக்கி சேவை சாதிக்கும் கருடனை வழிபட்டு உள்ளே சென்றால் 36 தூண்களைக் கொண்ட மஹா மண்டபத்தில் பிரவேசிக்கலாம்.

ஜய விஜய துவார பாலகர்கள் கம்பீரமாய் வீற்றிருக்க அடுத்துள்ளது ரங்க மண்டபம். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது கருவறை. நம்மாழ்வார், பெரியாழ்வார் திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னிதிகள் உள்ளன.

ஸ்ரீராமாநுஜர்
ஸ்ரீராமாநுஜர்

கோயில் முகப்பு கலை நுணுக்கத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு மண்டபத்தின் மேல்புறம் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள் தேவியருடன் உள்ள சுதைச் சிற்பமாக எழிலுடன் காணப்படுகிறது.

ராஜகோபுரத்தின் இருபுறமும் தசாவதார சுதைச் சிற்பங்களை கலைநயத்துடன் வடித்துள்ளனர். கோயில் வாசல் எதிரே கொங்குநாட்டு வழக்கப்படி விளக்குத் தூண் மண்டபத்துடன் விளங்குகின்றது.

பெருமாள் சத்ய நாராயணர் திருக்கோலத்திலும் சந்நிதி கொண்டருளும் கோயில் இது. எனவே இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்ய நாராயண பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. பொதுவாக இந்தப் பூஜையின்போது சத்ய நாராயணர் ஓவியம் அல்லது படத்தை வைத்து வழிபடுவார்கள்.

இங்கு நேரடியாக சுவாமிக்கே செய்யப்படுவது விசேஷம். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், கடன் பிரச்னை தீரும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதிகம்.

இக்கோயிலில் வழங்கப்படும் சடாரி சேவை மிகவும் பவித்ரமானது. இந்தச் சடாரி, திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு ஆராதிக்கப்பட்டது என்கின்றனர் அடியவர்கள்.

ஆகவே, இந்தக் கோயிலின் சடாரி சேவை நோய் நொடிகளை நீக்கி ஆரோக்கியமும் சிறப்பான வாழ்வும் அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் அருளும் ஸ்ரீவிஷ்வக்சேனருக்கு தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால், தடைகள் நீங்கி தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பூதத்தாழ்வாரை வழிபட்டால், திருமணத்தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

நீங்களும் ஒருமுறை இருகரை என வழங்கப்படும் இடிகரைக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி கவலைகள் இல்லாத வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வீர்கள்.

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் ப... மேலும் பார்க்க

நாகை ஆயக்காரன்புலம் கலிதீர்த்த ஐயனார் கோயில்: வேண்டுதல் நிறைவேற்றும் கூத்து பிரார்த்தனை!

தமிழகத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று ஐய்யனார் வழிபாடு. ஐயனார் கோயில் இல்லாத ஊர் தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். எளிய மக்களின் தெய்வமாக தாய் தந்தையைப் போன்று தன் பக்தர்களைக் காக்கும் ஐயனாரை பக்த... மேலும் பார்க்க

தஞ்சை, தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில்: திருமண வரம் தரும்; கயிலாய தரிசனப் பலன்!

ஈசன் முனிவர்களும் தேவர்களும் வேண்டியதற்கு இணங்க திருநடனம் புரிந்து அருளினார். அவ்வாறு அவர் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கைகளில் இருந்த மணிகள் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள் எல்லாம் புனிதத்... மேலும் பார்க்க

மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!

சைவத்தில் சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுபவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்களில் காலத்தால் மூத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. திருவாசகத்துக்கு உருகார் ஒர... மேலும் பார்க்க

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்... பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நட... மேலும் பார்க்க